டெல்லி: செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி 5% ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ராஜஸ்தானில் இன்று நடந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார் நிர்மலா சீதாராமன். ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. கடந்த செப்டம்பரில் டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான விவகாரங்களை முழுமையாக ஆராய்வதற்கு, பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் 13 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்தும், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், காலணிகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது உள்பட சுமார் 148 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை மாற்றியமைப்பது, ஜிஎஸ்டி வரம்புக்குள் விமான எரிபொருளை கொண்டுவருவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவக் காப்பீடு தொடர்பாக எந்த முடியும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும், பல்வேறு பொருட்களின் வரி உயர்வு குறித்து தவறான செய்திகளை ஊடகங்கள் ஒளிபரப்ப வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உயிர் காக்கும் நோய்களுக்கு மிகவும் முக்கியமான ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும், மிளகு, உலர் மிளகு, உலர் திராட்சைகளை விவசாயிகள் விற்பனை செய்தால் ஜிஎஸ்டி இல்லை என்றும், வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும்போது அவற்றுக்கு வரி உண்டு என்றும் தெரிவித்துள்ளார். செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு தவணைகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவது தொடர்பாக இன்று நடந்த GST கவுன்சிலில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, ஜனவரி மாதம் கூடி விவாதித்து ஒருமித்த கருத்தை எட்டிய பின்னரே இதில் முடிவு எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.