இடுப்பளவு வெள்ளம் இருந்தாலும் கடுப்பாக மாட்டோம்! நமக்கு ’தண்ணி’ தான் முக்கியம்! முதலை வேற வருமாமே!

post-img
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால், சிதம்பரம் அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையை வெள்ள நீர் சூழ்ந்த போதிலும், இடுப்பளவு வெள்ளம் இருந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு 'சரக்கு’ தான் முக்கியம் என ரிஸ்க் எடுக்கின்றனர் குடிகாரர்கள். மேலும், தண்ணிரில் முதலை வேற வந்துடுமோன்னு பயமா இருக்கு என குமுறுகின்றனர் குடிமகன்கள்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெஞ்சல் புயல் அதற்குப் பிறகு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என்ற பாகுபாடு இன்றி கன மழை பெய்து வருகிறது. புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயலின் போதும். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிய போதும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெண்ணடம், சிதம்பரம், வடகரை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வீடுகள் மற்றும் தெருக்கள் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சிதம்பரம் அருகே டாஸ்மாக் அரசு மதுபான கடையை மழை நீர் சூழ்ந்த போதும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வெள்ளத்தில் மது வாங்கி செல்கின்றனர் மது பிரியர்கள். தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், வீராணம் ஏரிக்கு 18,068 கன அடி வந்தது. இந்த நிலையில் வெள்ளையங்கால் ஓடை வழியாக 16856 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் விளைவாக கிராமங்களில் தண்ணீர் புகுந்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மார்க் தாழ்வான பகுதியாக உள்ளதால் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் அங்கு முட்டி அளவு உள்ள தண்ணீரில் கடந்து சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் அச்சத்துடன் நடந்து சென்று மதுபானங்களை வாங்கி வருவதாக தெரிவிக்கும் அவர்கள் டாஸ்மாக் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மதுக் கடையை மேடான பகுதிக்கு மாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Post