சென்னை: பாமகவை கூட்டணிக்குள் இழுக்க பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி முயன்று வருகிறதாம். பாமக கேட்கும் தொகுதிகளை வழங்க அதிமுக சம்மதம். பிரதமர் கூட்டத்தில் அன்புமணியை பங்கேற்கவைக்க பாஜக தீவிரம் என்று இரண்டு பக்கமும் கடுமையான போட்டி நிலவுகிறதாம்.
அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை.
அன்புமணியிடம் பேசுங்கள். நீங்கள் விரும்பும் தொகுதியை கண்டிப்பாக கொடுக்கிறோம் என்று அதிமுக சார்பாக பேசப்பட்டு வருகிறதாம்.
அன்புமணி பாஜக பேச்சு: இன்னொரு பக்கம் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறாராம். கிட்டத்தட்ட அடம் பிடிக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. அதன் மூலம் லோக்சபா தேர்தலில் நாமும் வென்று அமைச்சர் ஆகலாம் என்று அன்புமணி நினைக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.
அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக பாஜகவிடம் அன்புமணி கோரிக்கை வைத்து உள்ளாராம்..
கூட்டணி நிலவரம்: சரி பாஜக-பாமக கூட்டணி எந்தளவில் இருக்கிறது என விசாரித்தபோது, எண்ணிக்கை முடிவாகி விட்டது ; தொகுதிகள் அடையாளப்படுத்துவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அனேகமாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும் என்கிறார்கள் பாமகவினர்.
பாமகவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை: அமைச்சர் பதவியும் இல்லை. இல்லை என்பது தற்காலிகம்தான். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமைச்சரவை பற்றி மீண்டும் விவாதிக்கலாம். இப்போதே அதற்கான கண்டிசனை போடாதீர்கள். ஒருவேளை ராஜ்யசபா சீட் மற்றும் அமைச்சர் பதவி வேண்டுமானால், 4 லோக்சபா சீட்டுகளுக்கு ஒப்புக் கொள்கிறீர்களா? என்று பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சொல்லியிருக்கிறார்.
அப்போது, கட்சியின் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள 8 சதவீத வாக்குகள் அல்லது 2 எம்.பி.க்கள் அல்லது 6 எம்.எல்.ஏ.க்கள் ஜெயிக்க வேண்டும். தற்போதைய சூழலில், 6 எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் இல்லை. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் 2 எம்பி அல்லது 8 சதவீத வாக்குகள் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தான் கட்சி அங்கீகராத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். சின்னத்தையும் காப்பாற்ற முடியும்.
அதனால்தான் அதிக இடங்களில் போட்டியிட ஆசைப்படுகிறோம். அதனால் 10 லோக்சபா தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று அன்புமணி தெளிவுப்படுத்தியிருக்கிறார். இதனை பாஜக தலைமைக்கு தெரியப்படுத்தப்பட , இந்த டீலீங்கிற்கு ஓ.கே. சொல்லியிருக்கிறது. அதனால், 10 லோக்சபா சீட் பாமகவுக்கு ஒதுக்கப்படும். இதைத்தவிர பாமகவின் வேறு விருப்பங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது என்கிறார்கள் பாஜக பேச்சு வார்த்தை குழுவுக்கு நெருக்கமானவர்கள்.
கோரிக்கை - டீல்: இதில் அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 4 லோக்சபா சீட் என்று பாமக கேட்டுள்ளதாம்.
இதையடுத்து பாமக இறங்கி வந்து 10 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம். இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.