காங்கிரஸ் அரசுக்கு இஸ்ரோ மீது நம்பிக்கை இருந்ததே இல்லை..

post-img

டெல்லி: இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு இஸ்ரோ மீது நம்பிக்கை இருந்தது இல்லை என்று பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இஸ்ரோ இப்போது சந்திரயான் 3 மிஷனை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சந்திரயான் 3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற மகத்தான ஒரு சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.


இதற்காக இஸ்ரோவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் இது தொடர்பாக இப்போது கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது.


நம்பி நாராயணன்: முந்தைய காங்கிரஸ் அரசுக்கு இஸ்ரோ மீது நம்பிக்கை இருந்தது இல்லை என்று தெரிவித்த விஞ்ஞானி நம்பி நாராயணன், இதன் காரணமாகவே அப்போதைய அரசு இஸ்ரோ அமைப்புக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என்று அவர் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இஸ்ரோவின் ஆரம்ப நாட்கள் குறித்து நம்பி நாராயணன் பேசும் இந்த வீடியோ தான் இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவை பாஜகவும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.


இஸ்ரோவால் சாதனைகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகே, அப்போதைய அரசு நிதியை ஒதுக்கியதாகவும் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அப்போது எங்களிடம் கார் இல்லை ஜீப் கூட இல்லை. அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் கூட போதுமானதாக இல்லை.. ஆரம்பத்தில் இப்படி தான் அங்கே நிலை இருந்தது.


உலகமே வியக்கும் சந்திரயான்-3.. மறுநாளே சத்தமின்றி அடுத்த மிஷனுக்கு வேலையை தொடங்கிய இஸ்ரோ! அட சூப்பர்
நம்பிக்கை இல்லை: அப்போது எங்களால் இவ்வளவு பட்ஜெட் தேவை என்று கேட்கக் கூட முடியாத நிலை தான் இருந்தது.. அவர்களாக முடிவெடுத்துக் கொடுப்பதை வைத்துத் தான் நாங்கள் பணிகளைச் செய்ய வேண்டி இருந்தது. இது மிகப் பெரிய குற்றச்சாட்டாக நான் சொல்ல மாட்டேன்.. ஆனால் அவர்கள் (அப்போதைய அரசு) எங்கள் மீது (இஸ்ரோ) எந்த நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.


சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைப் பிரதமர் மோடி தனதாக்கிக் கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாகப் பதிலளித்த நம்பி நாராயணன், "சந்திரயான்-3 போன்ற தேசிய திட்டத்தில் பிரதமருக்குத் தான் பெருமை செல்லாமல் வேறு யாருக்குத் தான் பெருமை செல்லும். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.. உங்களுக்குப் பிரதமரைப் பிடிக்காமல் இருப்பதே இதற்குக் காரணம். வேறு எதுவும் இல்லை" என்றார்.


சம்பள பிரச்சினை: தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் தரப்படுவதில்லை என்று எழுந்த புகார் குறித்து அவர் கூறுகையில், "சம்பளமாக இருந்தாலும் சரி ஓய்வூதியமாக இருந்தாலும் சரி மாதந்தோறும் சரியாக 29ம் தேதி வந்துவிடும். அதில் ஒரு நாளும் தாமதம் இருந்ததே இல்லை" என்று அவர் கூறுகிறார்.


இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், பாஜகவும் இப்போது இந்த வீடியோவை கையில் எடுத்துள்ளது. பாஜக தலைவர் அமித் மாளவியா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.. மேலும், இப்போது பிரதமர் மோடி இந்தியாவின் விண்வெளிப் பயணங்களுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்குவதை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


பாஜக: இது குறித்து அமித் மாளவியா தனது ட்விட்டரில், "அன்றிலிருந்து இன்று வரை... இஸ்ரோவுக்கு உரிய நிதி செல்வதைப் பிரதமர் மோடி உறுதி செய்து வருகிறார். வெற்றியோ தோல்வியோ பிரதமர் மோடி என்றென்றும் நமது விஞ்ஞானிகளுடன் துணை நின்றுள்ளார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


​​கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், அந்த புகழைப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்டதாகக் காங்கிரஸ் விமர்சித்தது. காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் இது குறித்துக் கூறுகையில், "சந்திரயான் 3 இறங்கியதும்.. பிரதமர் மோடி திரையில் தோன்றி தேசியக் கொடியைக் காட்டுகிறார்.. விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோவுக்கும் ஆதரவளிப்பதில் இந்த அரசு மோசமாகத் தோல்வி அடைந்ததையே இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Post