கிரெடிட் கார்டுகள்.. தப்பி தவறி கூட "இவங்க" எல்லாம் வாங்க கூடாது.! ஆனந்த் சீனிவாசன் தந்த எச்சரிக்கை

post-img
சென்னை: நமது நாட்டில் இப்போது பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் கிரெடிட் கார்டுகளை வாங்குகிறார்கள். ஆனால், அதில் இருக்கும் ஆபத்து அவர்களுக்குத் தெரிவதே இல்லை. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் கிரெடிட் கார்டு குறித்தும் அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கியிருக்கிறார். இந்த காலத்தில் ஓரளவுக்குச் சம்பாதிக்கத் தொடங்கினாலேயே கிரெடிட் கார்டு வேண்டுமா சார்னு நிச்சயம் யாராவது உங்களைத் தொடர்பு கொண்டு கேட்க ஆரம்பித்துவிடுவார். கிரெடிட் கார்டு: நீங்களும் சரி ஃப்ரீ தானே எனச் சொல்லி வாங்கிவிட்டால்.. அவ்வளவுதான்! கிரெடிட் கார்டை அளவாகப் பயன்படுத்துவது ரொம்பவே கடினம்.. ஒரு முறை சிக்கிக் கொண்டாலே அதன் வட்டி சுழற்சியில் இருந்து மீளவே முடியாது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் கிரெடிட் கார்டு குறித்தும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் விளக்கியுள்ளார். இது தொடர்பாக கிரெடிட் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில், "போரூரில் இருக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவர் கிரெடிட் கார்டு வாங்கி கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார். நான் இது குறித்துப் பல முறை பேசி இருக்கிறேன். நமது சமுதாயம் இந்தளவுக்கு வளர்ந்த பிறகும் கிரெடிட் கார்டு கடனுக்காக ஒரு உயிர் போய் இருக்கிறது என்பதை நினைத்தாலே அசிங்கமாக இருக்கிறது. ஆனந்த் சீனிவாசன்: முதலில் ஒரு டிவியை வாங்கியுள்ளார். அப்போது முதலில் கிரெடிட் கார்டு வாங்கியிருக்கிறார். அப்படியே அவருக்கு 3 வங்கிகள் கிரெடிட் கார்டுகளை கொடுத்துள்ளன. 3 லட்ச ரூபாய் மட்டுமே மட்டுமே கட்டி இருக்கிறார். கிரெடிட் கார்டு ரூல்ஸ் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரிவதில்லை கூட்டு வட்டியும் போடப்படுவதால் நிலைமை மோசமாகி இருக்கிறது. ரிசர்வ் வங்கி பல முறை சொல்லியும்.. இவருக்கு வங்கிகள் தொடர்ச்சியாகத் தினசரி கால் செய்து டார்ச்சர் செய்து இருக்கிறது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். பெட்ரோல் பேங்க், சாலையில் நின்று கொண்டு விற்கிறது என்று வங்கிகள் எல்லை மீறுகிறார்கள். பொருளாதாரத்தில் எளிதாகப் பாதிக்கப்படும் நபர்களுக்கு கிரெடிட் கார்டு கொடுக்கிறார்கள். இதில் ஆட்டோ டிரைவருக்கு 3 வங்கிகள் கார்டுகளை கொடுத்துள்ளனர். எச்சரிக்கை: கிரெடிட் கார்டு எல்லாம் கண்டிப்பாகத் தேவை என்று போலியாக ஒரு தேவையை உருவாக்குகிறார்கள். ஆனால், அதில் இருக்கும் பிரச்சினை குறித்து விளக்குவதில்லை. மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கும் நபருக்கு 3 லட்சம் வரை லிமிட் இருக்கும் கார்டு இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி! இந்த ஆட்டோ டிரைவர் 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருக்கிறார். அவருக்கு கிரெடிட் கார்டு ரூல்ஸ் புரியவில்லை.. எப்படி கூட்டு வட்டி போடுகிறார்கள் என்பது கூட புரியவில்லை. படித்த பலரே இதுபோல கிரெடிட் கார்டு வம்பில் போய் சிக்கிக் கொள்கிறார்கள். அப்படியிருக்கும் போது இதுபோன்ற ஆட்களுக்கு இவ்வளவு கடனை எப்படித் தரலாம். போலீசாரும் கூட இதுபோல நிறைய கேஸ் வருவதாக சொல்கிறார்கள். நாம் தான் கிரெடிட் கார்டுகளில் கடன் வாங்காமல் இருக்க வேண்டும். ஏமாற வேண்டாம்: மக்களுக்கு ரிவார்ட், ஏர்போர்ட்டில் லாவுஞ்ச் ஆக்செஸ் என எது, இது எனச் சொல்லிக் கவர்கிறார்கள். பிறகு அதிக வட்டி போடுகிறார்கள். எனவே, இதில் ஏமாற வேண்டாம். கிரெடிட் கார்டு வாங்கியவர்களால் திரும்பத் தர முடியவில்லை என்றால் அதை வாராக்கடனாக அறிவித்துவிட்டுத் திரும்ப வசூல் செய்து கொள்ளலாம். ஆனால், மத்திய அரசு அதைச் செய்ய மறுக்கிறது. தொழிலதிபர்களுக்கு 10.61 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது" என்றார்.

Related Post