சென்னை: ‛‛சினிமாவில் தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியில் ஒருவர் (விஜய்) கட்சி ஆரம்பித்துள்ளார் என்றால் அந்த கட்சி (தவெக) உருப்படுமா? வெளிப்படையாக சொல்கிறேன். அவர் மக்களுக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. கலை உலகில் இருந்து மைனஸ் ஆனதால் அவர்(மறைமுகமாக விஜய்) இங்கு வந்துள்ளார்'' என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நேற்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் விஜய் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூலை வெளியிட்டார். விஜயிடம் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இதில் நடிகர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுகவின் பெயரை கூறாமல் அவர் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
விஜய் பேசும்போது, "சமூக நீதி பேசும் இங்கு இருக்கும் அரசு, வேங்கைவயல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததுபோலவே எனக்கு தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கடந்தும் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களை நம்பி இருமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள். மக்களே மைனஸாக்கி விடுவார்கள்'' என்றார்.
மேலும், ‛‛இந்த விழாவில் பங்கேற்காமல் இருக்க திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எங்கிருந்தாலும் அவரது மனது இங்கு தான் இருக்கும்'' என்றும் விஜய் பேசினார். இதன்மூலம் திமுகவின் பெயரை கூறாமல் நடிகர் விஜய் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். அதேபோல் திருமாவளவனை விழாவில் பங்கேற்க விடாமல் திமுக அழுத்தம் கொடுத்ததாக பெயரை குறிப்பிடாமல் சாடியிருந்தார். நடிகர் விஜயின் இந்த பேச்சு தமிழக அரசிலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திருமாவளவன், திமுக தலைவர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பங்கேற்று பேசினார். அப்போது விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை குறிப்பிடாமல் அவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக ஆர்எஸ் பாரதி கூறுகையில், ‛‛இந்த இயக்கத்தின் வரலாறு தெரியாமல் நேற்று முளைத்தவன் எல்லாம் சவால் விடுகிறான். ஆனால் ஒன்று இந்த கட்சியை எதிர்த்தவன் அல்லது எதிர்க்க நினைத்தவன் மண்ணோடு மண்ணாகி போய் இருக்கிறான் என்பது வரலாறு. நான் சாபம் விடவில்லை. வரலாற்றை சொல்கிறேன். ஏதோ புது துடைப்பம் நன்கு பெருக்கும் என்றும் சொல்வார்கள். புதிய துடைப்பம் கொஞ்சம் நாளில் தேய்ந்து விடும்.
நேற்று ஒருவர் அதிகமாக பேசுகிறார். மன்னராட்சி என்று எல்லாம் பேசுயிருக்கிறார். இது குடியரசு நாடு. தேர்தலில் நின்று 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுப்போட்டு ஒருவரை தேர்வு செய்து மெஜாரிட்டியுடன் வரும் ஒரு கட்சி தான் நாட்டை ஆள வேண்டும் என்பது சட்டம். இது கூட தெரியாமல் சில முட்டாப்பயல்கள் பேசுகிறார்கள் என்றால் நான் என்ன சொல்வது. இது அடிப்படை. ஆக, அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தான் நம்மை ஆளுகிற முதல்வர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினாக இருந்தாலும் சரி. மக்கள் மத்தியில் சென்று மெஜாரிட்டி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்று இருக்கும் வயிற்றெரிச்சல் என்னவென்று கேட்டால் திராவிடம்.. திராவிடம்.. என்ற சொல்.. எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. இதை தாங்கி கொள்ள முடியாத கூட்டம் சினிமாவில் தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியில் ஒருவர் கட்சி ஆரம்பித்துள்ளார் என்றால் அந்த கட்சி உருப்படுமா? வெளிப்படையாக சொல்கிறேன். மக்களுக்காக அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை'' என்று விஜயை சாடியிருந்தார்.
அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆர்எஸ் பாரதி வெளியே வந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் விஜய் பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: ‛‛எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கூட்டணியை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. கலை உலகில் இருந்து மைனஸ் ஆனதால் அவர்(மறைமுகமாக விஜய்) இங்கு வந்துள்ளார். திமுகவின் கூட்டணி கணக்கு என்றும் மைனஸ் ஆகாது. அப்படி சொன்னவர் தான் மைனஸ் ஆவார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிக்கும்'' என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage