இன்று வருகிறது மெகா அறிவிப்பு.. உயர் அதிகாரிகளை அழைக்கும் ஸ்டாலின்

post-img

சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை மழை பெய்யவில்லை. அதேபோல் மழைக்காலம் தொடங்கியும் பெரிதாக மழை இல்லை., முக்கியமாக ஆகஸ்ட் மாதம் டெல்டா மாவட்டங்களில் பெய்ய வேண்டிய மழை இல்லை. இதனால் விவசாயம் செய்வது கடினம் ஆகி உள்ளது.
இன்னொரு பக்கம் தமிழ்நாடு மழை மட்டுமின்றி கர்நாடகாவிலும் பெரிதாக மழை பெய்யவில்லை. நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பொழிந்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகள் நிரம்பவில்லை.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவில் இருந்து போதிய நீர் திறந்தும் விடப்படவில்லை. காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராட வேண்டியதாக இருக்கிறது. இந்த முறையும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை.
இதனால் டெல்டா விவசாயிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் கடுமையாக சிரமப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த முறை போதிய விளைச்சல் இருக்காது என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தற்போது ஆகஸ்ட் மாதம் முடிய இருக்கிறது. இருப்பினும் இந்த மாதத்திற்கான 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா இன்னும் வழங்கவில்லை.
உச்சநீதிமன்றம் சொல்லியும் கர்நாடக அரசு தண்ணீர் கொடுக்கவில்லை. அதேபோல காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படியும் கர்நாடகா நடந்துக்கொள்ளவில்லை என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு வரும் 21ம் தேதி விசாரணை செய்யப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அடங்கிய புதிய அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இன்னொரு பக்கம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு, விநாடிக்கு 7,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. ஆனால், 5,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக சரிவு.. ஏமாற்றிய பருவமழை.. கவலையில் காவிரி டெல்டா விவசாயிகள்
ஸ்டாலின் ஆலோசனை: இந்த நிலையில்தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் பிரச்சனை குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருக்கிறார். காவிரி வழக்குகளை உடனே விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறிய நிலையில், காவிரி வழக்குகள் மீது செப்.21-ல் விசாரணை செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் அதுவரை தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை தீர வாய்ப்பு இல்லை. எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கலாமா என்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். இதில் எடுக்கப்படும் முடிவுகள் இன்று வெளியிடப்படலாம்.
அதேபோல் விவசாயிகளுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கான அறிவிப்பும் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Post