மதுரை: திருமண மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு, ஆண்கள் கைதாகி கொண்டிருந்த நிலைமை மாறி, இன்று சில பெண்கள் பிரதானமாக கைதாகி வருகிறார்கள்.. சமீப காலமாகவே இப்படியான கைது நடவடிக்கைகள் தமிழக மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது. இப்போது மதுரையிலும் 3 பெண்கள் கும்பலாக சிக்கியிருக்கிறார்கள்.
உசிலம்பட்டி அருகே உள்ளது பூதிப்புரம்.. இங்கு வசித்து வரும் பெருமாயி, தன்னுடைய 30 வயது மகன் முருகனுக்கு திருமணம் செய்வதற்காக, பெண் தேடியுள்ளார். அப்போது, பொள்ளாச்சியை சேர்ந்த விஜயா என்பவர் தன்னை புரோக்கர் என்று சொல்லி பெருமாயிக்கு அறிமுகமாகியிருக்கிறார்.. அத்துடன், தன்னுடன் ஒரு இளம்பெண்ணையும், அவருடைய பெற்றோரையும் அழைத்து வந்து, திருமண பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
மணப்பெண்: இறுதியில், முருகனுக்கும் அந்த பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் 25ம் தேதி பூதிப்புரத்தில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. மணப்பெண்ணுக்கு வழக்கமான புத்திமதிகளை சொல்லி, முருகன் வீட்டில் விட்டுவிட்டு, அவரது உறவினர்கள், மதுரையிலிருந்து பொள்ளாச்சிக்கு கிளம்பி சென்றுவிட்டனர். அதேபோல புரோக்கர் விஜயாவும், 1.80 லட்சம் திருமண கமிஷன் பெற்றுக்கொண்டு பொள்ளாச்சி சென்றுவிட்டார்.
ஆனால், மணப்பெண்ணின் தங்கை மட்டும், முருகன் வீட்டிலேயே இருந்துள்ளார்.. பிறகு திடீரென தானும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொன்னதால், மணப்பெண், முருகன் உள்ளிட்டோர் காரில் திண்டுக்கல் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் ஏற்றிவிட அழைத்து சென்றிருக்கிறார்கள்.
வத்தலகுண்டு: ஆனால், வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்டில் இறங்கியதுமே, மணப்பெண்ணும், தங்கையுடன் திடீரென மாயமானார்கள்.. இதனால் முருகன் குடும்பத்தினர் பதறிப்போனார்கள்.. பஸ் முழுக்க அக்கா, தங்கையை தேடினார்கள்.. எங்குமே கிடைக்காதால், புரோக்கர் விஜயாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள்.
ஆனால் விஜயா இதைக்கேட்டு பதறவில்லை. மணப்பெண் வேறு ஒருவரை காதலித்து வந்தார். ஒருவே அவருடன் ஓடிப்போயிருக்கலாம்.. நீ கவலைப்படாதே, உனக்கு வேறு பெண்ணை பார்க்கிறேன் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்துள்ளார்..
கமிஷன்கள்: அதன்படியே, கடந்த மாதம் தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த காளீஸ்வரி (52) என்ற புரோக்கர் வாயிலாக, இன்னொரு பெண்ணை அழைத்து வந்தார் விஜயா.. முருகனிடம் பேசி சம்மதம் கிடைத்ததுமே, இந்த 2வது திருமணம் நடந்தது.. இதற்காக காளீஸ்வரிக்கு ரூ.80 ஆயிரம் கமிஷனும் பெற்று தந்தார் விஜயா.
திருமணம் முடிந்த தினத்தன்று, தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி, முதலிரவை தவிர்த்தாராம் புதுமணப்பெண்.. ஆனால், மறுநாள் காலையில் இந்த பெண்ணும் மாயமானார். மறுபடியும் விஜயாவுக்கு போன் செய்து கதறினார் முருகன்.. மறுபடியும் விஜயா, விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த அருணாதேவி (38) என்ற பெண்ணை 3வதாக முருகனுக்கு திருமணம் செய்வதற்காக அழைத்து வந்தார். ஆனால், அந்த பெண்ணுக்கு, முருகனை விட வயது அதிகமாம்.
வயது அதிகம்: அதற்கு விஜயா, ஆமாம், முருகனை விட வயது அதிகம்தான்.. அந்த பெண் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர், முருகனுக்கும் 2 முறை திருமணம் நடந்துவிட்டது. இதைவிட்டால் வேற பெண் கிடைக்காது, இந்த திருமணத்தை நடத்திவிடுங்கள், இதற்காக கமிஷனாக ரூ.1 லட்சம் தந்துவிடுங்கள் என்று கேட்டாராம்.
இதனால சந்தேகமடைந்த முருகனின் அப்பா பெருமாயி, உசிலம்பட்டி போலீசுக்கு சென்று புகார் அளித்தார்... இதையடுத்து, விஜயா, காளீஸ்வரி, அருணாதேவி இவர்கள் மூவரையும், நைசாக பேசி பூதிப்புரம் வரவழைக்குமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். அதன்படியே பெருமாயி, அவர்கள் 3 பேரையும் தொடர்பு கொண்டு பூதிப்புரம் வரவழைத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் அவர்கள் 3 பேரையுமே மடக்கி பிடித்து விசாரித்தனர்.
3 பேர் சிக்கினர்: இறுதியில், இவர்கள் 3 பேருமே , போலி திருமணங்களை நடத்திவைத்து புரோக்கர் கமிஷன் பெறும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.. இப்படி பலபேரிடம் பண மோசடி செய்திருப்பது அம்பலமானது.
இதையடுத்து மோசடி வழக்குப்பதிந்து விஜயா, காளீஸ்வரி, அருணாதேவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதுடன், இந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களையும் தேடி வருகின்றனர். ஒரே இளைஞருக்கு அடுத்தடுத்து 2 பெண்களை திருமணம் செய்து அவரது குடும்பத்தினரிடம் பணம் பறித்த 3 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை தந்து வருகிறது.