திருநெல்வேலி: தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த ஒருவாரமாக ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்து வந்த ஆட்கொல்லி அரிக்கொம்பன் யானை இன்று பிடிபட்டது. இந்த யானையை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கடும் எதரிப்பு தெரிவித்துள்ள நிலையில் மதுரை நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கிராமங்களில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை சுற்றி வந்தது. கடந்த 5 ஆண்டில் மட்டும் இந்த யானை 8 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. மேலும் விளைநிலங்களில் நுழைந்து விவசாய பயிர்களையும் நாசம் செய்து வந்தது.
இந்நிலையில் தான் அரிக்கொம்பன் யானை தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது. அதாவது தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் இந்த யானை புகுந்து பொதுமக்களையும் விரட்ட தொடங்கியது. கேரளாவில் இருந்து கடந்த மாதம் 3ம் தேதி தமிழ்நாடு வனத்துக்குள் நுழைந்த அரிக்கொம்பன் கடந்த மாதம் 6ம் தேதி மணலாறில் சுற்றியது. கடந்த மாதம் 26ம் தேதி மேகமலையிலும், 27 ம் தேதி சுருளியிலும், 29ம் தேதி கம்பத்துக்குள்ளும் நுழைந்து அட்டூழியம் செய்தது.
வனத்துறையினர் இந்த யானையை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அது சக்சஸ் ஆகவில்லை. இதற்கிடையே தேனி மாவட்டம் கம்பம் நகரில் அரிக்கொம்பன் யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் பலியானார். அரிக்கொம்பன் யானையானது கவுண்டன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணையில் முகாமிட்டிருந்து. இதையடுத்து அரிக்கொம்பனை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டது.
சுயம்பு, உதயன், அரிசி ராஜா என்ற முத்து என 3 கும்கிகள் அரிக்கொம்பனை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் கம்பம் அருகே சண்முகா அணையில் அரிக்கொம்பன் முகாமிட்டு இருந்த மயக்கஊசிகள் செலுத்தி ஒருவாரத்துக்கு பிறகு வனத்துறையினர் பிடித்தனர். அதன்பிறகு கும்கி யானைகள் உதவியுடன் அரிக்கொம்பன் லாரியில் லாரியில் ஏற்றினர். இதற்கிடையே தான் அரிக்கொம்பன் யானையை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அரிக்கொம்பன் யானை லாரியில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு இன்று மாலையில் கொண்டு வரப்பட்டது. களக்காடு வனத்துறை கோட்டத்துக்கு உட்பட்ட முத்துக்குளி என்ற இடத்தில் யானையை விட முடிவு செய்யப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த யானையை இங்கு விடக்கூடாது. கேரளாவிலேயே விட வேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முத்துக்குளி என்பது மணிமுத்தாறு சோதனை சாவடியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதற்கிடையே தான் மணிமுத்தாறு சோதனை சாவடி அருகே மக்கள் போராட்டம் நடத்தலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் யானையை விட எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு சோதனையை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து மணிமுத்தாறு சோதனை சாவடியை மூடி வனத்துறையினர் சீல் வைத்து யானையை அழைத்து சென்றனர்.
அரிக்கொம்பன் யானை விடப்படும் முத்துக்குளி என்ற இடத்தில் இருந்து கேரளா வன எல்லை 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கிடையே தான் கேரளா வனத்தில் யானையை விட வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர். ஆனால் வனத்துறை கேட்கவில்லை. இந்நிலையில் தான் களக்காடு வனத்துறை கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் அரிக்கொம்பனை விட எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.