சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தோல்வி மனதளவில் மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்திவிட்டது என மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த கடைசி பேட்டி ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் திடீர் மறைவு திமுக கூட்டணிக் கட்சியைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னதான் இவருக்குப் பெரியார் அரசியல் பின்புலம் இருந்தாலும் இளங்கோவன் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகராக இருந்து அரசியல் களத்திற்கு வந்தவர். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி ஜானகியை சிவாஜி கணேசன் ஆதரித்த போது அவருடன் நின்றவர் இந்த இளங்கோவன். அவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில் தன்னைப் பற்றிய ஒரு பேட்டியில், தான் பப் மற்றும் டிஸ்கோ டான்ஸ் விடுதிக்குப் போனவன் என்றும் இளம் வயதில் அரசியல் மீது எல்லாம் ஆர்வம் இருந்தது இல்லை என்றும் வெளிப்படையாக அவர் கொடுத்த பேட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அவர் மறைந்த பிறகு இப்போது அவர் ஜெயலலிதாவை எதிர்த்தது கருணாநிதியைச் சாதி ரீதியாக விமர்சித்தது எனப் பல விசயங்களைச் சுட்டிக்காட்டி அவரை தைரியமானவர் எனச் சிலர் கூறிவருகின்றனர். ஆனால், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மீது இவர் வைத்த விமர்சனத்திற்காகப் பொதுக்குழு கூடிக் கண்டன தீர்மானமே போட்டது. சமீபத்தில் கூட விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டிய தேவையே இல்லை. அவரது கட்சியின் கொள்கைகள் குழப்பமாக உள்ளன. கட்சிக் கொடியில் இரண்டு யானைகள் ஏன் காலை தூக்கிக்கொண்டு நிற்கின்றன? என்று இரட்டை அர்த்தத்தில் விமர்சித்திருந்தார்.
சீமான் அரசியல் மீது அவர் தொடர்ந்து பல விமர்சனங்களை வைத்தார். ஆனால், அவரது மறைவை ஒட்டி சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மறைந்த போது அவரைப் பற்றி சீமான் கூறிய செய்தி வைரலாக மாறியது.
இளங்கோவன் 2019 மக்களவைத் தேர்தலில் தேனியில் நின்று தோல்வியை தழுவினார். அப்போது பாண்டிச்சேரி திமுக 40 தொகுதிகளில் 39 இடங்களை வென்றிருந்தது. 1984இல் சத்தியமங்கலம் நின்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் முதன்முதலாகச் சட்டமன்றத்திற்குள் செல்லும் வாய்ப்பை பெற்றார். இறுதியாக 2023இல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அவரது மகன் மறைவை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களம் இறங்கி வெற்றிபெற்றார்.
இந்நிலையில் தான் அவர் அளித்த கடைசி பேட்டி ஒன்று இணைய தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் இளங்கோவன், “நான் இருக்கின்றவரை உண்மைக்காகப் போராடுவேன். உண்மைகளை வெளிப்படையாகச் சொல்வேன். என் மனதில் எது சரி எனப் பட்டதைத் தயங்காமல் சொல்வேன்” என்று பேசியுள்ளார்.
மேலும், “தேனி தேர்தலில் நான் தோற்ற பிறகே என் மனநிலையில் ஒரு சோர்வு ஏற்பட்டுவிட்டது. அங்கே நான் தோற்றதற்குப் பல காரணங்கள் உண்டு. அங்கே பணம் விளையாடியது. என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் மூன்று ஆண்டுகள் முன்னதாகவே அங்கே தொகுதியில் உள்ள கோயில்களுக்கு நிறைய நன்கொடைகள் கொடுத்து பல வேலைகளைச் செய்து வைத்திருந்தார். எது எப்படி இருந்தாலும் பாண்டிச்சேரியைச் சேர்த்து 39 திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி போது நான் ஒருவன் மட்டும் தோல்வியடைந்தது எனக்குப் பெரிய அளவில் சங்கடத்தைக் கொடுத்தது.
என்னதான் நான் பல காரணங்கள் சொன்னாலும் நான் தோற்றது தோற்றதுதான். அதை மூடி மறைக்க முடியாது. அந்தத் தோல்வியிலிருந்து வெளியே வருவதற்கே 3 வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பின் என் மகன் சட்டமன்ற உறுப்பினராக அரசியலில் தொடர்வார் என நம்பினேன். அவன் இறந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இடைத்தேர்தலில் நான் நிற்க வேண்டும் எனக் கனவில் கூட நினைக்கவில்லை. திமுக என்னை நிற்கச் சொன்னது. அதனால் நின்றேன். எனக்குத் தெரியும் என் மகனைப் போலச் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. வயதாகி விட்டது. எனவே தயங்கினேன். என் வெற்றிக்குக் காரணம் ஸ்டாலின் தான்” என்று பேசி இருந்தார்.