சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பதில் கொடுத்துள்ளது. மேலும் வழக்கறிஞர் மூலம் மின்னஞ்சலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதில் அளித்துள்ளார்.
அதிமுகவின் அடையாளமான இரட்டை இலை சின்னம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஓபிஎஸ், சசிகலா தரப்பால் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும் கட்சியினரின் விருப்பப்படி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.
அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அது நீதிமன்றம் வரை வந்திருக்கிறது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் அதிமுக சின்னம் தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சூரியமூர்த்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள தேர்தல் ஆணையம் 19ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படியும், 23ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்கப்படாத நிலையில், தனது கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் எட்டு வார கால அவகாசம் வழங்கக் கோரி சூரிய மூர்த்தி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, தேர்தல் ஆணையம் நான்கு வாரத்தில் மனு மீது முடிவெடுக்கும் என தெரிவித்ததாகவும், நீதிமன்றம் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்றும் கூறி, மனு மீது முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்க மறுத்து, சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை அடுத்து தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்-க்கு அதிமுகவின் பொது செயலாளர் என்ற வகையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ.பன்னீர்செல்வமும் தனது வழக்கறிஞர் மூலமாக மின்னஞ்சலில் பதில் அனுப்பி இருக்கிறார். இதற்கிடையே வரும் 24ஆம் தேதி இவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.