புஷ்பா 2 சிறப்பு காட்சி விவகாரம்.. திடீரென அல்லு அர்ஜுனின் தந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

post-img
ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த பெண்ணின் மகன் ஆபத்தான நிலையில், ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் இம்மாத தொடக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அந்த படத்தின் சிறப்பு காட்சிகள் ஹைதராபாத் முழுக்க திரையிடப்பட்டது. அதன்படி அங்குள்ள சந்தியா திரையரங்கிலும் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட நிலையில், அதை நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 35 வயது பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் அறிவித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி வழங்கப்படும். அதில் பாதித் தொகை அதாவது ஒரு கோடி ரூபாயை எனது மகன் சார்பில் தரப்படும். மீதித் தொகையை படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் சுகுமார் ஆகியோர் தருகிறார்கள். இந்த பணம் அந்த குடும்பத்திற்கான இழப்பீடாக இருக்கும்.. மேலும் இந்த தொகை கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் எட்டு வயது மகனின் எதிர்காலத்திற்கு உதவுவதாக இருக்கும். சிறுவன் இப்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த தொகை அவர்களுக்கு உதவும். விசாரணை நடந்து வருவதால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தை இப்போது நேரில் சந்திக்க வேண்டாம் என வழக்கறிஞர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் தெலுங்கு திரைப்பட சங்கத்தின் தலைவராக இருக்கும் தில் ராஜு மூலம் இந்த தொகை தரப்படும். இதற்காக தில் ராஜுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அந்த சிறுவனின் உடல்நிலை மெல்ல சீராகி வருகிறது. வென்டிலேட்டர் அகற்றப்பட்டு இருக்கிறது. அந்த சிறுவன் தானாக சுவாசிக்க தொடங்கியுள்ளார். மருத்துவர்கள் பாசிட்டிவாகவே இருக்கிறார்கள். அவர் விரைவில் கண் விழித்து பேச தொடங்குவார் என நம்புகிறேன்.. இதற்காக கடவுளை பிரார்த்தனை செய்து வருகிறோம்" என்றார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த அந்த விசாரணையில் போலீசார் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். பெண்ணின் உயிரிழப்பு குறித்து உங்களுக்கு எப்போத தெரியும், போலீசார் உங்களுக்கு அனுமதி மறுத்திருந்தது உங்களுக்கு தெரியுமா, அனுமதி இல்லாத போதிலும் அங்கு செல்லும் முடிவை எடுத்தது யார் என பல கேள்விகள் கேட்டுள்ளனர். மேலும், அல்லு அர்ஜுடன் வந்த பவுன்சர்கள் மீதே போலீசார் பல்வேறு புகார்களை முன்வைத்து இருக்கிறார்கள். பவுன்சர்கள் பொதுமக்களை ஆவேசமாக தள்ளியதாகவும் அதுவே நிலைமையை மோசமாக்கியதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பவுன்சர்கள் விஐபி ஒருவரை தவிர வேறு யாரை பற்றியும் கவலைப்படவில்லை என்பதே போலீசார் கருத்தாக இருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post