திமுக கூட்டணியில் குழப்பம்! விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கமா? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

post-img

சென்னை: திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜூனா கருத்துக் கூறுகிறார் என்பது உண்மை என்று விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அவர் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கை தொடர்பாகவும் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா பேச்சு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜூனா கருத்துக் கூறுகிறார் என்பது உண்மை; அவரிடம் விளக்கம் கேட்போம்; கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்போம்.

விஜய் பேசியதில் எல்லாம் உடன்பட முடியாது. விஜய் அம்பேத்கர் நூலை வெளியிட்டிருப்பது வரவேற்பதற்குறியது. ஆனால் அதற்காக அவர் பேசிய விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
திமுக அழுத்தம் கொடுத்ததாக விஜய் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்கததற்கு காரணம் திமுக அல்ல. விஜய் தெரியாமல் சொல்கிறார். அவர் சொல்வதில் உண்மை இல்லை.
நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு விஜய் காரணம் அல்ல. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு விசிக பலவீனமாக இல்லை. நாங்கள் பலமாக இருக்கிறோம். கூட்டணி பலமாக உள்ளது. ஆதவ் அர்ஜுனா பேச்சு தொடர்பாக கருத்து கேட்போம். அவர் விளக்கத்தை பொறுத்து கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்போம், என்று விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா பேச்சு சர்ச்சை: 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய சில விஷயங்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதில், ஆளும் திமுகவை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்து ஆதவ் அர்ஜுனா கடுமையாக பேசி இருந்தார். அதில், பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது!" மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது; மன்னராட்சியை கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள்;
அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்; பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது; தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவு எடுத்துவிட்டார்கள். ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் அரசியல் மூலம் ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம்; தமிழ்த் தேசியம் என்றாலும், பிரபாகரன் சொன்னது போல எல்லோரும் சமம் என்பதுதான்.

கொள்கைகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழலைச் செய்யக்கூடிய நிலை இருக்க கூடாது. "மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் சங்கி என்று சொல்வார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள். 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது, என்றெல்லாம் பேசினார்.
விஜய் பேச்சு: இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது; அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும், என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Post