சத்தீஷ்கரில் ஷாக்! தேர்தலுக்கு 3 நாளே உள்ள நிலையில்.. பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளால் கொலை

post-img

ராய்பூர்: சத்தீஷ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நடைபெற்ற இந்த சம்பவம் சத்தீஷ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் பதவி வகித்து வருகிறார். சத்தீஷ்கரின் சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகள் என இரண்டு கட்டங்களாக சத்தீஷ்கரில் தேர்தல் நடைபெறுகிறது.


சத்தீஷ்கரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளே உள்ளது. சிறிய மாநிலம் என்றாலும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.


சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே போட்டி உள்ளது. சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். இருப்பினும் பாஜகவும் படுதீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.


பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் என்ற தலைப்பில் இந்த தேர்தல் அறிக்கை வெளியானது. குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 அதாவது மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும். - அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு ஏழைகள் இலவசமாக சென்று வழிபாடு நடத்தி திரும்புவதற்கு ராம்லல்லா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.


கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் பாஜக இறங்கியுள்ளது. பாஜக உள்ளூர் நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் படு சுறுசுறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகளால் பாஜக நிர்வாகி ரத்தன் துபே கொல்லப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


சத்தீஷ்கர் மாவட்டத்தில் உள்ள நாரயண்பூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக ரத்தன் துபே பதவி வகித்து வந்தார். நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கௌஷல்கர் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது தான் ரத்தன் துபே கொல்லப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. மூத்த போலீஸ் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Post