இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் ஒரே நாளில் 5 பத்திரிகையாளர்கள் பலி! மொத்த எண்ணிக்கை 141ஆக உயர்வு

post-img
காசா: பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இன்று காலை காசா மீது இஸ்ரேல் ராக்கெட்டை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்திருக்கிறது. காசாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு வெளியே PRESS என்று எழுதப்பட்ட வாகனத்தில் சுமார் 5 பத்திரிகையாளர்கள் உறங்கிக்கொண்டிருந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் 'அல்-குத்ஸ் டுடே' எனும் ஊடக நிறுவனத்தை சேர்ந்தவர்களாவார்கள். இன்று அதிகாலை இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் ராக்கெட்டை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வாகனத்தில் உள்ள 5 பத்திரிகையாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அய்மன் அல்-ஜாடி, பைசல் அபு அல்-கும்சன், முகமது அல்-லடா, இப்ராஹிம் அல்-ஷேக் அலி மற்றும் ஃபாடி ஹசோனா ஆகியோர்தான் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் என சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த இஸ்ரேல், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுக்கள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அந்நாட்டு ராணுவம் இதுவரை வெளியிடவில்லை. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி இன்று வரை சுமார் 141 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பிரச்சனை என்ன?: பாலஸ்தீனத்தை பிரித்து இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. சுதந்திரமான, இஸ்ரேலின் தலையீடு இல்லாத நாட்டுக்காக பாலஸ்தீனம் போராட, பாலஸ்தீனத்தை அடக்கி ஆள வேண்டும் என்று நினைத்து இஸ்ரேல் ஆட்டம் ஆட மத்திய கிழக்கில் இது பதற்றமான சூழலை ஏற்படுத்தி வைத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் இது பெரும் போராக வெடிக்கலாம் என்கிற நிலைமை இருந்தது. அக்டோபர் 7 தாக்குதல்: அந்த நிலையில்தான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் முறையாக பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் போரை தொடங்கியது. அந்த போர்தான் இப்போது வரை நீண்டு வருகிறது. இந்த போரில் சுமார் 45,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் சரிபாதி பெண்களும், குழந்தைகளும் என்பதுதான் மனதை உறைய வைக்கும் உண்மை. போர் நிறுத்தம்: தொடர் மனித உரிமை மீறல்களை பார்த்த ரஷ்யாவும், சீனாவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் நிறுத்தம் குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தது. ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ பவரை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தள்ளுபடி செய்திருக்கிறது. எனவே ஒவ்வொரு முறையும் போர் நிறுத்தம் தள்ளி போனது. இதனால் உயிரிழப்பு அதிகரித்தது. இன்று உயிரிழப்பு எண்ணிக்கை 45,000ஐ தொட்டதற்கு அமெரிக்காவும் முக்கிய காரணம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நோய்கள்: ஒருபுறம் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கிறது எனில், மறுபுறம் போர் வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்தனர். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னரே ஒழிக்கப்பட்டிருந்த போலியோ நோய் மீண்டும் பாலஸ்தீனத்தில் பரவியது. இவையெல்லாம் போர் ஏற்படுத்திய தழும்புகள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post