அல்லு அர்ஜுன் விவகாரம்.. நேரடியாக தலையிட்ட சிஎம் ரேவந்த் ரேட்டி! திடீரென பறந்த உத்தரவு.. என்னாச்சு

post-img
ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்புக் காட்சியில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுனிடம் இன்று ஹைதராபாத் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வந்த நிலையில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இது குறித்து காங். தலைவர்கள் பேசக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் புஷ்பா 2 சிறப்புக் காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்தது மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இதில் அல்லு அர்ஜுன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அல்லு அர்ஜுனிடம் விசாரணை: ஏற்கனவே இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ஐகோர்ட் ஜாமீன் வழங்கியதால் அவர் ஒரு நாள் மட்டுமே சிறையில் இருந்தார். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜுனிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர். பறந்த உத்தரவு: இது ஒரு பக்கம் இருக்க அல்லு அர்ஜுன் விவகாரம் அங்கு அரசியல் அரங்கிலும் எதிரொலிக்கிறது. அல்லு அர்ஜுன் விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை சரி என்றே காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள். அதேநேரம் அங்குள்ள எதிர்க்கட்சியான பிஆர்எஸ், அரசியல் உள்நோக்கம் காரணமாகவே அல்லு அர்ஜுன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் அல்லு அர்ஜுன் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தியிருக்கிறார். பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் அல்லு அர்ஜுன் விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துகளைக் கூறுகிறார்கள். இதனால் அல்லு அர்ஜுன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது. இதைத் தடுக்க காங்கிரஸ் கட்சியினர் யாரும் அல்லு அர்ஜுன் விவகாரம் குறித்துப் பேச வேண்டாம் என ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்ன காரணம்: காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அல்லு அர்ஜுன் விவகாரம் குறித்துப் பேசாமல் இருப்பதைத் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி உறுதி செய்ய வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தேவையான அனைத்து விளக்கங்களும் தரப்பட்டுவிட்டதால் இது தொடர்பாகக் கூடுதலாக எந்தவொரு கருத்துகளையும் சொல்ல வேண்டாம் என ரேவந்த் ரெட்டி கூறியதாகத் தகவல் வெளியானது. இதுவரை தரப்பட்ட விளக்கங்கள்: கடந்த வாரம் சட்டசபையில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், "வெறும் சில மணி நேரம் சிறையில் இருந்த அல்லு அர்ஜுனை காண ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா இன்டர்ஸ்டிரியே போய் இருக்கிறது. அவருக்கு கை, கால் எதாவது போய்விட்டதா? அதேநேரம் நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் குறித்து யாராவது கவலைப்பட்டீர்களா? தெலுங்கு சினிமா இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது. தியேட்டரில் பெண் உயிரிழந்துவிட்டார் எனச் சொல்லிய பிறகும் அல்லு அர்ஜுன் அங்கு ரோட்ஷோ நடத்துகிறார்.. அவர் என்ன மாதிரியான மனிதர்?" எனக் காட்டமாக விமர்சித்து இருந்தார். போலீசார் சொல்வது என்ன: போலீசார் தரப்பிலும் இது தொடர்பாக விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர். அதில் 10.45 மணி முதலே அல்லு அர்ஜுனிடம் உயிரிழப்பு குறித்தும் போலீசார் சொல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், அவரது மேனேஜர் அவரை அனுமதிக்கவில்லை. பல முறை முயன்ற பிறகு இரவு 11.15 மணிக்குத் தான் அல்லு அர்ஜுனை ஏசிபி குமார் நேரில் பேசியிருக்கிறார். ஆனால், அப்போதும் அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறச் சம்மதிக்கவில்லை. படம் முடிந்த பிறகே போவேன் எனச் சொல்லி இருக்கிறார். இரவு 11.40 மணிக்கு டிசிபி நேரடியாக தலையிட்டு, உடனே கிளம்பவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் எனச் சொல்ல பிறகு, நள்ளிரவு 12.05க்கு அல்லு அர்ஜுன் அங்கிருந்து கிளம்பியதாக போலீசார் கூறுகிறார்கள்.. மேலும், ஹைதராபாத் போலீசார் இது தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

Related Post