நியூயார்க்: உலகப்புகழ் பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தனது தபேலா இசையால் உலகத்தையே கட்டி ஆண்டு வந்த இந்தியாவின் பெருமைமிகு இசைக்கலைஞர்களின் ஒருவரான ஜாகீர் உசேன் இன்று காலமானார். நேற்றிரவு அவரது உயிரிழப்பு குறித்து தகவல்கள் பகிரப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் இதனை மறுத்தனர். இதனையடுத்து அவரது மறைவு இன்று காலை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
என்ன பிரச்சனை?: 'இடியோபாடிக் பல்மனரி ஃபைப்ரோஸிஸ்' எனும் நோயால் ஜாகீர் உசேன் நீண்ட காலமாக போராடி வந்திருக்கிறார். இது நுரையீரல் தொடர்பான நோயாகும். புகைபிடித்தல், காற்று மாசு, தொழிற்சாலை மாசு உள்ளிட்ட காரணிகளால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு நுரையீரலில் உள்ள திசுக்கள் வழக்கத்தை விட தடிமனாகிவிடுகிறது. எனவே சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று உயிரிழந்திருக்கிறார்.
பதின் பருவம்: புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞரான அல்லா ரக்காவின் மூத்த மகன்தான் ஜாகீர் உசேன். எனவே ஜாகீருக்கு சிறுவயதிலிருந்தே தபேலாவின் நுணுக்கங்கள் அனைத்தும் அத்துப்படி. வாசிப்பது என்பது எல்லோராலும் செய்ய முடியும். ஆனால் அதை ஆர்த்மார்த்தமாக செய்வது கலைஞர்கள்தான் முடியும். இதனை ஜாகீர் ஆழமாக நம்பியிருந்தார். இவரது வாசிப்புக்கு கிடைத்த விருதுகள் எல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால் வாசிப்பு மூலம் கிடைக்கும் அனுபவம், மக்களுக்கு கொடுக்கும் மகிழ்ச்சிதான் இவருக்கு முதல்.
விருதுகள்: 1990ல் சங்கீத நாடக அகாடமி விருது , சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் ஆகியவற்றை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து 1999ல், யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் என்டோமென்ட் ஃபார் தி ஆர்ட்ஸ் ' நேஷனல் ஹெரிடேஜ் பெல்லோஷிப் வழங்கப்பட்டது. இது பாரம்பரியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இத்துடன் இல்லாமல் 2018ல் ரத்னா சத்ஸ்யா விருது, ஏழு முறை கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 3 முறை விருதுகளையும் வென்றிருக்கிறார்.
ஜாகீர் உசேன், பிரபல புல்லாங்குழல் இசை கலைஞரான ராகேஷ் சவுராஷியாவுடன் இணைந்து நடத்திய கச்சேரி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ராகேஷின் புல்லாங்குழல் மனதை வருடும் நேரத்தில், ஜாகீரின் தபேலா மனதை தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருப்பதாக பலரும் கூறியிருந்தனர்.
ஜாகீர் உசேனின் மறைவு இசை பிரியர்களுக்கு மட்டுமல்லாது, மொத்த இந்தியாவின் பெருமைக்கும் ஏற்பட்ட இழப்பாகும்.