ரூ.1 செலவில்லாமல் 5 லட்சம் ரூபாய்.. கலைஞர் காப்பீடு திட்டத்திலும் அலட்சியம்? முதல்வர் வரை போன புகார்

post-img
சென்னை: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளும் தனியார் மருத்துவமனைகளுக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நல பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.. மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடுகளை அங்கீகரித்து சிகிச்சை அளிக்க மறுப்பதுடன் நோயாளிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட சிகிச்சையளிக்க மறுத்து அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி உள்ளது. ஈவிரக்கம் இல்லாமல் மக்களிடம் நடந்து கொள்ளும் தனியார் மருத்துவமனைகளின் செயலுக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அத்துடன் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அப்பேரவையின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் உள்ளதாவது: மக்கள் திட்டம்: ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்கின்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையினை பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியை செவ்வனே நடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உயிர் வாழ உணவு, மானத்தை காக்க உடை, பாதுகாப்பாக வாழ இருப்பிடமென இவைகள் மூன்றும் அத்தியாவசியமானதாக இருந்து வருகிறது. அதேவேளையில் ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் முன்னேற கல்வி மற்றும் நோய் தீர்க்க மருத்துவம் ஆகியவை மிகவும் இன்றியமையாததாகவும் விளங்குகிறது. தற்போதைய சூழலில் மருத்துவ சிகிச்சைக்காகும் செலவானது செல்வந்தர்களையும் செல்லா காசாக்கி விடும் சூழலில், ஏழை எளிய மக்களின் நிலையானது மிகவும் பரிதாபத்திற்குரியாதாக உள்ளது. 5 லட்சம் ரூபாய்: ஏழை எளிய மக்களின் பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் தரமான மருத்துவ சேவை இலவசமாக கிடைத்திடும் வகையில் தமிழகத்தில் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்ற திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயனாளி குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை காப்பீடு மற்றும் சில சிகிச்சைகளுக்கு ரூபாய் 22 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரமென்றும் மற்றும் மத்திய அரசின் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு ஆண்டு வருமானம் வரன்முறை இல்லாமலும் வழங்குகிறது. இத்திட்டத்தின் படி பயனாளியின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. காப்பீடு திட்டங்கள்: மேலும் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ரூபாய் 22 லட்சம் வரை காப்பீடு பெறும் வகையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் 855 அரசு மருத்துவமனைகள் மற்றும் 990 தனியார் மருத்துவமனைகளென ஆக மொத்தம் 1845 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கூடுதல் சிறப்பம்சமானது தனியார் மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை பெறுவதோடு மட்டுமல்லாமல் அரசு மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற காரணத்தினால் இத் திட்டமானது ஏழை எளிய மக்களிடையே மகிழ்ச்சியையும் பெரும் வரவேற்பையும் பெற்றது. ஆனால் இவர்களின் மகிழ்ச்சியானது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. காரணம் எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதன் முழு பயனை அவர்களால் பெற இயலவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது திட்டத்தில் இணைந்த தனியார் மருத்துவமனைகள் அனைத்து நோய்களுக்குமான சிகிச்சை அளித்து வந்தன. ஆனால் காலப் போக்கில் குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் அதாவது இதயம், சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை மாற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மட்டுமே மருத்துவ காப்பீட்டின் மூலம் சிகிச்சை பெற முடியும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது. கூடுதலாக மேற்கூறிய நோய்களுக்கும் முழுமையான சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தயாராக இல்லை. சிகிச்சைகள்: அதேசமயம் சிகிச்சை பெறுபவர் தனியார் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தால் அவருக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் விரைவாக தரமான முறையில் வழங்கப்படுகிறது. சில மருத்துவமனைகளில் மத்திய மாநில அரசுகளின் காப்பீடுகளை அங்கீகரிக்காத சூழலும் நிலவுகிறது. மேலும் சில மருத்துவமனைகள் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளித்தாலும், மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க பெரும்பாலான மருத்துவமனைகள் தயாராக இல்லை என்கின்ற கசப்பான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் ஏழை எளிய மக்களின் நலனுக்காக கொண்டு வந்த இத்திட்டத்தில் இத்தனை முரண்பாடுகள் உள்ளது. மேம்பாடு ஆணைய சட்டம்: இந்தியாவில் காப்பீட்டுத் துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI). இது காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 1999 (IRDA சட்டம்) கீழ் உருவாக்கப்பட்டது. இது காப்பீட்டுத் துறையை ஒழுங்குபடுத்துவதும், மேம்படுத்துவதும், உரிமம் வழங்குவதும் இதன் முக்கிய பணியாகும். கூடுதல் தகவலாக தமிழ்நாடு அரசின் கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்தால் அதற்கான ஒப்புதல் கிடைக்க பெறாமல் (IRDAI) வினால் நிராகரிக்கப்படுகிறது. அதே சமயம் தனியார் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்த ஒரு மணி நேரத்திற்க்குள்ளாக ஒப்புதல் கிடைக்க பெற்று விடுகிறது. இதன் மூலம் தனியார் மருத்துவ காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கம் எந்த அளவிற்கு வலிமையாக உள்ளதென்பதை தெளிவாக உணர முடிகிறது. மருத்துவ காப்பீடு: இத்தகைய செயல்பாடுகளினால் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான மதிப்பு இவ்வளவுதானா என்கின்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளதோடு மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மீதான நம்பிக்கையும் இழக்கச் செய்துள்ளது. மேலும் இச்சம்பவம் எதிர்க்கட்சிகளின் கண்டனம் மற்றும் கேலிக்குள்ளாகியுள்ளது. மேலும் தனியார் மருத்துவ காப்பீடு பெற்றவர்களுக்கு விரைவாக கிடைக்கும் தரமான சிகிச்சை மற்றும் அவர்களுக்கான மரியாதையும் மதிப்பும் மத்திய மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்திருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. மருத்துவ செலவு: மேலும் மத்திய மாநில அரசின் காப்பீடு திட்டங்களின் கீழ் சிகிச்சை வழங்கும் நோயாளிகளுக்கான மருத்துவ செலவிற்கான தொகையை மத்திய மாநில அரசுகளிடமிருந்து பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்று தனியார் மருத்துவமனைகள் தரப்பிலிருந்து காரணமாக தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து வெளியிடபட்ட பத்திரிக்கை செய்தியில் மத்திய மாநில அரசு காப்பீடு தொகை உடனடியாக விடுவிக்கப்படுகிறதென்றும் மேலும் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் தமிழக அரசு காப்பீடு வழங்க முன் வந்தாலும் அவர்கள் ஏற்பதில்லை என்று புகாரும் தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள். தான்தோன்றித்தனம்: தனியார் மருத்துவமனைகள் என்பது அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும் மற்றும் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை ஏற்று செயல்பட வேண்டுமேயன்றி அதை விடுத்து தான்தோன்றித்தனமாக செயல்படுவதென்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அவமதிக்கும் செயலாகும். மேலும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிக்கான சிகிச்சை கட்டணத்தை அரசிடமிருந்து விரைந்து பெறுவதற்கான வழிமுறைகளை செயல்படுத்திட வேண்டுமேயன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை தர மறுப்பதென்பது மிகப்பெரிய குற்றமாகும். புறக்கணிப்பு: எனவே தனியார் மருத்துவமனைகள் பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு மத்திய மாநில அரசுகளின் காப்பீடு திட்டத்தை வைத்துள்ள ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சையளிக்காமல் புறக்கணிப்பதென்பது மருத்துவ துறைக்கே பெருத்த அவமானகரமான செயலாகும்.. தனியார் மருத்துவமனையில் இத்தகைய மோசமான செயல்பாடுகளின் காரணமாக பாதிக்கப்படுவது என்னவோ பாமர ஏழை எளிய மக்கள் தான். நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்கான பணமுமில்லாமல் மற்றும் சிகிச்சை பெறுவதற்கு வழியும் தெரியாமல் மருத்துவமனைகளால் தாங்கள் அலட்சியப்படுத்தப்பட்டு அவமானப்பட்டு அவதியுருவதென்பது நோயினால் அனுபவிக்கும் வலியை விட மிக கொடுமையான வலியாகும். தரமான சிகிச்சை: இத்தகைய நோயின் பிடியில் அகப்பட்டு தரமான சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படும் மக்களை காக்கும் விதமாக மத்திய மாநில அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தின் தற்போதைய நிலையானது, அரசு கொண்டு வந்த நோக்கத்தினை சிதைத்து நோயுற்ற பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை தங்கள் நோய்களுக்கான சிகிச்சை பெற இயலாமல் கண்ணீர் விட்டு யாரிடம் தங்கள் வேதனையை கூறுவதென்று தெரியாமல் மற்றவர்களிடம் புலம்பியும் மனதுக்குள் குமுறி கொண்டிருக்கிறனர். எனவே ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பல நல்ல திட்டங்கள் மற்றும் இலவச சேவைகளை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசின் முதலமைச்சர், மேற்கூறிய பிரச்சனைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, ஏழை எளிய மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சிறப்பு மிக்க கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டத்தை அலட்சியப்படுத்தி அங்கீகரிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுகோள்: அத்துடன், அனைவருக்குமான தரமான இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் உடனடியாக வழிவகை செய்ய வேண்டுமென பொதுமக்கள் சார்பிலும், அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் சார்பிலும் தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து, டாக்டர் ஹென்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Related Post