சென்னை: அமெரிக்காவில் நடந்த 6வது உலக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்ற சென்னையை சேர்ந்த காசிமாவுக்கு தமிழக அரசு ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் ஆட்டோ டிரைவரின் மகளாக பிறந்து நிதி நெருக்கடி உள்ளிட்ட தடைகளை தாண்டி காசிமா சாதித்தது எப்படி? என்பது பற்றிய நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதம் 6வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடந்தது. இதில் சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த காசிமா (வயது 17) 3 தங்க பதக்கங்களை வென்றார். மகளிர் பிரிவில் நடந்த தனிநபர், இரட்டையர், குழு உள்ளிட்ட பிரிவுகளில் அவர் சிறப்பாக வென்று தங்கப்பதக்கங்களை வென்று சாம்பியன் ஆனார்.
காசிமா, சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் காசிமாவின் தந்தை பெயர் மெகபூப் பாஷா. தாய் பெயர் மும்தாஜ். தந்தை மெகபூப் பாஷா இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட மகளின் ஆசையை நிறைவேற்ற மெகபூப் பாஷா தனது வருமானத்தை செலவு செய்து ஊக்கப்படுத்தினார்.
காசிமாவுக்கு கடந்த ஜுலை மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1.50 லட்சம் ரூபாய் பண உதவி செய்திருந்தார். தற்போது அவர் உலககோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்று சாதித்துள்ளார். இதற்கிடையே தான் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு பரிசுத்தொகையாக ரூ.11 கோடி கிடைக்கிறது. அதேபோல் தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு நேற்று முன்தினம் சென்னையில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பாராட்டினார்.
இதை தொடர்ந்து தான் குகேசை போல் காசிமாவுக்கு தமிழக அரசு பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் கேரம் வீராங்கனை காசிமாவிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார். இதனால் காசிமா மற்றும் அவரது குடும்பம் ஹேப்பியாகி உள்ளது. "ஒன் இந்தியா தமிழ்" ஊடகத்துக்கு காசிமா அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் 6 வயதில் இருந்து கேரம் விளையாட தொடங்கினேன். இங்கு விளையாட தொடங்கியது தான் அமெரிக்காவில் நான் சாதித்து உள்ளேன். என் அப்பாவின் அப்பா (தாத்தா) கேரம் விளையாடினார். 2 ஆண்டுகள் வேலைக்கே செல்லாமல் கேரம் விளையாடி குடும்பத்தை பார்த்து கொண்டார். அதன்பிறகு அப்பா நன்றாக விளையாடினார். அப்பா மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடி உள்ளார். அப்பா, அண்ணனுக்கு கற்றுக்கொடுத்தார். அண்ணன் ஜுனியர் நேஷனல் சாம்பியன் ஆனார். அதை பார்த்து தான் எனக்கு கேரம் விளையாட ஆர்வம் வந்தது.
எனக்கு பள்ளி காலத்திலேயே ஆசிரியர், ஆசிரியைகள் நன்கு சப்போர்ட் செய்தனர். எனக்கு முதல் கோச் என்றால் என் அப்பாவை தான் சொல்வேன். இப்போது வரை அவர் தான் பயிற்சி அளித்து வருகிறார். மரிய இருதயம் சாரும் கோச்சிங் தருகிறார். எங்கள் குடும்பத்தில் மொத்தம் 5 பேர். அப்பா ஆட்டோ டிரைவர். அம்மா ஹவுஸ் ஒயிப். அக்காள் திருமணமாகிவிட்டது. அண்ணன் பிஏ முடித்து வேலை செய்து வருகிறார். நான் கல்லூரியில் படித்து வருகிறேன்.
நான் பொருளாதார ரீதியாக அதிக சிரமத்தை சந்தித்துள்ளேன். கடன் வாங்கி தான் போட்டிக்கே அழைத்து செல்வார். கடன் வாங்கியதை சில நேரங்களில் எங்களிடம் சொல்லுவார். இப்படியான சூழலில் போட்டியில் ஜெயித்துவிட்டால் அவருக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் தோற்றுவிட்டால் ரொம்ப கஷ்டமாக மாறிவிடும். இதனால் ஜெயித்தே ஆக வேண்டும் என்று என்று விளையாடி ஜெயிப்பேன்.
நான் 12 ஆண்டுகளாக கேரம் விளையாடி வருகிறோம். அதேபோல் அண்ணனும் கேரம் விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்ல வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகும். வாரணாசி, டெல்லி போகும்போதெல்லாம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளோம். ரயிலிலேயே இரண்டரை நாட்கள் வரை செல்ல வேண்டி இருக்கும். இப்போது ஸ்காலர்ஷிப் வருகிறது என்பதால் கொஞ்சம் பரவாயில்லை.
அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி 1 லட்சத்து 50 ஆயிரம் தந்தார். பயணம் செய்ய பணம் இல்லாதபோது அவர் தான் உதவி செய்தார்.கிளப்பில் இருந்து சார்லஸ் அங்கிள், சசி அண்ணா, திருமலை உள்ளிட்டவர்கள் நிறைய உதவி செய்தனர். நாங்கள் இஸ்லாமியர் என்பதால் சிலர் கேரம் ஏன் விளையாட வேண்டும் என்று கேட்டனர். ஆனால் எனது குறிக்கோள் கேரமில் சாதிக்க வேண்டும் என்பது தான். அப்பாவின் ஆசையும் அதுதான். இதனால் நாங்கள் யார் என்ன பேசினாலும் எடுத்து கொள்ளவில்லை'' என்றார்.