கைதாகும் ராபின் உத்தப்பா? பிஃஎப் மோசடி வழக்கில் கைது வாரண்ட்.. மாஜி சிஎஸ்கே வீரருக்கு வந்த சோதனை

post-img
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு சுமார் ரூ.24 லட்சம் வழங்காமல் மோசடி செய்த புகாரில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. இவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடினார். தற்போது அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று வர்ணனையாளராக வலம் வருகிறார். ராபின் உத்தப்பா கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு சென்டாரஸ் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது ஆடை சார்ந்த தொழில் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ராபின் உத்தப்பா இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்து இபிஎஃப்ஓ எனும் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் உத்தப்பாவின் நிறுவனத்தில் இருந்து பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு நிதி பங்களிப்பு செய்யப்படவில்லை. மொத்தம் ரூ.23 லட்சத்து 26 ஆயிரத்து 602 உத்தப்பா தரப்பில் பாக்கி உள்ளது. இதனால் அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதுபற்றி பெங்களூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி உத்தரவிட்டும் உத்தப்பாவின் நிறுவனம் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக புலிகேசி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 27 ம் தேதிக்குள் ராபின் உத்தப்பா ரூ.23 லட்சத்து 36 ஆயிரத்து 602யை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர் பெங்களூர் புலிகேசிநகர் போலீசாரால் கைது செய்யப்பட உள்ளார். இது ராபின் உத்தப்பாவின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ராபின் உத்தப்பா இந்திய அணிக்காக மொத்தம் 46 போட்டிகளில் விளையாடி 6 அரை சதங்களுடன் 934 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு இந்திய அணிக்காக 13 டி20 போட்டிகளில் விளையாடிய உத்தப்பா ஒரு அரைசதத்துடன் 249 ரன்கள் எடுத்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் மும்பை, பெங்களூர், புனே, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். தற்போது கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

Related Post