நேற்று மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா இடையே நடந்த செஸ் இறுதிப்போட்டியில் இரண்டாம் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரக்ஞானந்தா நடந்து கொண்ட விதம் பெரிதும் கவனிக்கப்பட்டது.
கடந்த வாரம்தான் செஸ் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா. சக இந்திய வீரரான அர்ஜுனை டை ப்ரேக்கர் சுற்றில் வீழ்த்தி அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றார். அரையிறுதியில் நடந்த ஆட்டத்தில் முதலில் தோல்வியின் விளிம்பில் இருந்த பிரக்ஞானந்தா அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஆட்டத்தை டிரா செய்வது போல வந்தார்.
கடைசி கட்டத்தில் எதிர்பார்க்காத மூவ்களை செய்த பிரக்ஞானந்தா கடைசியில் திரில் வெற்றி பெற்றார். டை பிரேக்கர் வரை சென்று பிரக்ஞானந்தா இந்த ஆட்டத்தில் வென்றார். இதன் மூலம் அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா சென்றார்.
அரையிறுதியில் அசர்பைஜான் வீரர் நிஜாத்தை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. இதில் அரையிறுதியின் இரு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இரு சுற்றுகளிலும் ஃபேபியானோ கருவானாவே ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், பிரக்ஞானந்தா போராடி டிரா செய்தார். இந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான டை பிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது.
இதுவும் காலிறுதி ஆட்டத்தை போலவே ரேபிட் முறையில் நடத்தப்பட்டது. இதில் முதல் ஆட்டம் டிராவில் முடிவடைய, இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. கடைசியில் மூன்றாவது ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா வென்று பைனல்ஸ் சென்றார். ரேபிட் சுற்றில் வல்லவரான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டியில் வெல்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
பைனல்ஸ்: தற்போது பைனல்ஸ் ஆட்டம் மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா இடையே நடந்து வருகிறது. இதில் நேற்று முதல்நாள் நடந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. அதன்பின் நேற்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டமும் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இன்று டை பிரேக்கர் சுற்று நடக்க உள்ளது. டை பிரேக்கர் ரேபிட் சுற்றில் வல்லவரான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டியில் வெல்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த போட்டியில் நேற்று வேண்டுமென்றே டிரா செய்யும் வகையில் மேக்னஸ் கார்ல்சன் ஆடியதாகவும் கூறப்பட்டது.
பிரக்ஞானந்தா மைண்ட் கேம்: செஸ் என்பது போர்டில் ஆடும் ஆட்டத்தை தாண்டி.. வெளியே ஆடும் மைண்ட் கேமிலும் இருக்கிறது. உதாரணமாக கார்ல்சன் ஒரு வழக்கத்தை வைத்து இருப்பார்.. அதன்படி ஒருவருக்கு எதிராக அவர் ஆடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்..
எதிரணி வீரர் வருவதற்கு முன் கார்ல்சன் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல மாட்டார். எதிரணி வீரர் வந்த பின் அவரை கொஞ்சம் காக்க வைத்தே கார்ல்சன் செல்வார். நீ எனக்கு காத்திருப்பதன் மூலம்.. நானே இங்கே பெரியவன் என்ற ஆல்பா உணர்வை எதிரணிக்கு எதிராக கார்ல்சன் ஏற்படுத்துவார். அதன்பின் போட்டி தொடங்கி டைமர் அமுக்கப்பட்டு எதிரணி வீரர் காயை நகர்த்தியதும் கார்ல்சன் உடனே காயை நகர்த்தி டைமரை அழுத்த மாட்டார்.
முதலில் காயை நகர்த்துவதற்கு பெரிதாக யோசிக்க வேண்டியது இல்லை. பெரும்பாலும் பெரிய வீரர்கள் முதலில் காயை நகர்த்த யோசிக்க மாட்டார்கள். ஆனால் கார்ல்சன் என்ன செய்வார் என்றால் அப்போதுதான் ஐடி கார்டை சரி செய்வார், அருகில் உள்ளவர்களிடம் பேசுவார், கோட்டை கழற்றுவார், தண்ணீர் குடிப்பார்.. இந்த டைம் ஓடுவது எல்லாம் எனக்கு மேட்டரே இல்லை என்பது போல கார்ல்சன் செயல்படுவார்.
எதிரணி வீரர் இதை பார்த்தால்.. என்ன இவன் நாம் காய் நகர்த்தி இருக்கோம்.. இப்படி கண்டுக்காம இருக்கானே என்று நினைக்கும் அளவிற்கு மைண்ட் கேம் ஆடுவார். இப்படி விசுவநாதன் ஆனந்திடம் கூட கார்ல்சன் வேலையை காட்டி இருக்கிறார்.
ஆனால் எத்தனுக்கு எத்தன் வரத்தானே செய்வான்.. அப்படித்தான் நேற்றும் நேற்று முதல் நாளும் கூட கார்ல்சன் காய் நகர்த்த காலம் எடுக்க திட்டமிட்டார். ஆனால் அவருக்கு முன்பே பிரக்ஞானந்தா காயை நகர்த்தாமல் நீண்ட நேரம் அப்படியே இருந்தார். பொதுவாக காயை நகர்த்தும் முன் பிரக்ஞானந்தா சில நிமிடம் கண்களை மூடி யோசிப்பார்.
ஆனால் நேற்றும், நேற்று முதல்நாளும் நீண்ட நேரம் கண்களை மூடி அமர்ந்து இருந்தார். கார்ல்சன் பொறுமையை சோதிக்கும், விதமாக.. அவரின் மைண்ட் கேமை அவரிடமே காட்டினார் பிரக்ஞானந்தா. நேற்று இந்த விஷயம் செஸ் உலகில் பலராலும் கவனிக்கப்பட்டு.. ஆகா இந்த சிறுவன் கார்ல்சனையே திணற வைக்கிறார் என்று பாராட்டி வருகின்றனர்.