இந்தியா-அமெரிக்க உறவு உலகின் தலைவிதியை மாற்றும். பிரதமர் மோடி பேச்சு

post-img

அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, கடைசி நாளான நேற்று பல முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் கூக், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், 5ஜி, 6ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், உலகளாவிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு, முழு உலகத்திற்கும் முக்கியமானது என தெரிவித்தார்.

பின்னர், உரையாற்றிய பிரதமர் மோடி, திறமையும் தொழில்நுட்பமும் ஒன்றிணைவது பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்று கூறினார். மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பிரதமர் மோடி நன்றியும் தெரிவித்தார்.

முன்னதாக, ஜான் எஃப் கென்னடி மையத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் வளர்ச்சியை நோக்கிய கனவில், இந்தியர்களின் பங்கு மிகப்பெரியது என தெரிவித்தார். அமெரிக்கா- இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் நம்பிக்கை வாய்ந்தது என்றும், இந்த உறவு உலகின் தலைவிதியை மாற்றும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

 

இந்தியாவில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாக கூறிய பிரதமர், தீவிர வறுமை ஒழிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் 16 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும், இந்தியா உள்கட்டமைப்பில் 125 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். அமெரிக்க பயணத்தை முடித்த நிலையில் பிரதமர் மோடி முதல்முறையாக ஆப்ரிக்க நாடான எகிப்து செல்கிறார்.

Related Post