அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைஃபஸ் பாதிப்பு! ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுமா? விளக்கம்

post-img
சென்னை: தமிழகத்தில் 'ஸ்க்ரப் டைஃபஸ்' எனும் தொற்று பாதிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுமா? எப்படி தடுப்பது? என்பது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் விளக்கமளித்துள்ளனர். நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "தொடக்கத்தில் இந்த பாதிப்பு காட்டுக்குள் செல்வோருக்குதான் ஏற்பட்டிருந்தது. வேட்டைக்கு செல்பவர்கள், மரம் வெட்ட செல்பவர்கள் ஆகியோர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது நகர்ப்புற பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஸ்க்ரப் டைபஸ்' ஏற்பட்டால், மூன்று நாட்களுக்குள் உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும். இதன் அறிகுறிகளாக சாதாரண தலைவலி காய்ச்சல் ஆகியவை இருக்கும் சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படும். எனவே இந்த பாதிப்பு குறித்து அச்சம் வேண்டாம். ஒருவேளை இந்த பாதிப்புக்காக சிகிச்சை தேவை எனில் அதற்கான போதுமான அளவு மருந்து மாத்திரைகள் நம்மிடம் கையிருப்பில் இருக்கின்றன. எனவே பொதுமக்கள் இந்த பாதிப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனால் இப்படியான ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். கர்ப்பிணி பெண்களுக்கு இந்த தொற்று பாதிப்பால் சில பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கர்ப்பிணிகள் காய்ச்சல் இருப்பதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியமாகும். இந்த ஒரு இடத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல வீடுகளை சுற்றியுள்ள புதர்களை அகற்றுதல் அவசியம். இதிலிருந்து தான் பூச்சிகள் மூலமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது ஒரு மனிதர்களிடமிருந்து இன்னொரு மனிதர்களுக்கு பரவாது என்பதால் பயப்படத் தேவையில்லை. பூச்சிகள் கடித்த இடத்தில் ஒரு புண் உருவாகும் இதை வைத்து தான் ஸ்க்ரப் டைவர்ஸ் நோயை அடையாளம் காண முடியும்" என்று செல்வ விநாயகம் தெரிவித்திருக்கிறார். அறிகுறிகள் என்னென்ன?: ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மனிதர்களை கடிக்கும்போது ஸ்கரப் டைபஸ் நோய் ஏற்படுகிறது. காய்ச்சலும், தலைவலியும் முதல் அறிகுறிகளாக இருக்கும். தவிர, தோல்களில் சிறிய அளவில் புண்கள் தென்படும். அந்த இடத்தில் அரிப்பு இருக்கும். இவற்றை வைத்து ஸ்கரப் டைபஸ் நோயை அடையாளம் கண்டுவிட முடியும். இது ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது என்பதால் பயப்பட தேவையில்லை. பாதுகாத்துக்கொள்வது எப்படி?: புதர்கள் மண்டி இருக்கும் பகுதியில்தான் இந்த பூச்சிகள் அதிகம் இருக்கின்றன. எனவே வீட்டை சுற்றி உள்ள புதர்களை அகற்ற வேண்டும். காட்டு பகுதிகளுக்கு செல்வதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும். பூச்சி கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 'டைதில்டோலுஅமைடு' எனும் ரசாயனம் கலந்திருக்கும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம். சாதாரண கொசுவத்தி சுருளில் கூட இந்த ரசாயன் இருக்கிறது. எனவே கொசுவத்தி சுருளை கொளுத்தி வைப்பதன் மூலம் பூச்சிகளை விரட்ட முடியும். துவைத்த சுத்தமான துணிகளை உடுத்துதல், முழுக்கை சட்டை, காலில் ஷூ அணிதல் போன்றவற்றின் மூலமும் பூச்சி கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். ஏற்கெனவே இந்த நோய் பாதிப்பு குறித்து அனைத்து மாவட்டங்களின் தலைமை மருத்துவமனைகளுக்கு பொது சுகாதார துறை அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post