வேங்கைவயல், அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்.. சட்டசபையில் விவாதிக்க கோரி விசிக கவன ஈர்ப்பு தீர்மானம்!

post-img
சென்னை: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலகப்பட்டது, சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள் தொடர்பாக தமிழக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் மீதான விவாதம் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தீர்மானிப்பார். தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கும். தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என். ரவி ஒவ்வொரு முறை உரை நிகழ்த்தும் போதும் சர்ச்சைகள் அரங்கேறுவது வழக்கமாகிவிட்டதால் இந்த முறை எப்படிப்பட்ட சர்ச்சை நிகழும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திடீரென வேங்கைவயல் மற்றும் அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க கோரி கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்த தீர்மானங்களை விவாதத்துக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து சபாநாயகர் அப்பாவுதான் தீர்மானிப்பார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது வேங்கைவயல் கிராமம். இந்த கிராமத்தில் ஆதி திராவிடர் மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க குடிநீர்த் தொட்டியில் மலம் கழிக்கப்பட்டது தெரியவந்தது. 2022-ம் ஆண்டின் இறுதியில்தான் இந்த அவலம் நிகழ்ந்தது. ஆனால் 2 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் வேங்கைவயல் குற்றவாளிகள் யார் என கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவியை பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி இல்லை.. ஞானசேகரனுக்கு விஐபிக்கள் தொடர்பு உண்டு; அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இதற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் தமிழ்நாடு அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு; 25 தொகுதிகளைக் கேட்போம் என்றெல்லாம் திமுகவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கிறது விசிக. தற்போது சட்டசபையிலும் ஆளும் திமுகவுக்கு நெருக்கடி தரத்தான் இந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்களை விசிக கொண்டு வந்துள்ளதா? என்கிற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post