டெல்லி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு- வாழ்வா சாவா களத்தில் கெஜ்ரிவால்- அதிகார வேட்கையில் பாஜக!

post-img
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகள். நாட்டின் தலைநகரமாக டெல்லியில் நீண்டகாலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பின்னர் பாஜகவின் கைகளுக்கு ஆட்சி மாறியது. ஆனால் 2013-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் அல்லாமல் ஆம் ஆத்மி கட்சி வசமே டெல்லி இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையில் காங்கிரஸ், பாஜக என்ற இரு கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தின. 2008-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 43 இடங்களையும் பாஜக 23 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. டெல்லியில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். அத்தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வென்றிருந்தது. டெல்லி முதல்வராக காங்கிரஸின் ஷீலா தீட்ஷித் பொறுப்பேற்றார். ஆனால் 2013-ம் ஆண்டு முதல் டெல்லி தேர்தல் களமே தலைகீழாக மாறியது. 2013-ம் ஆண்டு தேர்தலில் பாஜக, காங்கிரஸுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் முதல் முறையாக களம் கண்டது. அந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவுக்கு 32, ஆம் ஆத்மிக்கு 28 இடங்கள் கிடைத்தன. டெல்லியை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சிக்கோ வெறும் 8 இடங்கள்தான் கிடைத்தன. இதனால் காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது. ஆனால் 2014-ம் ஆண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலையில் முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதனால் டெல்லியில் 2014-ம் ஆண்டு முதல் ஓராண்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. 2015-ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சியே கைப்பற்றியது. பாஜகவுக்கு 3 இடங்கள்தான் கிடைத்தன. டெல்லியை அரசாண்ட காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் புதைகுழிக்குப் போனது. அன்றில் இருந்து இன்று வரை காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் மீண்டும் எழ முடியாமல் போனது. டெல்லியின் முதல்வராக 2-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சியே அபார வெற்றியைப் பெற்றது. இந்த தேர்தலில் 62 இடங்களில் வென்றது ஆம் ஆத்மி கட்சி. பாஜகவுக்கு ஆறுதலாக 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸுக்கு இம்முறையும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. டெல்லி முதல்வராக 3-வது முறையாக முதல்வரானார் கெஜ்ரிவால். ஆனால் இந்த 3-வது ஆட்சிக் காலத்தில் ஆம் ஆத்மி கட்சி கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சிறைக்கு சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் அதிஷி முதல்வராக்கப்பட்டார். தற்போது டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் மீண்டும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. தலைநகர் டெல்லியில் ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக முனைப்புடன் இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியோ 4-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் புதைகுழியில் இருந்து மீண்டு ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெல்ல வேண்டும் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடுகிறது. டெல்லி தேர்தல் களம் கடும் குளிருக்கு இடையே உக்கிரமான அனலைக் கொட்டிக் கொண்டிருக்கிறது! Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post