இன்னும் 2 நாள் தான்.. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.! அவசரம் காட்ட வேண்டிய நிலையில் அரசியல் கட்சிகள்!

post-img
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை அடுத்து வேட்பு மனு தாக்களுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் அவசர அவசரமாக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைவராக தனது முதல் சட்டமன்றத் தேர்தலை சந்தித்த மு.க.ஸ்டாலின் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சரானார். அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றுதான் ஈரோடு கிழக்கு தொகுதி. அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி: பெரியாரின் பேரன், இளங்கோவனின் மகன் என்ற பெருமையோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் சுமார் 67 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட யுவராஜா 58 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி திருமகன் ஈவேரா திடீர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் இடைத் தேர்தல்: இதை அடுத்து அதே தொகுதிக்கு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டியிட்டார். அதில் இளங்கோவன் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இந்த நிலையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடத்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். தேர்தல் தேதி அறிவிப்பு: அவரது மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தார். அதனுடன் உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதிக்கும், தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல்: அதன்படி நாளை மறுநாளான பத்தாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 17-ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாக 20ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்கு பதிவும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 10, 13, 17 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அவசரகதியில் கட்சிகள்: இதை அடுத்து அவசர அவசரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுமா? அல்லது திமுக போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கிடையே வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், வேட்பு மனு தாக்கல் என அடுத்தடுத்து பல வேலைகள் இருக்கிறது. கூடுதலாக எதிர்க்கட்சிகள் களமிறங்கினால் ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே பல்வேறு விவகாரங்கள் ஆளும் தரப்புக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதி நிச்சயம் சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. அதிமுக களமிறங்குமா?: அதே நேரத்தில் அதிமுக களமிறங்குமா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் சில சுயேடைகளும் நிச்சயம் களம் இறங்குவார்கள். ஒரு வேளை அதிமுக களமிறங்கினால் இந்த தேர்தலில் 4 முனை போட்டி உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post