15,000 காலியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 டூ குரூப் 4 வரை! அடுத்த வாரம் வெளியாகும் தேர்வு அட்டவணை

post-img
சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் 2025ம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணை அடுத்தவாரம் வெளியிடப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இந்த முறை குரூப் 1 முதல் குரூப் 4 வரை மொத்தம் 15,000 காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளுக்கு தேவையான ஆட்சேர்ப்பு பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இன்று 2025ம் ஆண்டு பிறந்துள்ளது. நாம் அனைவரும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வருகிறோம். டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை ஒவ்வொரு புத்தாண்டின்போதும் அந்த ஆண்டில் நடத்தப்பட உள்ள போட்டித்தேர்வுகள், துறை வாரியாக நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு என்பது வெளியிடப்படும். அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசு வேலை வாய்ப்புகளுக்கான போட்டித்தேர்வு அட்டவணையை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. அதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் குறித்த விபரம் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த போட்டி தேர்வு அட்டவணை என்பது மொத்தம் 15 ஆயிரம் காலிப்பணியிடங்களை அரசு துறையில் நிரப்பும் வகையில் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 701 பேருக்கு டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 15 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Post