ஆளுநர் 3 நிமிடங்களிலேயே வெளியேறியதால் அவரது உரையின் தமிழாக்கத்தை வாசிக்கிறார் சபாநாயகர் அப்பாவு!

post-img
சென்னை: ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேறியதால் அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். ஆண்டுதோறும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது மரபு. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை முறைப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். காலை 9.30 மணி அளவில் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த திட்டமிடப்பட்டது. அதன்படி, 9.30 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார் ஆளுநர் ரவி. அவரை வரவேற்ற சபாநாயகர் அப்பாவு, காவல்துறை மரியாதைக்கு பின் பேரவைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே வந்து வணக்கம் தெரிவிக்கும் முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும் ஆளுநர் உட்கார்ந்திருந்த சபாநாயகர் இருக்கைக்கு முன் வேல்முருகன் உடன் கூடிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மறுபுறம், ''யார் அந்த சார்?'' என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக கோஷத்தை முன்வைத்தனர். இருதரப்பையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், "தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டார். எனினும், எம்எல்ஏக்கள் தங்கள் கூச்சலைத் தொடர்ந்து எழுப்பினர். இரண்டு நிமிடங்கள் காத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னர் தேசிய கீதம் அவமதிக்கப்படுவதாகக் கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். சட்டப்பேரவைக்கு வந்த சில நிமிடங்களிலேயே அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார். ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதால் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். முழுமையாக ஆளுநரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். "தமிழ்நாட்டின் வேளாண் விளைநிலங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு என தனி வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, உள்ளிட்ட பல முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என ஆளுநர் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post