சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ், அண்டை நாடுகள் கவலை - இந்தியா கூறுவது என்ன?

post-img
இந்த உலகம் மிகவும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தற்போது, சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்த புதிய வகை வைரஸ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன. "இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட்-19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது" என்று ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி மானிட்டரிங் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவின் அண்டை நாடுகள் இந்த நிலைமையைக் கண்காணித்து வருகின்றன. அதே நேரத்தில், இந்திய சுகாதார சேவைகளின் இயக்குநர், தற்போது இதுகுறித்துக் கவலை கொள்ள எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளார். மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகமும் இந்திய சுகாதார சேவைகள் இயக்குநரின் தலைமையிலான கூட்டுக் கண்காணிப்புக் குழுவும் இன்று (ஜனவரி 5) கூடி ஆலோசனை மேற்கொண்டன. அதில் சில விஷயங்கள் குறித்து முடிவுகள் எட்டப்பட்டன. சீனாவில் இந்த நோய் பாதிப்பு அசாதாரணமானது அல்ல. HMPV வைரஸ் இந்த நேரத்தில் தொற்றும் ஒரு பொதுவான நோய்க்கிருமியாகும். நிலைமையை அந்நாட்டு அரசு அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்த நோய் பாதிப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சீனாவை உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இந்த நோயாளிகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன. சீனாவில் பரவி வரும் இந்த புதிய வைரஸ் மக்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக கவலைகள் எழுந்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொரொனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாக நம்பப்படுகிறது. சீனாவின் அரசுசார் செய்தித் தளமான குளோபல் டைம்ஸ் கூற்றுப்படி, வட சீனா, பெய்ஜிங், தென்மேற்கு நகரமான சோங்கிங் மற்றும் தென் சீனாவிலுள்ள குவாங்டாங் மாகாணம் போன்ற பகுதிகளில் இந்த HMPV வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பர் 27ஆம் தேதி ராய்ட்டர்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், குளிர்காலத்தில் சுவாசப் பிரச்னைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சீனாவின் சுகாதார நிறுவனங்கள் புதிதாக ஒரு நோய் கண்காணிப்பு அமைப்பைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டன. இந்த கண்காணிப்பு முறை குறித்துப் பேசிய சீனாவின் தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் தலைவர் லி ஜென்லாங், இதன் மூலம் அறியப்படாத காரணங்களால் ஏற்படும் நிமோனியா பாதிப்புகள் கண்காணிக்கப்படும் என்று கூறினார். சீனாவில் சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மிகவும் அதிகரித்து இருப்பதாக சீன அரசு அறிக்கையைச் சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கைப்படி, ரைனோவைரஸ் மற்றும் இந்த HMPV வைரஸ் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சீனாவின் வடக்குப் பகுதியில்தான் பெரும்பாலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் எங்கிருந்து உருவாகிறது என்பது பற்றி எந்தத் தகவலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கு முன்பு, சீனாவில் பரவி வந்த இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பிற சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் குறித்து இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. "மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிவது, சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் வித்யாவதி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் என்று இந்தோனீசியாவின் செய்தி நிறுவனமான அந்தாரா தெரிவித்துள்ளது. சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவலை இந்தோனீசியா கண்காணித்து வருகிறது. தனது நாட்டிற்குள் வெளிநாட்டவர் நுழையும் வழிகளையும் இந்தோனீசியா கண்காணித்து வருகிறது. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளைத் தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டுள்ளது. ஹாங்காங்கில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்று ஹாங்காங் ஃப்ரீ பிரஸ் வெளியிட்ட சமீபத்திய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவை தவிர இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேறு எங்கும் அதிகமாக இல்லை என்று தொற்றுநோயியல் நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் இந்த ஹெச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்புகள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. குளிர்காலத்தில் வடக்கு அரைக்கோளப் பகுதியில் சுவாசம் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுவது வழக்கம்தான் என்று அவர் கூறினார். "குளிர்காலத்தில் சீனாவில் ஏற்படும் சுவாசப் பிரச்னைகளைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த தகவல்களை வழங்க சீனாவின் தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது" என்று அவர் கூறினார். "கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு இந்த நோய்த்தொற்று குறைந்த அளவில் பதிவானாலும், பாதிப்பின் வீரியம் கடுமையாக இருப்பதாகத் தெரிகிறது. சீனாவுக்கு பயணம் செய்வது பாதுகாப்பானது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார். சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அணடை நாடான இந்தியாவிலும் கவலைகள் எழுந்துள்ளன. ஆனால், இதுகுறித்து கவலை கொள்ள எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று இந்திய சுகாதார சேவைகள் துறை இயக்குநர் மருத்துவர் அதுல் கோயல் கூறியுள்ளார். இந்தியாவில் இதுபோன்ற வைரஸ் தொற்று ஏதும் இதுவரை பதிவாகவில்லை என்று அதுல் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். "இதுபோன்ற சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று பொதுவானதுதான். இதன் காரணமாக, சளி போன்ற நோய்கள் ஏற்படலாம். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த நோய்த்தொற்றால் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்," என்று அவர் கூறினார். "ஆனால் இது தீவிர பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. குளிர்காலத்தில் சில நோய் பாதிப்புகள் அதிகம் இருப்பது வழக்கம்தான். நிலைமையைச் சமாளிக்க இங்கு மருத்துவமனைகள் முழு தயார் நிலையில் இருக்கின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார். அதோடு, தொடர்ந்து நோய் பாதிப்பு குறித்த தரவுகளைக் கண்காணித்து வருவதாகவும், கடந்த ஆண்டு டிசம்பரில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் எந்த அதிகரிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார். சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்றுகளைக் கண்காணித்து வருவதாக இந்திய சுகாதார அமைச்சகம் முன்னதாக ஒரு இந்திய நாளிதழிடம் தகவல் தெரிவித்திருந்தது. சமீபத்திய நாட்களில், சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், குளிர்காலத்தில், சுவாசப் பிரச்னைகள் இந்தியாவிலும் ஏற்படுகின்றன, ஆனால் இதுவரை எதிர்பாராத அளவில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. சுவாசப் பிரச்னைகள், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்னைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்த விஷயத்தில் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பி.டி.ஐ செய்தி முகமையிடம் பேசிய டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைவர் மருத்துவர் சுரேஷ் குப்தா, "இதுவொரு புதிய வைரஸ் அல்ல" என்று கூறினார். "இருபது ஆண்டுகளாக இதைப் பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்கள். குளிர்காலத்தில் இதனால் நோய் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன. இது காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸை போன்றது." "இருமல், சளி போன்றவற்றுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளே இந்த நோய் பாதிப்புக்கும் கொடுக்கப்படும். பின்னர் நோயாளி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்" என்று மருத்துவர் சுரேஷ் குப்தா கூறுகிறார். "பெரும்பாலும் இதற்காக அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு பரிந்துரைக்கப்படவில்லை" என்று அவர் கூறுகிறார். அதே மருத்துவமனையில் மார்பு மருத்துவத் துறையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் பாபி பலோத்ரா கூறுகையில், "இதுவரை நாங்கள் பார்த்த அனைத்து நோய் பாதிப்புகளும் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தன" என்றார். இருப்பினும், ஏற்கெனவே ஆஸ்துமா மற்றும் க்ரானிக் அப்ஸ்ரக்டிவ் பல்மொனரி டிசீஸ் எனப்படும் நுரையீரல் நோய் பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். அவர்களுக்கு இந்த ஹெச்.எம்.பி.வி வைரஸ் நோய் பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் சிக்கல்கள் இருக்கலாம். அவர்களுக்கு சுவாசிப்பதில் அதிக சிரமம், சோர்வு மற்றும் காய்ச்சல் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். "இந்த வைரஸின் திரிபு இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது. கொரோனா வைரஸ் கடுமையான சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தியது போல இதில் பாதிப்புகள் எதுவும் காணப்படவில்லை. சீனாவில் தற்போது பரவி வரும் இந்த வகை வைரஸின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதும் வரும் நாட்களில் தெரிந்துவிடும்" என்றார் அவர். இந்த வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு பறவைகளில் தோன்றியது என்றும், அதன் பிறகு இந்த வைரஸ் சூழலுக்கேற்ப மீண்டும் மீண்டும் தன்னைத் தகவமைத்துக் கொண்டதாகவும் இப்போது இந்த வைரஸ் பறவைகளைப் பாதிக்காது என்றும் சயின்ஸ் டைரக்ட் என்ற ஆய்வுக்கட்டுரைகளுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "கடந்த 2001ஆம் ஆண்டு மனிதர்கள் மத்தியில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதுதான் இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கும் என்று கண்டறியப்பட்டது" என்று அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) குறிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கலாம். இதன் காரணமாக, நோயாளிக்கு காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். நோய் பாதிப்பு அதிகரித்தால், இந்த வைரஸால் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இந்த வைரஸ் பொதுவாக மூன்று முதல் ஆறு நாட்கள் உயிருடன் இருக்கும். தொற்று எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்து குறைந்த அல்லது அதிக நாட்களுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம். இந்த வைரஸ் இருமல் மற்றும் தும்மலின்போது வெளியாகும் சளி துளிகள் மூலம் பரவி மக்களிடம் நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கை குலுக்குவதன் மூலமோ, கட்டிப் பிடிப்பதன் மூலமோ அல்லது ஒருவருக்கொருவர் தொடுவதன் மூலமாகவோ இந்த வைரஸ் பரவலாம். இருமல் மற்றும் தும்மல் காரணமாக சளி துளிகள் ஓரிடத்தில் விழுந்து, அந்த இடத்தில் உங்கள் கைகளை வைத்த பிறகு, உங்கள் முகம், மூக்கு, கண்கள் அல்லது வாயைத் தொட்டால், இந்த வைரஸ் உங்களையும் பாதிக்கலாம். இந்திய சுகாதார சேவைகள் துறை இயக்குநர் மருத்துவர் அதுல் கோயல், ஹெச்.எம்.பி.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்தும், சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களிடம் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post