பாமக உடைகிறதா? குரு இடத்தில் முகுந்தன்? அன்புமணி பலம் குறைகிறதா?

post-img
சென்னை: டாக்டர் ராமதாஸுக்கும் அன்புமணிக்குமான மோதலை தொடர்ந்து அந்தக் கட்சி இரண்டாகப் பிளவுபடுமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது. அதனால் என்ன பாதிப்பு வரும்? யாருக்கு லாபம்? கடந்த 3ஆவது நாளாக பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த வாரம் புதுச்சேரியில் நடைபெற்ற பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் இவருக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் நடந்தது. ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தனுக்கு இளைஞர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை வழங்கினார். அதனை மேடையிலேயே எதிர்த்திருந்தார் அன்புமணி. ஆனால், தனக்கு வழங்கப்பட்ட பதவியை முகுந்தன் நிராகரித்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. அதற்கு விளக்கம் அளித்த ராமதாஸ், "பொதுக்குழுவில் அன்றே அறிவித்துவிட்டேன். அதற்கான நியமன கடிதமும் கொடுத்துவிட்டேன்" என்று உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால், அன்புமணி தொடர்ந்து மா.செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் கட்சிக்குள் புகைச்சல் அதிகரித்துள்ளது. இந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாமக ஏற்கெனவே வடதமிழ் நாட்டில் 3 இடத்திற்குப் போய்விட்டது. பல இடங்களில் வன்னியர் வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. விழுப்புரம், சிதம்பரம் என சில தொகுதிகளின் டெபாசிட் கட்சி வேட்பாளர்கள் இழந்திருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி மட்டுமே 2வது இடத்திற்கு வந்தார். ஏசி சண்முகம் கூட இரண்டாவது இடத்தைப்பிடித்த போதும் பாமக தன் பலத்தைத் தவறவிட்டுள்ளது. அதேபோல்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல். அதில் வன்னியர்களின் வாக்குகள் திமுக பக்கம் சென்றுள்ளது. திமுகவில் பல தலைவர்கள் இருந்தபோதும் மு.கருணாநிதியிடம் பேசி துணை முதல்வர் பதவியை ஸ்டாலினுக்கு வழங்கவேண்டும் என முதன்முதலாக வலியுறுத்தியது தான் தான் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இப்போது திமுகவின் மொத்த ஆதரவும் ஸ்டாலின் பக்கம்தான் உள்ளது. அவரது குடும்பத்தினர் திமுகவின் அசைக்கமுடியாத சக்தியாக மாறிவிட்டனர். ஆனால், திமுகவில் ஸ்டாலின் தான் அடுத்த தலைமையாக வரவேண்டும் என விதைப் போட்ட ராமதாஸ், தன் மகனின் தலைமையைக் கட்சிக்குள் ஓங்குவதை விரும்பாதது விநோதமாக இருக்கிறது என்கிறார்கள் பழக் கட்சி தொண்டர்கள். ராமதாஸ் உருவாக்கிய இயக்கம் என்பதில் சந்தேகம் இல்லை எனச் சொல்லும் அவர்கள் அவரது தியாகம் பெரிது என்பதையும் ஏற்கின்றனர். ஆனால், இளைய சக்தியாகக் கட்சியை அன்புமணியால்தான் வழி நடத்த முடியும் என்றும் வாதிடுகிறார்கள். அரசியல் விமர்சகரும் பாமகவில் முன்பு இருந்தவருமான ரவீந்திரன் துரைசாமி அன்புமணி பின்னால் பாமக தொண்டர்கள் நிற்பார்கள் என்கிறார். பாமகவிற்குள் நடக்கும் அதிகார சண்டை பற்றிப் பேசி இருக்கும் ரவீந்திரன் துரைசாமி, "அன்புமணிக்குத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் சக்தி இல்லை என ராமதாஸ் நினைக்கிறார். அவரைவிட முகுந்தன் இளைய சக்தியாகச் செயல்படுவார் என்று நம்புகிறார். காடுவெட்டி குருவுக்கு இருந்த இடத்தை முகுந்தனுக்குக் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார். அதை அன்புமணியால் ஏற்க முடியவில்லை. அவர் தன் குடும்பம் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறார். செளமியாவை ஏற்றுக்கொண்ட அவரால், முகுந்தனை ஏற்கமுடியவில்லை. இதனால் கட்சிக்குள் பிளவு உருவானால் பாமக காணாமல் போய்விடும். அதிகாரத்தைப் பலமுறை அனுபவித்தவர்கள். ஆகவே, அந்தளவுக்குக் கட்சியை உடைக்கும் யோசனையில் இறங்கமாட்டார்கள்" என்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post