மும்பை - நாக்பூர் ஹைவேயில்.. வரிசையாக பஞ்சர் ஆன வாகனங்கள்.. இரவில் நடந்த சம்பவம்.. என்னாச்சு

post-img
மும்பை: நாக்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ்வே ஆறு வழிச்சாலையில் அடுத்தடுத்து 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பஞ்சர் ஆகி நின்றன. சாலையில் திடீரென இரும்பு பிளேட் விழுந்ததால், அதில் ஏறி இறங்கிய வாகனங்கள் பஞ்சர் ஆகியுள்ளன. இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் தொலை தூரத்தில் இருந்து வந்த வாகன ஓட்டிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். மும்பை - நாக்பூர் 6 தேசிய நெடுஞ்சலையில் வாகனங்கள் அடுத்தடுத்து பஞ்சர் ஆகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 55 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மும்பை - நாக்பூர் தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய எக்ஸ்பிரஸ் வே -க்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. மும்பை நாக்பூர் நெடுஞ்சாலை இரு முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை என்பதால் வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும். இந்த சூழலில் கடந்த 29 ஆம் தேதி இரவு 10 மணியளவில் வனோஜோ டோல் அருகே சாலையில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு போர்டு விழுந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த வாகனங்கள் இரும்பு போர்டு கிடந்ததை கவனிக்காமல் அதன் மீது ஏறி இறங்கின. இதனால், வாகனங்களில் டயர் கிழிந்து பஞ்சர் ஆனது. அடுத்தடுத்து 50 வாகனங்கள் பஞ்சர் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்படி பஞ்சர் ஆகி வரிசை கட்டி நின்றன. சரக்கு வாகனங்ளும் இதில் தப்பவில்லை. வாகனங்கள் அடுத்தடுத்து பஞ்சர் ஆகி நின்றதால் , மும்பை - நாக்பூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொலை தூரங்களில் இருந்து வந்த வாகன ஓட்டிகள் பலரும் பஞ்சர் ஆகி வாகனம் நடு வழியில் நின்றதால் அடுத்து என்ன செய்வது என தவித்தபடி நின்றனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், இரும்பு போர்டை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இரும்பு போர்டு தவறுதலாக விழுந்ததா? அல்லது திட்டமிட்டு வீசப்பட்டதா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. வாகன ஓட்டிகள் பாதுகாப்பு முன்னதாக கடந்த ஜூன் மாதம் இதே நெடுஞ்சாலையில் சம்ருதி அருகே இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிராவிவின் மூன்றாவது மிகப்பெரிய சாலைத்திட்டமாக இந்த மும்பை - நாக்பூர் சாலை அமைக்கப்பட்டது. 55 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த சாலையில், வாகன ஓட்டிகளுக்கு சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நெடுஞ்சாலை ஆணையத்தின் கடமை எனவும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் விளக்கம் இதற்கிடையே, ஹைவேயில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றில் இருந்து கூர்மையான இரும்பு பிளேட் ஒன்று விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த இரும்பு பிளேட் மீது அதிவேகத்தில் சென்ற வாகனங்கள் ஏறி இறங்கியதில் அடுத்து பஞ்சர் ஆகியுள்ளன என்று போலீசார் கூறியுள்ளனர். NL 01 AE 7143என்ற பதிவெண் கொண்ட டிரக்கில் இருந்து விழுந்த இரும்பு பிளேட்டில் ஏறி இறங்கிய வாகனங்கள் பஞ்சர் ஆனதாகவும், உடனடியக வாகன ஓட்டிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாகவும் மகாராஷ்டிரா சாலை மேம்பாட்டுத்துறை இயக்குனர் அனில் குமார் கெய்க்வாட் கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post