கோவை மக்களே உஷார்.. விளம்பரம் பார்த்தாலே பணம் கொட்டும்.. மீண்டும் அதே மோசடி

post-img
கோவை: கோவை மாவட்டத்தில் விளம்பரம் பார்த்தாலே லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி மை வி3 ஆட்ஸ் என்ற நிறுவனம் மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அதே பாணியில் டிரேடிங் ஆப் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்தால் மட்டும் போதும் என்று கூறி நூதன மோசடி செய்வதாக கோவை 'MyV3Ads' என்ற நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். உரிமையாளர்கள் கைதைக் கண்டித்து மாவட்டத்தில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிமையாளர்கள் விஜயராகவன், சக்தி ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். "MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்று தகவல் வந்தால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அது சட்டவிரோதமானது, மோசடியானதாகும். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதே ஸ்டைலில் கோவையில் மற்றொரு மோசடி சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசைன். இவர் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர் சிக்கந்தர் பாஷா என்பவர் மூலமாக மதன்குமார் என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், மதன்குமார் ஜிபிஒய்-GBY என்ற டிரேடிங் நிறுவனத்தின் மொபைல் ஆப்பில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். சதாம் உசைனும் அவரது பேச்சை நம்பியுள்ளார். டிரேடிங் முதலீட்டிற்காக ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை மதன்குமாரை வெகுவாக ஈர்த்துள்ளது. இதையடுத்து, சதாம் உசைன் மதன்குமாரன் வார்த்தைகளை நம்பி தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கும் இதுகுறித்து கூறி ரூ. 1.30 லட்சத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், மதன் குமார் கூறிய டிரேடிங் ஆப் அவர்கள் கூறியதுபோல முறையாக வேலை செய்யவில்லை. இதையடுத்து சதாம் உசைன் மதனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் அதற்கு உரிய பதில் அளிக்காமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மதன் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதாம் உசைன் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த மதன்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெயின்டிங் கான்டிராக்டரான மதனின் பின்னால் மேலும் பலர் இருப்பது தெரியவந்துள்ளது. டிரேடிங் ஆப்பில் பணம் போட்டால் நல்ல லாபம் பெறலாம் என்று கூறி ஆசையைத் தூண்டி மக்களிடம் பணத்தை வாங்கிவிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஆடிட்டரான மணிவண்ணன், அவரது மனைவி மீரா, குணசுந்தரி, கணேஷ், மணி, கதிர்வேல், கார்த்திகேயன், விக்னேஷ் ஆகியோர் இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல, பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்ற எம்எல்எம் நிறுவனங்களை நம்ப வேண்டாம்." என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post