வேங்கைவயல்: 2 ஆண்டுகளாக தீராத மர்மமும் எழுப்பப்படும் சந்தேகங்களும் - பிபிசி கள ஆய்வு

post-img
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வு நடந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. குற்றவாளிகள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வேங்கைவயல் கிராமம் இப்போது எப்படியிருக்கிறது? திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், இடதுபுறம் உள்ளடங்கியிருக்கிறது முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமம். 2022ஆம் ஆண்டின் இறுதியில் இந்தக் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு, தமிழ்நாட்டையே உலுக்கியது. வேங்கைவயலில் உள்ள பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய மேல்நிலை குடிநீர் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் வெளியில் வந்தபோது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துபோனது. இந்தச் சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இதனைச் செய்த குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. அந்த ஊரை வந்தடையும் பாதைகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், வெளியூர் ஆட்கள் விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் உள்ளே சென்று செய்திகளை சேகரிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. "இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்தது ஒருபுறமிருக்க, அதைத் தொடர்ந்து நீடிக்கும் காவல்துறையின் கண்காணிப்பு எங்கள் ஊரைத் தனிமைப்படுத்திவிட்டது. இங்கே பெண் கொடுக்கக் கூட யாரும் தயங்குகிறார்கள்" என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த முருகன். வேங்கைவயல் சம்பவம் நடந்த இரண்டாம் ஆண்டு தினமான டிசம்பர் 26ஆம் தேதி, வேங்கைவயலுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் கடுமையான பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த சம்பவம் நடந்து சில வாரங்களிலிருந்தே இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்றாலும், இப்போது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே வெளியாட்கள் நிறுத்தி திருப்பி அனுப்பட்டனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு இப்போதும் ஒரு நெருக்கடியாக இருக்கும் இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம். முத்துக்காடு ஊராட்சியில் வேங்கைவயல் என்பது பட்டியல் பிரிவினர் மட்டும் வசிக்கும் ஒரு மிகச் சிறிய பகுதி. 2022ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில்தான் இந்த விபரீதம் நடந்தது. டிசம்பர் 21ஆம் தேதிவாக்கில் இந்த ஊரில் வசிக்கும் சதாசிவம் என்பவரின் பேரன் கோமித்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. "உடல்நிலை சரியில்லாமல் போனவுடன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கிருந்த மருத்துவர்கள் குடிநீரில்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று சொன்னார்கள். வீட்டில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் ஏதாவது பிரச்னையாக இருக்கும் என நினைத்தோம். இதற்குப் பிறகு எங்கள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது." "இதற்குப் பிறகு டிசம்பர் 23, 24, 25ஆம் தேதிகளில் தண்ணீர் வரவில்லை. தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுவதற்கு மின்சாரம் இல்லை என்றார்கள். டிசம்பர் 26ஆம் தேதி மீண்டும் தண்ணீர் வந்தது. அந்தத் தண்ணீர் துர்நாற்றத்துடன் வந்தது. இதையடுத்து தொட்டியின் மீது ஏறிப் பார்த்தபோது, அதில் மனிதக் கழிவு இருந்தது. இதற்குப் பிறகு கவுன்சிலருக்குச் சொன்னோம். ஊர்த் தலைவரின் கணவர் முத்தையா வெகுதாமதமாக அங்கு வந்து சேர்ந்தார். பிறகு வெள்ளனூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அங்கிருந்து கார்த்தி என்ற காவலர் ஏறிப் பார்த்தார்." "தண்ணீரைத் திறந்துவிடக் கூடிய காசி விஸ்வநாதன் என்ற நபரும் முத்தையாவும் எங்களை அழைக்காமல் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்குப் பிறகு அரசு மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் அங்கே வந்துவிட்டார்கள். தொட்டியிலிருந்து மலத்தை எடுத்த பிறகு, அதிலிருந்த தண்ணீரைத் திறந்துவிட முடிவுசெய்தார்கள். நான், சதாசிவம் போன்றவர்கள் 'அதுதான் ஆதாரம், திறந்து வெளியேற்றிவிட வேண்டாம்' என்று சொன்னோம். ஆனால், முத்தையா பேச்சைக் கேட்டு அவர்கள் தண்ணீரை திறந்துவிட்டார்கள். இதற்குப் பிறகு பல முறை டேங்க் சுத்தப்படுத்தப்பட்டது. பழைய குழாய்களை மாற்றிவிட்டு புதிய குழாய்கள் போடப்பட்டன. இதற்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, எஸ்.பி. வந்திதா பாண்டே, டிஎஸ்பி ராகவி ஆகியோர் வந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களிடம் விசாரணை நடத்தினார்" என நினைவுகூர்கிறார் வேங்கைவயலைச் சேர்ந்த முருகன். இறையூர் - வேங்கைவயல் பகுதியில் இரண்டு மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் இருந்தன. ஒன்று 30,000 லிட்டர் கொள்ளளவுள்ள பெரிய தொட்டி. அதில் இருந்தே அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது. சர்ச்சைக்குள்ளான மற்றொரு தொட்டி, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் வெள்ளோட்டத்திற்காகக் கட்டப்பட்டது. வெள்ளோட்டம் முடிந்த பிறகு அந்தத் தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. சில நாட்களில் வேங்கைவயல் பகுதிக்கென தனியாக ஆழ்துளைக் கிணறு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதால், சம்பவம் நடப்பதற்கு 9 மாதங்களுக்கு முன்பாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, சிறிய தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டது. அதிலிருந்து வேங்கைவயல் பகுதிக்கு மட்டும் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது. அந்தக் குடிநீர் தொட்டியில்தான் மலம் கலக்கப்பட்டது. "எல்லோருக்கும் தண்ணீர் விநியோகிக்கப் பயன்படும் பெரிய தொட்டியிலிருந்தே எங்கள் பகுதிக்கும் தண்ணீர் வழங்கப்படுவது தொடர்ந்திருந்தால், இதுபோல யாராவது செய்திருப்பார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சதாசிவம். விவகாரம் பெரிதான நிலையில், டி.எஸ்.பி. ரமேஷ் கண்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. 2023ஆம் ஆண்டு ஜனவரியில் வழக்கு குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான 35 பேர் கொண்ட குழு விசாரிக்க ஆரம்பித்தது. இந்தக் குழு பலரிடம் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொண்டது. இதற்கு நடுவில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. 2023 செப்டம்பர் மாதத்தில் அந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அளித்தது. இந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த பால்பாண்டி மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. கல்பனா தத் நியமிக்கப்பட்டார். இதுவரை மொத்தமாக 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளும் ஐந்து பேரிடம் குரல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் இந்த வழக்கில் யாரும் கைதுசெய்யப்படவில்லை. "இரண்டாண்டுகளாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களையே குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். ஆரம்பத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவரை குற்றவாளியாக்க முடிவுசெய்தார்கள். அதற்குப் பிறகு காவலராக இருக்கும் முரளி என்பவரை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். இதுபோலச் செய்துவிட்டு, அதே தண்ணீரைக் குடிக்க யாராவது முன்வருவார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் முருகன். சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் தற்போதுவரை உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. "வெளியிலிருந்து வருபவர்கள் உள்ளே சென்று புதிதாக பிரச்னைகள் எதையும் ஏற்படுத்திவிடாமல் இருப்பதற்காகத்தான் வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை" என்கிறது காவல்துறை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க காவல்துறையின் கெடுபிடி காரணமாக, தங்கள் நிம்மதியே போய்விட்டது என்கிறார்கள் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். "இரண்டு ஆண்டுகளாக நிம்மதியே இல்லை. எங்கள் பசங்களுக்கு யாரும் பெண் தருவதில்லை. வேங்கைவயல் என்றாலே தயங்குகிறார்கள். சொந்த பந்தங்கள் நிம்மதியாக வர முடியவில்லை. யார் மரணத்திற்காவது வாகனத்தில் சென்றால் மறிக்கிறார்கள். மலத்தைப் போட்டவன் மருந்தைப் போட்டிருந்தால் நிம்மதியாக செத்துப் போயிருக்கலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. எத்தனை ஆண்டுகள் போனாலும் டிசம்பர் 26ஆம் தேதி வந்தால், இனி இந்தச் சம்பவம்தானே நினைவுக்கு வரும்?" என்கிறார் முருகன். மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்ட போது, "இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டன. தற்போது விவகாரம் காவல்துறையின் வசம் இருக்கிறது. வேறு ஏதும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே, கிராமத்தோடு சம்பந்தப்படாத நபர்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை" என்று தெரிவித்தனர். "இதைவிட மோசமான சம்பவம் என்ன நடந்துவிடப் போகிறது? இப்போது இவ்வளவு காவல்துறையை குவிக்கிறார்களே. இன்றுதான் குற்றவாளியை பிடிக்கப் போகிறார்களா? இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை அரசு வைக்க வேண்டும்" என்கிறார் சதாசிவம். இந்த விவகாரத்தை விசாரித்து வரும் தஞ்சாவூரில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத்தின் அலுவலகம், விசாரணை தொடர்பான எந்தத் தகவலையும் தர விரும்பவில்லை. "இது ரொம்பவும் சென்சிடிவான விவகாரம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என்பதோடு முடித்துக்கொண்டனர். வேங்கை வயல் மக்களைப் பொருத்தவரை இந்த ஊரில் உள்ள மற்றொரு சாதியினரே இந்தச் செயலைச் செய்திருக்க வேண்டும் எனக் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், அந்தத் தரப்பிலிருந்து இது பற்றிப் பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. ஊர்த்தலைவரின் கணவர் முத்தையாவிடம் கேட்டபோது, "காவல்துறை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இது குறித்து எதுவும் பேச நாங்கள் விரும்பவில்லை" என்று மட்டும் சொன்னார். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் போராட்டங்களை நடத்தியதோடு, தொடர்ந்து கவனித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் பிரிவைச் சேர்ந்த விடுதலைக் குமரன், இது ஒரு நாளில் நடந்திருக்கக் கூடிய சம்பவமல்ல என்கிறார். "இது ஒரே ஒரு நபர் செய்த காரியமாகத் தெரியவில்லை. ஒரு நாளில் இது நடக்கவில்லை. பல நாட்கள் நடந்திருகிறது. நீண்ட விசாரணைகள் நடந்த பிறகும் வழக்கில் முன்னேற்றமில்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல்தான் காலதாமதமாகிறதா என்ற கேள்வி இருக்கிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, வெளியில் சொல்லப்படவில்லையோ என்ற சந்தேகமும் இருக்கிறது" என்கிறார் அவர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post