ஆட்டம் போட்ட அதிபர்! மாலத்தீவில் ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சித்ததா? வெளியான பரபர தகவல்

post-img
வாஷிங்டன்: மாலத்தீவில் தற்போது முகம்மது முய்சு அதிபராக உள்ளார். இவர் பதவிக்கு வந்ததில் இருந்தே இந்தியாவுடனான உறவில் விரிசல் போக்கு ஏற்பட்ட நிலையில், முகம்மது முய்சுவை தகுதி நீக்கம் செய்ய எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் இதற்காக இந்தியாவிடம் இருந்து பண உதவி கோரப்பட்டதாகவும் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மாலத்தீவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சீனாவுக்கு நெருக்கமாக அறியப்பட்ட முகம்மது முய்சு அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவில் கசப்புணர்வு ஏற்பட்டது. இந்திய பெருங்கடலில் அமைந்து இருக்கும் சிறிய தீவு நாடாக இருந்தாலும் மாலத்தீவு, இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான நாடாக உள்ளது. இதனால், மாலத்தீவை வளைத்து போட சீனா சதித்திட்டம் தீட்டி வருகிறது. முகம்மது முய்சு அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே மாலத்தீவில் மீண்டும் சீனாவின் ஆதிக்கம் தலை தூக்கியது. போதாக்குறைக்கு மாலத்தீவு முன்னாள் அமைச்சர்கள் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்தது என இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவு இதுவரை இல்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், அமெரிக்காவை சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டு இருக்க கூடிய செய்தி சர்வதேச அளவில் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. மாலத்தீவில் ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாகவும் இதற்கு இந்தியாவிடம் பண உதவியை மாலத்தீவு எதிர்க்கட்சிகள் கேட்டதாகவும், இந்திய உளவு அதிகாரிகள் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. 'Democratic Renewal Initiative' என்ற தலைப்பில் ஆவண செய்தி ஒன்றை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மாலத்தீவில் அதிபர் முகம்மது முய்சுவை பதவி நீக்கம் செய்ய ஏதுவாக அவருக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வரும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. முகம்மது முய்சு கட்சியை சேர்ந்த எம்பிக்கள் உள்பட மொத்தம் 40 எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க திட்டமிட்டனர். இதற்காக 87 மில்லியன் மாலத்தீவு ரூபியா ( 6 மில்லியன் டாலர்) தேவைப்பட்டதாகவும், இந்த தொகையானது இந்தியாவிடம் கேட்கப்பட்டதாகவும் மாலத்தீவு அதிகாரிகள் இருவர் கூறினர். இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பை சேர்ந்த இருவர் ஜனவரி 2024-ல் மாலத்தீவு எதிர்க்கட்சிகளிடம், முகம்மது முய்சுவை அதிகாரத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக ரகசியமாக ஆலோசித்ததாகவும், இந்த ஆலோசனை நடைபெற்ற சில வாரங்களில் இதற்கான திட்டம் வெளிப்பட்டது. எனினும், பல மாதங்களாக பேசப்பட்ட போதிலும் போதிய எம்பிக்கள் ஆதரவு இல்லாததால், அதிபரை தகுதி நீக்கம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது. மாலத்தீவில் ஆட்சியை கவிழ்க்க இந்திய உளவு அமைப்பான ரா அதிகாரிகள் ஆலோசித்ததாக கூறும் வகையில் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி மாலத்தீவு அரசியல் வட்டாரத்தில் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், ரா அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் மூத்த அதிகாரிகள் ஒப்புதல் அளித்தார்களா? என்று தெரியவில்லை என வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. மாலத்தீவு அதிபருக்கு எதிரான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால், அதை நிறைவேற்ற முடியவில்லை எனவும் மாலத்தீவை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. எனினும், இந்த தகவலை முற்றிலும் நிராகரித்துள்ள முன்னாள் அதிபர் முகம்மது நசீம், மாலத்தீவு அதிபருக்கு எதிரான சதித்திட்டம் பற்றி எனக்கு தெரியாது. சிலர் எப்போதும் சதித்திட்டத்துடன் இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒருபோதும் ஆதரவு அளிக்காது" என்று கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post