சென்னை: பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்குழுவில், வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அதானி மின் வாரிய முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாமக சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாக இடம் பெறப் போகிற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல், இப்போது நாம் சந்திக்கப் போகும் தேர்தல் 8ஆம் சட்டப் பேரவைத் தேர்தல் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி அதிகார இலக்கை எட்டிப் பிடிப்பதற்கான தேர்தல் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். இதை மனதில் கொண்டு தான் அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி வருகிறது.
2026ஆம் ஆண்டில் வர வேண்டிய சட்டப் பேரவைத் தேர்தல் ஆட்சியாளர்களின் அச்சம் காரணமாக முன்கூட்டியே நடத்தப்பட்டாலும் கூட, அதை எதிர்கொள்ள வலிமையுடனும், நம்பிக்கையுடனும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகியிருக்கிறது.
இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் அமைந்த ஆட்சிகளில் மிகவும் மோசமான, மக்களால் மிகக் கடுமையாக வெறுக்கப்படும் ஆட்சி என்றால் அது இப்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி தான். பள்ளிக்கூடங்களில் தொடங்கி மருத்துவமனை முதல் நீதிமன்றம் வரை அனைத்து இடங்களும் கொலைக்களங்களாகி விட்டன. மக்கள் வாழவே முடியாது என்று கூறும் அளவுக்கு மின்சாரக் கட்டணம், சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி, பத்திரப்பதிவுக் கட்டணம், வாகன வரி உள்ளிட்ட அனைத்தும் இந்த ஆட்சியில் உயர்த்தப்பட்டு விட்டன.
மழை, வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய அரசு, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டு பல்லாயிரம் கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது. வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணத்தை வழங்குவதில் கூட ஒரு தரப்பு மக்களிடம் மாற்றாந்தாய் மனதுடன் நடந்து கொண்டது. மக்களுக்குத் தேவையான கல்வியையும், சுகாதாரத்தையும் வழங்குவதற்கு பதிலாக மதுவை ஆறாக ஓட விட்டும், தெருவுக்கு தெரு நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுக்கத் தவறியும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கலாச்சார சீர்கேட்டை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.
இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களின் எதிர்காலத்திற்காக 5.5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த மூன்றரை ஆண்டுகளில் காலியான இடங்களைக் கூட நிரப்ப மறுக்கிறது. அதன் விளைவாக தமிழக அரசுத் துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை 6.25 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அவை அனைத்தும் நிரப்பப்படால் அதே எண்ணிக்கையிலான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறும். ஆனால், அதை செய்யத் தவறிய திமுக அரசு, எப்போதாவது நிரப்பப்படும் மிகக் குறைந்த அளவிலான காலிப் பணியிடங்களையும் குத்தகை முறையில் நிரப்பி, அரசு ஊழியர்களை கொத்தடிமைகளாக நடத்துகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி நிலைப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் மிகக் கடுமையான மன உளைச்சலில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் எதிரான இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து ஆள்காட்டி விரல் என்ற ஆயுதத்தை தயார்படுத்திக் கொண்டு காத்திருக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் கூடுதலாக தயாராக வேண்டும்.
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தை புதிய வாய்ப்புக்கான பயணத்தின் தொடக்கமாக கருதிக் கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் இந்த பொதுக்குழு முடிந்து சொந்த ஊர் திரும்பியதுமே புதிய பயணத்தைத் தொடங்க வேண்டும். பா.ம.க.வினர் அனைவரும் தாங்கள் வாழும் தெருக்களில் தொடங்கி கிளை அளவிலும், ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி பரப்புரை செய்யத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், வாக்குச் சாவடி குழுக்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை புதிய வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே போராடும் கட்சி என்பதை அனைவரும் அறிவர். புதிதாக பிறக்கவிருக்கும் புத்தாண்டிலும் மக்கள் நலனுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் தொடர்ச்சியான போராட்டங்களைப் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும். பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக இயக்கங்களை நடத்தும். ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் மக்கள் விரோத அரசை அகற்றி, பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியை அமைப்பதற்கான வலுவான அடித்தளத்தை கட்டமைக்கும் ஆண்டாக 2025ஆம் ஆண்டை பயன்படுத்திக் கொள்ள பா.ம.க. புத்தாண்டு பொதுக்குழு உறுதியேற்கிறது.
தீர்மானங்கள்:
1. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கட்டாயமாக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்!
இந்தியாவில் சமூகநீதியைப் பாதுகாக்கவும், சமூகங்களின் கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பு நிலையை ஆய்வு செய்யவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் ஆகும். எனவே, தேசிய அளவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 2008ஆம் ஆண்டில் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் 140க்கும் மேற்பட்ட ஓ.பி.சி. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளை பெற்று, 50 உறுப்பினர்களுடன் சென்று அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் அவர்களிடம் வழங்கினார். அதன் பயனாக, 2011ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, அதற்கு மாற்றாக, சமூக பொருளாதார, சாதி, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குளறுபடிகள் நிறைந்த அதன் விவரங்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் இடஒதுக்கீட்டையும் அதன் அளவையும் உறுதி செய்ய சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு வசதியாக ஆங்கிலேயர் ஆட்சியில் நடத்தப்பட்டது போன்று 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும். இதற்காக 1948ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340 (1)வது பிரிவில் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கை நிலையை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், எதன் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை நிலை ஆய்வு செய்யப்படும் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சாதிவாரி மக்கள்தொகை மற்றும் சமூக, பொருளாதார காரணிகளின் அடிப்படையில்தான் எந்தவொரு மக்களின் வாழ்நிலையையும் ஆய்வு செய்ய முடியும் என்பதால், அதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 340 (1) பிரிவில் திருத்தம் செய்யப்பட வேண்டும்; அதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை அரசியலமைப்புச் சட்ட கடமையாக மாற்ற வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கோருகிறது.
2. தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தி.மு.க. அரசுக்கு கண்டனம்!
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அந்த இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க கடந்த 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று கூறி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை திமுக அரசு தட்டிக்கழித்து வருவது கண்டிக்கத்தக்கது. சமூகநீதியைப் பாதுகாப்பதற்காக, 2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், பல உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.
கர்நாடகா, பீகார், ஒதிசா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் கூட, சாதிவரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுப்பதன் மூலம், தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதியை ஏற்படுத்துவதில் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் மீண்டும் அப்பலப்படுத்திக்கொள்கிறார். 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு எப்போது வேண்டுமானாலும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம். அந்த நேரத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில், 69% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால், அதற்கான பழியை திமுக அரசுதான் ஏற்க வேண்டியிருக்கும்.
எனவே, தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்- என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.
3. மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி. உள்இடஒதுக்கீடு: ரோகிணி ஆணைய அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்!
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இடஒதுக்கீட்டில், உள்இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரோகிணி அவர்கள் தலைமையில் ஆணையம் ஒன்றை கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அமைத்து மத்திய அரசு ஆணையிட்டது. 3 மாதத்திற்குள் ரோகிணி ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தாலும் கூட, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தான் ரோகிணி ஆணையம் அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாழ்நிலை குறித்து அதிர்ச்சியான உண்மைகள் இடம் பெற்றுள்ளன.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 2633 சாதிகளில் 10 சாதிகள் மட்டுமே, அப்பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும், 506 சமுதாயங்கள் 22.32 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன. 27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் 97.34 விழுக்காட்டை 656 சாதிகள் கைப்பற்றிக் கொள்ளும் நிலையில் மீதமுள்ள 2.66 விழுக்காட்டை 994 சாதிகள் பகிர்ந்து கொள்கின்றன. 983 சாதிகளுக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று ரோகிணி ஆணையம் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் மீது இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஓ.பி.சி. வகுப்பில் உள்ள 2633 சாதிகளில் சுமார் 2 ஆயிரம் சாதிகள் 27% இடஒதுக்கீட்டால் பயன்பெறாத நிலையில், அதற்கான தீர்வாக ரோகிணி ஆணையம் அளித்திருக்கும் பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
4. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும்!
இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் அமைக்கப்பட்ட எட்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. சரியான நேரத்தில் 9ஆவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தால் அதன் பதவிக்காலமும் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைந்திருக்கும்.
ஆனால், 9ஆவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஒரு தலைவரையும், ஒரே ஒரு உறுப்பினரையும் மட்டும் நியமித்த மத்திய அரசு, துணைத் தலைவரையும் மேலும் இரு உறுப்பினர்களையும் இன்றுவரை நியமிக்கவில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படாததால், கிரீமிலேயர் வரம்பை உயர்த்துவது உள்ளிட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் சார்ந்த பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத் தலைவர், உறுப்பினர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு வலியுறுத்துகிறது.
5. வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை; உரிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதன்பின் இன்றுடன் 1004 நாட்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எதையும் எடுக்காத தமிழக அரசுக்கு பா.ம.க. பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது.
தமிழ்நாடு அரசு நினைத்தால் அதிகபட்சமாக ஒரு வாரத்தில் தரவுகளைத் திரட்டி, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க முடியும். ஆனால், உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1004 நாட்கள் ஆகிவிட்டன. வன்னியர் இடஒதுக்கீடு குறித்து அறிக்கை அளிக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டு வரும் ஜனவரி 11ஆம் தேதியுடன் இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. ஆனால், வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக இடைக்கால அறிக்கையைக்கூட தமிழக அரசிடம் ஆணையம் தாக்கல் செய்யவில்லை. தமிழக அரசும் இதுதொடர்பாக எந்த வினாவும் எழுப்பாமல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டித்துக்கொண்டே செல்கிறது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க திமுக அரசுக்கு ஆர்வம் இல்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.-
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மிக மிக பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் நோக்குடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து அறிக்கை பெற்று, வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.
6. அதானி ஊழல் & தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உள்ள தொடர்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
அதானி குழுமத்தின் ஊழல்கள் தொடர்பாக, அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் அந்நாட்டின் புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் இடம் பெற்றுள்ளன. அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்கு இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக அதன் பிரதிநிதிகளுக்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக, அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என்ற அவப் பெயர் அமெரிக்கா வரை ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் நடந்த உண்மை என்ன? அதானி குழுமத்தின் மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரதிநிதிகளுக்கு கையூட்டு வழங்கப் பட்டதா? அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அது யாருக்காக, யாரால் பெறப்பட்டது? என்பது பற்றிய அனைத்து உண்மைகளும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால், உண்மை வெளி வந்தால் தங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, இது தொடர்பாக விசாரணைக்கு ஆணையிட தமிழ்நாடு அரசு தயங்குகிறது. அதானி குழுமத்திடம் இருந்து தமிழக ஆட்சியாளர்கள் கையூட்டு வாங்கவில்லை என்றால், அவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் என்பது தெரியவில்லை. அதானி ஊழலில் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உள்ள தொடர்பு குறித்த உண்மைகளைக் கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக கோருகிறது.
7. தமிழ்நாட்டில் 3 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2022, 2023, 2024 ஆகிய 3 ஆண்டுகளிலும் மின்கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த 3 ஆண்டுகளையும் சேர்த்து சுமார் ரூ.40,000 கோடி அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். மின்சாரக் கட்டணத்தை செலுத்த வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைக் கூட தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னொருபுறம் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட, மின்சார வாரியம் இழப்பில் இருந்து விடுபட்டு இலாபத்தில் இயங்கத் தொடங்கவில்லை. இதற்குக் காரணம் மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் தான். ஆட்சியாளர்களின் ஊழல்கள் மற்றும் நிர்வாக திறமையின்மைக்கான தண்டனையை பொதுமக்கள் அனுபவிக்கக் கூடாது. எனவே, கடந்த 3 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட கட்டணத்தால் ஏற்பட்ட சுமையை ஓரளவுக்காவது குறைக்கும் வகையில், குறைந்தது 10% மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.
8. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பெய்த மழை, சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து பெய்த மழையால், காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துவிட்டதாக தமிழ்நாடு அரசே ஒப்புக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல.
ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய ரூ.30,000 செலவாகும் நிலையில், ரூ.6800 மட்டுமே நிவாரண உதவி வழங்க முடியும் என்று தமிழக அரசு கூறுவது பெரும் அநீதி. பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும் வரை காத்திருக்காமல், தமிழகஅரசு சொந்த நிதியில் இருந்து இதை வழங்க வேண்டும்.
அதேபோல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனைத்து குடும்பங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு ரூ.6,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.
9. மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் அதன் பின் இரு முறை பெய்த மழைக் காரணமாக, மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 6ஆம் தேதி தமிழ்நாடு வந்த மத்திய அரசின் குழு திசம்பர் 8ஆம் தேதி வரை பாதிக்கப் பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது. அக்குழு தில்லி திரும்பி 20 நாட்கள் ஆ-கியும் இன்றுவரை குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை, மத்திய அரசும் நிதி வழங்கவில்லை.
புயல், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுளள பாதிப்புகளை மாநில அரசு மட்டுமே அதன் சொந்த நிதியைக் கொண்டு சரி செய்ய முடியாது. இதற்கு மத்திய அரசின் உதவி கட்டாயம் தேவை. அதுவும் உடனடியாக தேவை. அந்த உதவியை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையும்கூட. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்காக மத்திய அரசு உடனடியாக நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
10. தமிழ்நாட்டு உழவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பரிந்துரைக்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்!
உலகிற்கே உணவு படைக்கும் கடவுள்கள் என்று உழவர்கள் போற்றப்பட்டாலும் கூட, உலகின் சபிக்கப்பட்ட இனம் உழவர்கள் தான் என்று கூறும் வகையில் தான் அவர்களின் நிலைமை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான உழவர்கள் மீள முடியாத அளவுக்கு கடன் சுமையில் சிக்கியுள்ளனர். கடன் சுமையை தாங்க முடியாமல் தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். பயிர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை வழங்கப்படாதது, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் உரிய இழப்பீடு வழங்காதது, வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறியது போன்றவைதான் உழவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும், அவர்கள் கடன் வலையில் சிக்கிக் கொள்வதற்கும் முக்கிய காரணம்.
இந்தியாவில் முழுக்க முழுக்க உழவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 27 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாக உழவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆராய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு, அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உழவர்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டின் நிலவரப்படி தமிழ்நாட்டு உழவர்கள் மொத்தம் ரூ.3.47 லட்சம் கோடி கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வருவாயைப் பெருக்கும் வகையில், பயனுள்ள திட்டங்கள் எதுவும் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படவில்லை.
உழவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு, அவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படுவதுடன், அனைத்து விளைபொருட்களும் குறித்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டால்தான் உழவுத் தொழிலை இலாபமானதாக மாற்ற முடியும். அப்போது தான் உழவர்கள் கடன் சுமையின்றி நிம்மதியாக வாழ முடியும். இதை உறுதி செய்யவேண்டிய முதன்மைக் கடமை மாநில அரசுக்கு தான் இருக்கிறது. எனவே, உழவர்களின் அனைத்து பிரச்சினைகள் குறித்து ஆராயவும், அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்து பரிந்துரைக்கவும் வசதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும்; அதன் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
11. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக் கொண்டுவர சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணை பெற்ற மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி!
கள்ளக்குறிச்சி நகரத்தை ஒட்டிய கருணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி நச்சு சாராயம் குடித்து 67 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்குக் காரணம் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நிர்வாகமும், கள்ளச்சாராய வணிகர்களுக்கு அனைத்து வகைகளிலும் ஆதரவளித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளும் தான். இந்த உண்மைகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் வலியுறுத்தினர்.
ஆனால், கள்ளச்சாராய சாவுகளின் பின்னணியில் ஆளும் திமுக இருந்தது அம்பலமாகிவிடும் என்பதற்காக, சிபிஐ விசாரணைக்கு ஆணையிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. எனினும், இது குறித்து மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கள்ளச்சாராய சாவுகள் விசாரணையை சிபிஐக்கு மாற்றி ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாணையை உறுதி செய்திருக்கிறது. இதன்மூலம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளின் பின்னணி குறித்த உண்மைகள் வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதறக்குக் காரணமான மருத்துவர் அய்யா, மருத்துவர்அன்புமணி இராமதாஸ், வழக்கறிஞர் பாலு ஆகியோருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறது.
12. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து, அதன் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, மூன்றரை ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு முன் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையிலேயே வெளிப்படையாக அறிவித்தார். அதற்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அரசு கூறினாலும், அதை செயல்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
மாறாக, ஓய்வூதிய இயக்குநரகத்தை கடந்த மாதம் மூடியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை திமுக அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. இந்தியாவில் மேற்குவங்கம், ராஜஸ்தான், கர்நாடகம், இமாலயப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, தமிழக அரசு மட்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தயங்குவது ஏன்? என்பது தெரியவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த பாமக கோருகிறது.
13. ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களும், மருத்துவர்களும் ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பன உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய விகிதம் வேண்டும் என்று மாநில அரசு மருத்துவர்களும், 2009&ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி, அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்று அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் தரப்பினரை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, காவல்துறையை ஏவிவிட்டு, போராட்டக் காரர்களை கைது செய்வது உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
அரசு எந்திரம் தடையின்றி செயல்படுவதற்கு அரசு ஊழியர்கள் தான் காரணம் ஆவர். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் அவர்களை ஏமாற்ற முயல்வது நியாயமல்ல. எனவே தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
14. காலியாக உள்ள 6.25 லட்சம் அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்குச் சென்று கவுரவமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருந்த பல லட்சம் இளைஞர்களின் கனவில் திமுக அரசு மண்ணை அள்ளிப் போட்டு இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வாக்குறுதிகளை திமுக மறந்துவிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை சுமார் 68,000 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 32,774 பேருக்கு மட்டும் தான் நிரந்தர பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 36,000 பேருக்கு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் தற்காலிக பணிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளில் 2,000 ஆசிரியர்கள் மட்டும் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கும் கூடுதலான அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றாகக் கூட புதிய நியமனங்கள் செய்யப்படவில்லை. இன்றைய நிலவரப்படி, தமிழ்நாடு அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்திருக்கிறது. அரசு வேலைக்காக ஏங்கும் படித்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், காலியாக உள்ள 6.25 லட்சம் பணியிடங்களையும் தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
15. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் அரிட்டாபட்டி உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத் தக்கது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ஏலம் மூலம் வழங்குவதற்கு மத்திய அரசுடன் அனைத்து வழிகளிலும் ஒத்துழைத்துவிட்டு, இப்போது எதுவுமே தெரியாததைப் போன்று தமிழக அரசு நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது. இயற்கையையும், சுற்றுச்சூழலையும், வேளாண்மையையும் பாதித்த எந்த திட்டத்திற்கும் தமிழ்நாட்டில் அனுமதி அளிக்கக் கூடாது. அதன் அடிப்படையில், டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும்.
16. என்.எல்.சி. நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்!
கடலூர் மாவட்டத்தின் வேளாண்மை, சுற்றுச்சூழல், சுகாதாரம் என அனைத்து வகையிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் என்.எல்.சி. நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகையை செவிமடுக்க தமிழக அரசு தயங்குகிறது. டங்ஸ்டன் சுரங்கம் தமிழ்நாட்டில் அமைந்தால், முதலமைச்சர் பதவியில் இருந்தே விலகுவேன் என்று சட்டப்பேரவையில் சவால் விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்.எல்.சி. சுரங்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை தடுக்கும் விசயத்தில் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறார். காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த போது, நானும் டெல்டாகாரன் தான் என்று கொந்தளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சார்ந்த சிக்கல்களில் மட்டும் அமைதி காப்பது அம்மாவட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.
என்.எல்.சி. அமைத்த சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றது, சுகாதாரக் கேடுகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் இருந்து கடலூர் மாவட்ட மக்களுக்கு விடுதலை அளிக்கும் வகையில், என்.எல்.சியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17. தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றரை ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளில் 60% பணிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அதனால் 18 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், களநிலவரம் அதற்கு முற்றிலும் எதிராக உள்ளன. திமுக அரசு ஒப்பந்தம் செய்து கொண்ட தொழில் முதலீடுகளில் 10% கூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் உண்மை ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மிகப் பெரிய அளவில் தொழில் முதலீடு வந்தது உண்மை என்றால், செயல்பாட்டுக்கு வந்த தொழில் திட்டங்கள் எவை?, அவை எங்கு, எந்த தேதியில் தொடங்கப்பட்டன?, எந்தெந்த தொழில் திட்டங்கள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பா.மக கோரி வருகிறது. ஆனால், அதற்கு பதிலளிக்க திமுக அரசு இதுவரை முன்வரவில்லை.
அரசின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் அனைத்து ஐயங்களும் போக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த தமிழக அரசின் தகவல்கள் மக்களின் ஐயங்களை மேலும் மேலும் அதிகரிக்கும் வகையில் இருப்பதால், அவற்றை போக்கும் நோக்குடன் தமிழ்நாட்டிற்கு இதுவரை வந்த தொழில் முதலீடுகள், அதனால் பயனடைந்தவர்களின் விவரங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
18. தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட அனைத்துப் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!
தமிழ்நாட்டில் கஞ்சா கிடைக்காத தெருவே இல்லை என்று கூறும் அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வணிகம் தலைவிரித்தாடுகிறது. கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், முதலமைச்சரிடம் நேரிலும் வலியுறுத்தப்பட்டது. கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் கூட, அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கஞ்சா மட்டுமின்றி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களும் அதிக அளவில் விற்கப்படுகின்றன.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள், தங்களின் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தடுமாறுகின்றனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் பெருகுவதற்கும் போதைக் கலாச்சாரம் தான் காரணமாக இருக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில், தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
19. தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், இதுவரை 500 மதுக்கடைகள் மட்டும்தான் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால், 600க்கும் மேற்பட்ட மனமகிழ்மன்றங்கள் திறக்கப்பட்டு அவற்றின் வாயிலாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக பார்த்தால், தமிழ்நாட்டில் மது விற்பனை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இளைஞர் நலனுக்கு நல்லதல்ல.
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4,800 மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக கோருகிறது.
20. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பாதுகாப்பு வழங்கத் தவறிய தமிழக அரசுக்கு கண்டனம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23&ஆம் தேதி இரவு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி ஒருவர் வன்முறை கும்பலால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள உண்மைகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தக் கொடுமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி இதற்கு முன்பே ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்; 15&க்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இத்தகைய குற்றவாளிகள் எளிதாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையும் அளவுக்குத் தான் பாதுகாப்பு மோசமாக இருக்கும் என்றால் அங்கு பயிலும் மாணவிகளின் நிலை வேதனையளிக்கிறது. இந்த கொடுஞ் செயலில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை மூடி மறைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய தமிழக அரசுக்கு இந்தப் பொதுக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து தண்டனைப் பெற்றுத் தருவதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு வலியுறுத்துகிறது.
21. தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை!
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 5 ஆயிரத்திற்கும் கூடுதலான கொலைகளும், 50 ஆயிரத்திற்கும் மேலான கொள்ளைகளும் நடந்துள்ளன. கொலை மற்றும் கொள்ளைகளைக் கட்டுப்படுத்த அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொலைக்குற்றங்களை துப்பு துலக்குவதிலும் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன் பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் 31 நாட்கள் ஆகின்றன. ஆனால், அந்த வழக்கில் இன்னும் துப்புத் துலக்கவில்லை. அதேபோல், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த மே மாதம் படுகொலை செய்யப்பட்டு, 7 மாதங்கள் ஆகும் நிலையில், அவரது கொலை வழக்கிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்த நிலையை மாற்றி, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்காக தமிழகத்தில் சட்டம்&ஒழுங்கைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
22. மேகதாது அணை கூடாது & காவிரி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண வலிமையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்!
மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி, மேகதாது அணைக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அண்மையில் கூட கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இது பற்றி வலியுறுத்தியுள்ளார். இது தவறு. மேகதாது அணை விவகாரத்தில் தேவையற்ற பதற்றங்களை ஏற்படுத்தி வரும் கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும்,
அதேபோல், காவிரியில் ஆண்டுக்கு 177.5 டி.எம்.சி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கும் போதிலும், அதை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை. கர்நாடக அணைகள் நிரம்பும் போது மட்டும் உபரி நீரை திறந்து விடும் கர்நாடக அரசு, வறட்சிக் காலங்களில் இருக்கும் நீரை பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை. இதற்கு ஒரே தீர்வு காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன் வலிமையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது தான் என்பதால், அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகளை தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தில் மாநில மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
23. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 ஆக உயர்த்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
முல்லைப்பெரியாறு அணை வலிமையாக இருப்பதாகவும், முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணைகளை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று கடந்த 2014ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதன்பின் 10 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது குறித்து உழவர் பேரியக்க மாநாடு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.
பேபி அணையை வலுப்படுத்துவதற்கு அங்குள்ள மரங்கள் வெட்டப்பட வேண்டும். அதற்கான அனுமதியைத் தர மறுக்கும் கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று அடிக்கடி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி, பேபி அணையை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24. ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்கவேண்டும்!
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள போதிலும், கிரீமிலேயர் தத்துவம் காரணமாக தகுதியுடைய பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவில்லை. கிரீமிலேயர் தத்துவம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக, இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் திணிக்கப்பட்டது ஆகும். இதனால், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் கிரீமிலேயர் வகுப்பினர் என்று கூறி, அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த இடங்களுக்கு தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, சில ஆண்டுகளுக்குப் பிறகு அவை பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு நிரப்பப்படுகின்றன. இது ஓ.பி.சி. வகுப்பினருக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும்.
இன்னொருபுறம் கிரீமிலேயர் பிரிவினரின் ஆண்டு வருமான வரம்பை கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தவில்லை. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப் படுவது மரபு என்றாலும்கூட, 2017 முதல் இந்த வரம்பு ரூ.8 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. ஓ.பி.சி. வகுப்பினருக்கு எதிரான மத்திய அரசின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
ஓ.பி.சி. வகுப்பினருக்கு உண்மையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய கிரீமிலேயர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதுவரை கிரீமிலேயர்களுக்கான வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.
25. தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் மக்கள் தொகையிலும், நிலப்பரப்பிலும் பெரிதாக உள்ள மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக மக்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, தஞ்சாவூரை பிரித்து கும்பகோணம் மாவட்டமும், கடலூரை பிரித்து விருத்தாசலம் மாவட்டமும், திண்டுக்கல்லை பிரித்து பழனி மாவட்டமும் புதிதாக அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் அது நிறைவேற்றப்படவில்லை.
சிறிய மாவட்டங்கள் தான் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து, தஞ்சை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மக்கள்தொகையும், நிலப்பரப்பும் அதிக உள்ள மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை பா.ம.க. பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
26. ஆன்லைன் ரம்மிக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறும் நடவடிக்கைகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என்றாலும் கூட, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகள் ஆன்லைன் சூதாட்டமாக கருதப்படாது என்று கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் ஆன்லைன் ரம்மி ஆட்டம் தலைவிரித்தாடுகிறது. ஏராளமான ஆன்லைன் ரம்மி செயலிகள் தொடங்கப்பட்டு, அவற்றின் மூலம் இளைஞர்கள் ஆன்லைனில் சூதாடி கோடிக்கணக்கில் பணத்தை இழப்பதுடன், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் 17 பேர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்டனர்.
ஆன்லைன் ரம்மி தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதுதான் இச்சிக்கலுக்கு தீர்வு ஆகும். ஆனால், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் இதுவரை வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதே நிலை நீடித்தால், லட்சக்கணக்கான குடும்பங்கள் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து வீதிக்கு வருவதையும், இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதையும் தடுக்க முடியாது. எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையை விரைவு படுத்தி, ஆன்லைன் ரம்மிக்கு தடைபெற அரசு முன்வரவேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.
27. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும்!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 109 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்காததன் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை தமிழக அரசு செய்து வருகிறது. 2015&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் இப்போது வழங்கப்படும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட 60% அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கூட அதை செயல்படுத்தாத திமுக அரசு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே இது காட்டுகிறது. அதிக நஷ்டத்திலும், கடனிலும் இயங்கும் மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் போது, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கக் கூடாது. அவர்களுக்கும் உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.
28. புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி: இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு வழங்க வேண்டும்!
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு விட்டன. 15&ஆம் முறையாக கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புதுவையின் இன்றைய மக்கள்தொகை 16 லட்சம். உலகில் இதை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட 82 நாடுகள் உள்ளன. 82 நாடுகளை விட அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நிலப்பரப்புக்கு மாநிலத் தகுதி வழங்க மறுப்பது நியாயமற்றது. எனவே, புதுவைக்கு மாநிலத் தகுதி வழங்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
29. புதுவை லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்!
புதுவை மாநிலம் திருக்கனூரை அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நிலையில், அதை மீண்டும் திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் புதுவையில் உள்ள உழவர்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆலை மூடப்பட்டிருப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கரும்புகளை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையை சரி செய்ய வேண்டிய அரசு, அந்த ஆலையை மது ஆலையாக மாற்றும் முயற்சிக்கு துணை போவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டதால் விவசாயிகள் மட்டுமின்றி, அதை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த 700&க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, புதுவை லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாகத் திறக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
30. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு இரங்கல்
இந்தியாவின் பிரதமராக பத்தாண்டுகளும், நிதியமைச்சராக ஐந்தாண்டுகளும் பணியாற்றிய முனைவர் மன்மோகன்சிங் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. தாரளமயமாக்கலை அறிமுகப்படுத்தி நவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு வழி வகுத்தவர். இந்தியாவின் பிரதமராக பணியாற்றிய காலத்தில் கல்வி உரிமைச் சட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் மன்மோகன்சிங் அவர்கள். மருத்துவர் அய்யா அவர்களின் தொடர்வலியுறுத்தல் காரணமாக மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியவர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தேசிய ஊரக நலவாழ்வு இயக்கம், புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், 108 அவசர ஊர்தித் திட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்தவர். உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.