அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேரணிக்கு அனுமதி மறுப்பு - திமுகவை விமர்சித்த அண்ணாமலை

post-img
சென்னை: விஜயகாந்த் மறைந்து ஓராண்டாகியும் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவரது நினைவு தினத்தையொட்டி வந்துள்ளனர் மக்கள எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று நன்றாக தெரிகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விஜயகாந்த் நினைவு தினப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். தமிழ்த் திரையுலகில் கோலோச்சி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் நினைவிடம் அமைந்துள்ள கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அவரது மகன்களும் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் நினைவிடத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விஜயகாந்தை நினைவுகூர்ந்து பதிவை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் லர் தூவி மரியாதை செலுத்தினர். விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேப்டனின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். தொடர்ந்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். புதிதாக கேப்டனைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்லப் போவதில்லை. 54 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர். எதைப் பற்றியும் யோசிக்காமல் அள்ளிக் கொடுத்தவர். தமிழகத்தில் ஒரு மாற்று சக்தி அரசியலில் ஜெயிக்க முடியும் என்பதை முதன்முறையாக உணர்த்தியவர். அவருடைய வழிகாட்டுதல்கள் எங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். மறைந்த கேப்டனின் அருள் நமக்கு எல்லோருக்கும் கிடைக்கும், தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, சுதீஷ், அவர்களின் மகன்களுக்கு அவருடைய அருள் இருக்கும். சுதீஷிடம் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியிருக்கிறோம். தமிழகத்திற்கு விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், விஜயகாந்த், பிரேமலதா 2014இல் பிரதமர் மோடியின் கைகளை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து ஆதரவாக இருந்தார்கள், அவர்களுக்கு நன்றி உணர்ச்சியுடன் நாங்கள் இன்றும் இருக்கிறோம். அரசியலைத் தாண்டி அன்பாகப் பழகக்கூடிய மனிதர்கள். விஜயகாந்த் என்னை தங்கச்சி என்று தான் அழைப்பார். பிரேமலதாவும், நானும் அக்கா என்று அழைத்துக் கொள்வோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு குடும்பம். விஜயகாந்த் மறைந்த பின்பும் கூட அவரது குரு பூஜைக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகிறார்கள் என்றால் விஜயகாந்த் அவர்கள் எத்தனை அன்பு வைத்திருந்தால், மக்கள் எவ்வளவு அன்பு வைத்திருந்தால் இத்தனை பேர் வந்திருப்பார்கள் என்பது தெரிகிறது. திரையுலகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வெளிப்படையாக மக்களோடு மக்களாக கலந்துகொண்டு மக்களின் அரசியல்வதியாக வலம் வந்தவர். திரையுலகினருக்கும் ஏகப்பட்ட நன்மைகளைச் செய்ய வந்துள்ளார். அவர் விதைத்த விதை தேசிய விதை. அது விருட்சமாக வந்து மக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், சுதீஷ் அவர்கள் நமது அலுவலகத்துக்கு வந்தபோது ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணி இருக்கும் என்றுதான் கூறினார்கள். நிகழ்வுக்கு ஒருநாள் முன்பு மாலையில் பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. முதலிலேயே சொல்லியிருக்கலாம். ஒருநாள் முன்பு சொன்னால் நீதிமன்றத்திற்கு எப்படி செல்வார்கள் என்று வேண்டுமென்ற செய்வதுபோல் உள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். காவல் துறை இந்த விஷயத்தை சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும் என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post