பெங்களூர்: கர்நாடக மாநிலம் கலபுரகி அப்சல்புராவின் கத்தரகா கிராமத்தில் உள்ள பாக்யவந்தி கோவிலில், விநோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பலரது கவனத்தை பெற்று வருகிறது. என்ன நடந்தது கோயிலில்?
வாழ்க்கையில் ஏற்படும் இன்னல், கஷ்டங்களுக்காக நிம்மதி தேடி கோயிலுக்கு பக்தர்கள் செல்வார்கள்.. அல்லது ஏதாவது வேண்டுதலுக்காக கோயிலுக்கு செல்வார்கள்.. அல்லது பக்தி அதிகமாகி விட்டால் கோயிலுக்கு செல்வார்கள்.
அந்தவகையில் கோயிலுக்கு செல்லும் யாராக இருந்தாலும், தங்களுடைய வேண்டுதல்களையும் கடவுளிடம் மனமுருகி பிரார்த்தித்து சொல்வார்கள். எனினும் சில வித்தியாசமான பக்தர்கள், நூதனமான வேண்டுதல்களை இறைவனிடம் முறையிடுவார்கள்.
தருமபுரி கோயில்: இப்படித்தான் சமீபத்தில் தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயிலுக்குள் சென்ற பக்தர் ஒருவர், கோயில் உண்டியலில் காணிக்கையை செலுத்திவிட்டு, தன்னுடைய பிரார்த்தனையையும் பதிவு செய்துவிட்டு போயிருக்கிறார். கோயில் நிர்வாகத்தினர் உண்டியலை எண்ணுவதற்காக கொட்டியபோது, அதில் ஒரு வெள்ளை காகிதம் வந்து விழுந்தது.
அதில், தன்னுடைய கடன் பிரச்சனையை, எழுதிவைத்திருந்தார். யார் யாரிடம் கடன் வாங்கினார்? ஒவ்வொருவரிடமும் எவ்வளவு கடன் வாங்கினார்? கடன்பாக்கி தர எவ்வளவு? என்ற கடன் விவரங்களை வரிசையாக எழுதி வைத்திருந்தார்.. 1 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் கடனை மற்றவர்களுக்கு தர வேண்டியிருக்கிறது. எப்படி கடன் அடைக்க போகிறேனோ தெரியல. ரூ.10 கோடியே 10 லட்சம் எனக்கு வர வெளியிலிருந்து வேண்டியிருக்கிறது.. அந்த பணம் எனக்கு சீக்கிரமாக வந்து சேர வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
காக்க காக்க: இறுதியாக, காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்க தாக்க தடைகள் நீங்க, பார்க்க பார்க்க பாவம் பொடிபட என்று வரிகளுடன்.. முருகா முருகா ஓம் முருகா, கடன் அடைய வேண்டும் முருகா என்று எழுதியிருந்தார். ஆனால், இந்த பக்தர் யார் என்று தெரியவில்லை. அந்த வேண்டுதல் கடிதம் இணையத்தில் வைரலாகியிருந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் விநோத வேண்டுதல் நடந்துள்ளது.. இங்குள்ள கலபுரகி அப்சல்புராவின் கத்தரகா கிராமத்தில் பாக்யவந்தி கோவில் அமைந்துள்ளது. மிகவும் வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த கோயிலில் 3, 4 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கையை எண்ணுவது வழக்கம்.
கோவில் ஊழியர்கள்: அப்படித்தான் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டுள்ளது.. அப்போது, பக்தர்கள் பலரும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும்படி, கடிதங்கள் எழுதி உண்டியலில் போட்டிருந்தனர். அதில், 20 ரூபாய் நோட்டின் மீது, "என் மாமியார் சீக்கிரம் இறக்க வேண்டும்" என, யாரோ ஒருவர் எழுதி போட்டிருந்தார். இதை பார்த்து கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அதிகாரிகள் கவனத்துக்கு இந்த 20 ரூபாய் நோடை கொண்டு சென்றனர்.. இந்த ரூபாய் நோட்டு தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. மாமியாரின் நெருக்கடி தாங்க முடியாத யாரோ? ஒருவர் அம்மனுக்கு கோரிக்கையாக எழுதி இந்த ரூபாய் நோட்டை உண்டியலில் காணிக்கையாக போட்டது தெரியவந்தது.
ரொக்கம்: இது குறித்து கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் குத்ரே என்பவர் கூறியதாவது: கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.60 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு கிலோ வெள்ளி ஆபரணங்கள், 200 கிராம் தங்கம் இருந்தது. மேலும் மாமியார் மரணத்திற்கு ஆசைப்பட்டு எழுதிய ஒரு ரூபாய் நோட்டும் இருந்ததாக தெரிவித்தார். ஆனால், இதை எழுதி போட்டது ஆணா, பெண்ணா என தெரியவில்லையாம்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.