மணிப்பூர் வன்முறைகளுக்காக பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட முதல்வர் பைரேன்சிங்!

post-img
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடரும் வன்முறை சம்பவங்களுக்காக அம்மாநில் முதல்வர் பைரேன்சிங் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அனைத்து சம்பவங்களையும் மறப்போம்; மன்னிப்போம் என்றும் அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவோம் என்றும் மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இன மக்களிடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மைத்தேயி இனக் குழுவினரை பழங்குடிகள் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர் குக்கி இன மக்கள். இதனால் இரு இனங்களுக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூர் வன்முறை சம்பவங்களின் அடுத்த கட்டமாக, குக்கி இன மக்கள் தங்களுக்கு தனி சுயாட்சி நிர்வாகப் பகுதி கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இன்னமும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது. மணிப்பூரில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வன்முறைகளை அடக்க தவறிவிட்டது என்று குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன. மணிப்பூர் மாநிலத்துக்கு ஒரு முறை கூட பிரதமர் மோடி பயணம் செய்து மக்களுக்கு ஆறுதல் கூறவே இல்லை என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தலையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருந்த போதும் மணிப்பூர் வன்முறைகள் ஓயவில்லை. மணிப்பூரில் உச்சகட்டமாக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் வீடுகள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் மணிப்பூர் அரசியலும் நிலை குலைந்து போனது. இந்த நிலையில் தலைநகர் இம்பாலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மணிப்பூர் முதல்வரான பைரேன் சிங். அப்போது, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக வேண்டுகோள் விடுத்தார் பைரேன் சிங். அத்துடன் அனைத்து இன மக்களும் மறப்போம்; மன்னிப்போம் என ஒருங்கிணைந்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் பைரேன் சிங் கேட்டுக் கொண்டார். இம்பாலில் செய்தியாளர்களிடம் பைரேன் சிங் கூறியதாவது: 2024-ம் ஆண்டு முழுவதும் வன்முறைகள் நீடித்தது துரதிருஷ்டவசமானது. இதற்காக மக்களிடம் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மே 3-ந் தேதி முதல் இன்று வரை மணிப்பூரில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்காகவும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மணிப்பூர் மக்கள் பலர் தங்களை வீடுகளையும் உறவுகளையும் இழந்துள்ளனர். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கடந்த 3,4 மாதங்களாக அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2025-ம் ஆண்டு பிறக்கும் புத்தாண்டு நமத்உ மாநிலத்தில் அமைதியை மீண்டும் கொண்டு வரும் எனவும் நம்புகிறேன். இதுவரை நடந்த நிகழ்வுகள் நடந்தவையாகவே இருக்கட்டும்; அனைத்து இனக்குழுவினரும் நடந்தவற்றை மறப்போம்; மன்னிப்போம். அமைதியான, ஒளிமயமான மணிப்பூரை ஒருங்கிணைந்து கட்டியெழுப்புவோம். இவ்வாறு பைரேன் சிங் தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post