டெல்லி: உலகிலேயே பழமையான மற்றும் மூத்த மொழி தமிழ் தான். இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. தமிழ் மொழியை கற்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மோடி தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டில் முதல் முறையாக பிரதமரானார். அதன்பிறகு 2019ல் 2வது முறையாகவும், தற்போது 3வது முறையாகவும் பிரதமாக செயல்பட்டு வருகிறார்.
மோடி தான் பிரதமர் ஆனது முதல் கடந்த 2014ல் இருந்து ‛மன் கீ பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் 118 வது மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மோடி தமிழ் மொழி தான் உலகில் பழமையான மொழி என்று தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பேசினார். இதுதொடர்பாக மோடி பேசியதாவது: உலகிலேயே மிகவும் பழமையான, மூத்த மொழி என்றால் அது தமிழ் தான். இதனை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தமிழ்மொழியை கற்போரின் எண்ணிக்கை என்பது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் பிஜியில் (Fiji) மத்திய அரசு சார்பில் தமிழ் கற்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பிஜியில் தமிழ் கற்று கொடுக்கின்றனர். பிஜியில் உள்ள மாணவர்கள் தமிழ் மொழி, கலாசாரத்தை கற்பதில் ஆர்வமாக உள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று கூறினார்.
இதில் பிரதமர் மோடி கூறிய பிஜி என்பது ஒரு தீவு நாடாகும். இந்த நாடு ரிபப்ளிக் ஆஃப் பிஜி என்று அழைக்கப்பட்டு வருகிறது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஓசியானியாவின் ஒரு பகுதியான மெலனேசியாவில் இந்த நாடு உள்ளது. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் நியூசிலாந்தில் இருந்து வடக்கு-வடகிழக்கில் சுமார் 1,100 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பிஜி தீவு தேசம் என்பது 300க்கும் அதிகமான தீவுக்கூட்டங்களால் ஆனது. இந்த தீவின் மக்கள்தொகையின் எண்ணிக்கை 9,26,276ஆக உள்ளது. இதில் 87 சதவீதம் பேர் விடி லிவு மற்றம் வானுவா லிவு ஆகிய 2 தீவுகளில் மட்டுமே வசிக்கின்றனர்.
அதேபால் மக்கள்தொகையில் 64.4 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தையும், 27.9 சதவீதம் பேர் இந்து மதத்தையும், 6.3 சதவீதம் பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகின்றனர். மற்றவர்கள் மொதோடிசம் உள்பட பிற மதங்களை கடைப்பிடித்து வருகின்றனர். இங்கு அலுவலல் மொழியாக ஆங்கில,ம் பிஜியன், பிஜி ஹிந்தி மற்றும் பிராந்திய மொழியாக ரோடிமான் உள்ள நிலையில் தான் பிஜியில் மத்திய அரசு சார்பில் தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமைப்பட கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.