காபூல்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இருநாடுகளும் எல்லையில் பயங்கர துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இது போராக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு டுராண்ட் லைனும் ஒரு காரணம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த டுராண்ட் லைன் என்பது என்ன? அது ஏன் இருநாடுகள் இடையே பிரச்சனையாக உள்ளது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. இருநாடுகளையும் பிரிக்கும் வகையில் ஈரானில் இருந்து சீனா வரை மொத்தம் மொத்தம் 2,640 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லைகள் உள்ளன. இந்த எல்லையின் ஒருபகுதியில் ஆப்கானிஸ்தானும், மற்றொரு பகுதியில் பாகிஸ்தானும் செயல்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் ஆட்சியை பிடித்தவுடன் தாலிபான் அரசை முதல் முதலாக அங்கீகரித்தது பாகிஸ்தான் தான். ஆனால் தற்போது இருநாடுகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கூட ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும்
டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு பாகிஸ்தானை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்த டிடிபி அமைப்பு என்பது பாகிஸ்தான் தாலிபான்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவர்களின் நோக்கம் என்பது பாகிஸ்தானில் தங்களின் ஆட்சியை அமைப்பது தான். இதனால் தான் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது டிடிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக டிசம்பர் 24ம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானில் பக்டிகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் உள்ள டிடிபி அமைப்பினர் முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதில் 47 பேர் வரை பலியாகினர். இதில் 20க்கும் அதிகமான பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாலிபான்கள் பாகிஸ்தானுடன் மோதலை தொடங்கி உள்ளனர். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் 15,000 தாலிபான்கள் முகாமிட்டுள்ளனர். நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த தாலிபான்கள், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கினர். பதிலுக்கு பாகிஸ்தான் ராணுவமும் பதிலடி தாக்குதலை தொடங்கியது. நீண்ட நேரம் இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டது. தாலிபான்கள் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலியாகினர். மறுபுறம் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்களில் 13 தாலிபான்கள் வரை இறந்ததாக பாகிஸ்தான் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த மோதலுக்கு டிடிபி அமைப்பினர் பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் மோதுவது ஒரு காரணம் என்று சொல்லப்படுவது போல் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதான் டுராண்ட் லைன் (Durant Line). இந்த டுராண்ட் லைன் என்பது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகளை இரண்டாக பிரிக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லை கட்டுப்பாடு கோடாகும். இந்த டுராண்ட் லைனின் ஒருபுறம் ஆப்கானிஸ்தானும், மற்றொரு புறம் பாகிஸ்தானும் உள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே இந்த டுராண்ட் லைன் என்பது மொத்தம் 2,640 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது. ஈரான் முதல் சீனா வரை இருநாடுகளையும் டுராண்ட் லைன் பிரிக்கிறது.
இந்த டுராண்ட் லைன் என்பது 1893ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தான் தனி எமிரேட்டாக செயல்பட ஆங்கிலேயர்கள் அனுமதி அளித்தனர். அந்த சமயத்தில் பாகிஸ்தான் என்ற நாடே இல்லாமல் இருந்தது. அதாவது இப்போதைய பாகிஸ்தானின் பகுதிகள் நம் நாட்டுடன் இருந்தன. நம் நாடு ஆங்கிலேயர்கள் வசம் இருந்ததால் பிரிட்டிஷ் இந்தியா என்று அழைக்கப்பட்டது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தனி எமிரேட்டாக ஆங்கிலேயர்கள் அங்கீகரித்த நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவை பிரிக்கும் வகையில் ஆங்கியேரான ஹென்றி மோர்டைமர் டுராண்ட் என்பவர் எல்லைக்கோட்டை வரைந்தார். இதற்கு அவரது பெயர் டுராண்ட் என்பது வைக்கப்பட்டது. இந்த டுராண்ட் லைன் என்பது பிரிட்டிஷ் இந்தியா - ஆப்கானிஸ்தான் எமிரை பிரிக்கும் வகையில் இருந்தது.
அதோடு இந்த டுராண்ட் லைன் என்பது வெறுமனே கண்பார்வையில் ஆங்கிலேயர்களால் ஒருதலைபட்சமாக எல்லையாக வரையறுக்கப்பட்டது. மக்களிடம் எந்த கேள்விகளும் கேட்கப்படவில்லை. இதனால் இந்த எல்லைக்கோடு என்பது ஆப்கானிஸ்தான் -பிரிட்டிஷ் இந்தியா எல்லையில் வசிக்கும் பாஸ்தூன் மக்களை இரண்டாக பிரித்தது. பாஸ்தூன் மக்களில் ஒரு பகுதியினர் ஆப்கானிஸ்தானுக்கும், இன்னொரு பகுதியினர் பிரிட்டிஷ் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தனர்.
இந்த சமயத்தில் ஆப்கானிஸ்தானின் எமிராக அப்துர் ரஹ்மான் கான் இருந்தார். அவர் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆங்கிலேயர்களின் சப்போர்ட் தேவை என்பதால் அவர் இதனை கண்டுக்கொள்ளவில்லை. அதன்பிறகு இந்தியாவில் இருந்து தனி நாடாக 1947 ல் பாகிஸ்தான் உருவானது. அப்போது ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இந்த டுராண்ட் லைன் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது.
அதாவது பாகிஸ்தான் டுராண்ட் லைனை தனது அதிகாரப்பூர்வ எல்லையாக அறிவித்தது. அதற்கு ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மாறாக இருநாடுகள் இடையே எல்லையை மறுவரையறை செய்ய வேண்டும். பாஸ்தூன் மக்கள் ஆப்கானிஸ்தானில் தான் அதிகம் வசிக்கின்றனர். இதனால் டுராண்ட் லைன் மூலம் பிரிக்கப்பட்டு பாகிஸ்தானின் ஒருபகுதியாக உள்ள பாஸ்தூன் மக்களின் இடங்களை ஆப்கானிஸ்தான் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது.
ஆனால் பாகிஸ்தான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக டுராண்ட் லைனை பாகிஸ்தான் இன்று வரை தங்களின் எல்லையாக அதிகாரப்பூர்வமாக வைத்துள்ளது. ஆனால் இப்போது வரை ஆப்கானிஸ்தான் அரசு அதனை ஏற்கவில்லை. இதனால் பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்படும் டிடிபி எனும் பாகிஸ்தான் தாலிபான்கள் தொடர்ந்து அந்த நாட்டுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கூட டுராண்ட் லைனை தாண்டி தான் தாலிபான்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அந்த நாட்டின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.