காவல்துறைக்கு தனி அமைச்சரை உடனே நியமிங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் தமிழக பாஜக!

post-img
சென்னை: "தமிழக காவல் துறைக்கு தனி அமைச்சரை தமிழக முதல்வர் ஸ்டாலின் நியமிக்க வேண்டும். காவல் துறையினர் செய்யும் தவறுகளை உடனடியாக விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கும் வகையில் காவல் துறையினர் மீது பதியப்படும் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்" என்று தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தலைநகர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் கூர் பெற்றுள்ளன. குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய காவல்துறையினரையும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலினையும் பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கி விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், உடனடியாக காவல் துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ளது தமிழக பாஜக. இது தொடர்பாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஸ்டாலின், காவல் துறையினர் கண்ணியத்துடன், சட்டத்துக்கு உட்பட்டு நேர்மையுடனும் மனிதநேயத்துடனும் மக்களை காப்பதை உறுதி செய்யும் வகையில், பொறுப்புடன் கடமையாற்றும் வகையில் தமிழக காவல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், உடனடியாக முழுமையான நிர்வாக சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, திருட்டு, வழிப்பறி, போதை பொருட்கள், கள்ளச் சாராய சாவு என சட்ட மீறல்கள் அதிகரித்து தமிழகம் வன்முறையின் விளை நிலமாக மாறி வருவது வேதனைக்குரியது. மேலும் திமுக ஆட்சியின் தவறுகள் குறித்து விமர்சிப்பவர்களை அராஜகத்துடன் கைது செய்தல், பொய் வழக்குகள் புனைந்து குண்டர் சட்டத்தில் அடைத்தல் என காவல்துறையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது அதைவிட ஆபத்தானது. தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதை விட, 2026 தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து 200 தொகுதிகளை வென்று காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக மக்களின் நலன்களை புறக்கணிக்கிறது திமுக. கட்சி நிகழ்ச்சிகள், தமிழக அரசின் அரசின் சாதனைகளாக நாளுக்கு ஒரு திட்டத்தை அறிவிப்பது, துவக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பொய்யான திராவிட மாடல் பெருமைகளை பேசுவதென, தமிழக முதல்வர் நேரத்தையும் நாட்களையும் வீணடித்து வருவதால் தமிழக அரசு நிர்வாகம் செயலிழந்து நிற்கிறது. காவல் துறையின் பொறுப்பு அடிமட்ட காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை காவல் துறையின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகளால், தமிழக மக்கள் பெரிதும் அவதிக்கப்படுகின்றனர். முதல்வரின் நேரடி மேற்பார்வை காவல்துறையில் இல்லாததால் திமுக அரசின் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் மூலம் நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்பட்டு திமுக அரசுக்கு பினாமிகளாக செயல்படக் கூடியவர்கள் உயர் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதால் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு காவல் துறை சீரழிந்து வருகிறது. எனவே காவல் துறையின் அமைச்சராக விளங்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல் துறையில் போதிய கவனம் செலுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதால் உடனடியாக காவல் துறைக்கு தனி அமைச்சரை நியமித்து தமிழக காவல் துறை கண்ணியமிக்க, கடமை தவறாத, மக்களை பாதுகாக்கும், வகையில் நேர்மையுடன் செயல்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தமிழக காவல் துறை சீர்மிகு காவல்துறையாக செயல்படும் வகையில் காவல் துறைக்கு தனி அமைச்சரை தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும். காவல் துறையினர் செய்யும் தவறுகளை உடனடியாக விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கும் வகையில் காவல் துறையினர் மீது பதியப்படும் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post