பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் தான்.. அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை.. ராமதாஸ் திட்டவட்டம்!

post-img
சென்னை: பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் தான் என்றும் பொதுக்குழுவில் அறிவித்தபடி நியமன கடிதத்தை முகுந்தனிடம் வழங்கிவிட்டேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 28) அன்று நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தப் பொதுக்குழுவில் ராமதாஸ் முகுந்தன், பாமகவின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார். அப்போது மேடையில் இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பதவி வழங்குவீர்கள். கட்சியில் சேர்ந்தவுடன் பதவி வழங்குவீர்களா என்றெல்லாம் கேள்வி கேட்ட அன்புமணி, கடுப்பில் மைக்கை மேஜை மீது வீசினார். அப்போது ராமதாஸ், இது என்னுடைய கட்சி. நான் தொடங்கி, வளர்த்த கட்சி. விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லாவிட்டால் போகலாம் எனக் கூறினார். உடனே அன்புமணி, "பனையூரில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளேன். அங்கு என்னைத் தொண்டர்கள் சந்திக்கலாம்" எனக் கூறிவிட்டு செல்போன் எண்ணைப் பகிர்ந்துவிட்டுக் கிளம்பினார். ராமதாஸ், "முகுந்தன் பதவியை யாராலும் மாற்ற முடியாது. அதில் விருப்பம் இல்லையென்றால்.. அவ்வளவுதான்" எனக் கூறினார். இதனால் கட்சிக்குள் கடும் புகைச்சல் எழுந்தது. இந்தநிலையில் கட்சியில் தனக்கு பொறுப்பு வேண்டாம் என்று இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ராமதாஸின் மகள் வழி பேரன் தான் முகுந்தன் பரசுராமன். ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்தார் முகுந்தன். அவருக்கு பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பு தருவதைத்தான் அன்புமணி எதிர்த்துள்ளார். இந்த மோதல் பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அடுத்த நாளே, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை பாமக தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார். அப்போது, பொதுக்குழுவில் நடந்தது பற்றி ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. அப்படிப்பட்ட ஒரு கட்சியின் பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான். உட்கட்சி பிரச்னைகள் பற்றி மற்றவர்கள் எதுவும் பேசத் தேவையில்லை, அவற்றை நாங்களே பேசிக்கொள்வோம்" எனத் தெரிவித்தார். இதற்கு மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரைச் சேர்ந்த 9 மாவட்டச் செயலாளர்களுடன், பனையூரில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், "அன்புமணியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, பொதுக் குழுவில் நடந்தது உள்கட்சி விவகாரம். அன்புமணி என்னைச் சந்தித்துப் பேசினார். அது சரியாகிவிட்டது. நான் தவறு செய்தால் என்னை விமர்சிக்கலாம். நான் கோபப்பட மாட்டேன். பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பொதுக்குழுவிலேயே நியமிக்கப்பட்டார்; அவருக்கு மறுநாளே நியமன கடிதம் கொடுத்து விட்டேன். அவர் தான் பாமக இளைஞரணி தலைவர்" என ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post