Flash Back: பரபரப்பான நிலையில் தமிழ்நாடு சட்டசபை நாளை கூடுகிறது.. சர்ச்சைகளை கிளப்பிய ஆளுநர் உரைகள்!

post-img
சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டும் சர்ச்சை வெடிக்குமா? சுமூகமாக உரை வாசிக்கப்படுமா? என்பது எதிர்பார்ப்பாகும். பொதுவாக மாநிலங்களில் சட்டசபைகளில் ஆளுநர் உரை வாசித்தல் என்பது ஒரு மரபுதான். ஆளும் மாநில அரசு தயாரித்து தரும் கொள்கை விளக்க குறிப்புதான் ஆளுநர் உரை. அது ஆளுநரின் தனிப்பட்ட கருத்துகளைக் கொண்ட உரையும் அல்ல. இத்தகைய மாநில அரசின் உரையை ஆளுநர் வாசிக்கும் போது, சில மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும்; ஆளுநர் உரை வாசிக்கப்படாமலேயே வாசித்ததாக ஏற்றுக் கொள்ளப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. சட்டசபையில் ஆளுநர் உரை வாசிப்பின் போது வெளிநடப்பு, அமளி, துமளி சம்பவங்களும் அரங்கேறும். ஆனால் தமிழ்நாட்டில் 2023, 2024-ம் ஆண்டுகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு ஆளும் திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது, ஆளுநரே வெளிநடப்பு செய்தது, ஆளுநர் சொந்தமாக படித்த அறிக்கையை அரசு நிராகரித்தது என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆளுநர் வாசிக்க மறுத்த பகுதிகள் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 9-ந் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை. 'சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிகணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இந்த அரசின் அடித்தள்மாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது" என்பது உள்ளிட்ட பகுதிகளை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை. ஆளுநருக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் கண்டனத் தீர்மானம் இதனையடுத்து எழுந்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உரையில் தமிழ்நாடு அரசு இயற்றிய பாகங்கள் சில இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே முழுமையாக படிக்க வேண்டும். ஆனால் முழுமையாக படிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டுவிட்டார். இதனால் அவரின் உரையில் சுயமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் தாக்கல் செய்கிறேன். ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது. கொள்கைக்கு மாறாக அவர் செயல்பட்டு உள்ளார். சட்டசபை விதிகளின்படி அரசு தயாரித்து கொடுத்ததை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். அது விதி மீறல். ஆளுநரின் இந்த செயல் வருத்தம் தருவதால் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறேன் என்றார். இதனையடுத்து அரசு தயாரித்த ஆளுநர் உரை மட்டும் சபைக் குறிப்பில் இடம் பெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்துவிட்டும் சேர்த்துவிட்டும் படித்த பகுதிகள் சட்டசபை குறிப்புகளில் இடம் பெறவில்லை. திடீரென வெளிநடப்பு செய்த ஆளுநர் மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்த போது திடீரென ஆளுநர் தமது இருக்கையில் இருந்து வெளியேறி சபையைவிட்டு வெளிநடப்பு செய்தார். சபை மரபுகளின்படி தேசியகீதம் இசைக்கப்பட்ட பின்னர் தான் ஆளுநர் சபையில் இருந்து வெளியேற வேண்டும். ஆனால் முதல்வரின் கண்டனத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தது இந்திய அளவில் பேசு பொருளானது. 2024 சட்டசபை கூட்டம் இதேபோல 2024-ம் ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரிலும் ஆளுநர் உரையை முன்வைத்து சர்ச்சை வெடித்தது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி 12-ல் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. தமிழ்நாடு சட்டசபை மரபுகளின்படி தமிழ்த் தாய் வாழ்த்துடன் சபை நடவடிக்கைகள் தொடங்கின. சட்டென உரையை முடித்த ஆளுநர் ரவி இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்ரவி தமது உரையை வாசித்தார். அப்போது, சட்டசபை தொடங்கும் முன்பும் முடிவடையும் போதும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தேன். அது புறக்கணிக்கப்பட்டுவிட்டது; தேசிய கீதத்துக்கு மரியாதை தரவில்லை. இந்த உரையில் தகவல், தார்மீக அடிப்படையில் ஏற்க முடியாத பகுதிகள் உள்ளன; அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகும் என பகிரங்கமாக விமர்சித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனால் சட்டசபையில் பெரும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டது. கோட்சே வழி வந்தவர்கள்- சபாநாயகர் அப்பாவு இதனையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை- அரசு தயாரித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்த முடித்த கையோடு, ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறையாகச் சொல்லவில்லை. ஜனகனமன வாசித்திருக்க வேண்டும் என்பதை ஒரு கருத்தாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும். இவ்வளவு பெரிய மழை, வெள்ளம் வந்த பிறகும் ஒரு பைசாகூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் நிதியில் உள்ளது. அதற்குக் கணக்குக்கூட கிடையாது. அதிலிருந்து ஒரு 50,000 கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என நான் கூட கேட்க முடியும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டசபை" என அதிரடியாக பேச ஒட்டுமொத்த சபையுமே அதிர்ந்து போனது. மீண்டும் வெளிநடப்பு செய்த ஆளுநர் சபாநாயகரின் இந்த விமர்சனத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் ரவி திடீரென சபையில் இருந்து மீண்டும் வெளிநடப்பு செய்தார். பின்னர் சபை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் எழுந்து, அரசு தயாரித்த உரைதான் சபை குறிப்பில் ஏற்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வர அது நிறைவேற்றப்பட்டது. தேசிய கீதம்- கோட்சே விவகாரம்- ஆளுநர் தந்த விளக்கம் அத்துடன் இந்த பிரச்சனை ஓயவில்லை. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை ஒரு விளக்கமும் தந்தது. அதில், ஆளுநர் உரையானது அரசால் அனுப்பி வைக்கப்படது. அதில் பல தகவல்கள் உண்மைக்கு மாறானதாக இருந்தன. இதனால் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், ஆளுநர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என சபாநாயகருக்கும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டது. அரசின் சாதனைகளை, கொள்கைகளை, திட்டங்களைச் சொல்வதாக இருக்க வேண்டும்; பாரபட்சமான அரசியல் பார்வைகளைச் சொல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதை அரசு நிராகரித்துவிட்டது. மேலும் ஆளுநரை நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார்.சபாநாயகர் இதனால், தனது பதவியின் கண்ணியத்தைக் கருதி ஆளுநர் அவையைவிட்டு வெளியேறினார் என விளக்கம் தரப்பட்டது. இப்படி ஏற்கனவே 2 முறை பரபரப்பை கிளப்பிய நிலையில்தான் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்க இருக்கிறது.. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post