அனல் பறக்கும் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வீரர்கள், காளைகளுக்காக பதிவு இன்று தொடக்கம்!

post-img
மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல இடங்களில் தமிழர்களின் பண்பாட்டையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. பொங்கல் பண்டிகை சமயத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆயிரக்கணக்கான காளைகளும் காளையர்களும் பங்கேற்கும் நிலையில் இந்த போட்டிகளை காண லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கூடுகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி தை முதல் நாளில் மதுரை அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க காளைகள் மற்றும் வீரர்கள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டில்‌ கலந்து கொள்ளும் மாடுபிடி வீர்கள் தங்கள் பெயர்களை madurai.nic.in என்ற இணைய தளம்‌ மூலம்‌ பதிவு செய்ய வேண்டும். காளைகளுக்கான பதிவுகளையும் இதே இணைய தளத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த பதிவுகள் ஜனவரி 6 (இன்று) மாலை 5 மணிக்கு துவங்கி, ஜனவரி 7 (நாளை) மாலை 5 மணிக்கு நிறைவடையும். அவனியாபுரம்‌, பாலமேடு, அலங்காநல்லூர்‌ ஆகிய இடங்களில், ஏதேனும் ஒரு கிராமத்தில்‌ மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளுக்கு அனுமதியளிக்கப்படும்‌. காளையுடன்‌ உரிமையாளர் மற்றும்‌ ஒரு உதவியாளர்‌ மட்டும் அனுமதிக்கப்படுவர்‌. பதிவு செய்தவர்களின்‌ சான்றுகள்‌ சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன்‌ பதிவிறக்கம்‌ செய்ய இயலும்‌. அவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்‌." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post