நம்ம சமூகம் ’ஆண்ட பரம்பரை’..சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டது நம்ம பயலுக! அமைச்சர் மூர்த்தி பகீர்

post-img
மதுரை: மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியின் சாதிய ரீதியிலான பேச்சு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஆண்ட பரம்பரை என்பதை நினைவில் கொள்ள வேண்டும், நாட்டின் சுதந்திரத்திற்காக நமது சமூகத்தினர் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உயிர் தியாகம் செய்துள்ளனா் என கூறியுள்ளது பலத்த விமர்சனங்களை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர்," நான் சொல்கிறேன் இது ஆண்ட பரம்பரை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரலாறு பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். படித்து தெரிந்து கொள்ளுங்கள். இன்றைக்கு நான்கு பேர் செத்துப் போனார்கள், ஐந்து பேர் செத்துப் போனார்கள் என்றால் பெரிதாக பேசுகிறார்கள். ஆனால் சுதந்திரத்திற்காக இந்த சமூகத்தில் இருந்து 5000 பேர் பத்தாயிரம் பேர் செத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் வரலாற்றிலிருந்து புரட்டிப் பார்க்க வேண்டும். நீங்கள் வருகிற போது அதனை இந்த நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடத்திலே நான் வெளிப்படுத்துகிறேன். ஏன் என்று சொன்னால், நமக்கு என்று ஒரு வரலாறு உண்டு. அது அழகர் கோவிலாக இருந்தாலும் திருப்பரங்குன்றம் கோவிலாக இருந்தாலும் ஆங்கிலேயர் படையெடுப்பில் கொள்ளையடித்துச் சென்றபோது இந்த சமுதாயம் தான் முன்னே நின்று 5000 பேரை பலி கொடுத்தது. இந்த வரலாறு இன்று மறைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல்தான் உசிலம்பட்டியில் பக்கத்தில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் கூட இதற்கெல்லாம் படிப்பறிவு இல்லாது தான் காரணம். விவசாயத்திலே தொழில்துறையில் நம்மவர்கள் முன்னுக்கு இருந்தாலும் கூட படிப்பறிவில் அன்று பின்னுக்கு இருந்த காலத்தில் நமது வரலாறு வெளிக்கொண்டு வர முடியாத சூழல் இருக்கிறது. ஆனால் நீங்கள் பார்க்கிறபோது இன்றைக்கு படிப்படியாக இப்போதுதான் அரசு வேலை வாய்ப்பில் நீங்கள் வந்திருப்பதை நான் மனதார பாராட்டுகிறேன்:" என பேசியுள்ளார். திராவிடம் சமூக நீதி என்று பேசும் ஒரு திராவிட கட்சியில் அதுவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருக்கும் ஒருவர் ஒரு சாதி நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியது பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் ஏற்கனவே குறிப்பாக மதுரையில் சாதி ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் அரங்கேறி வரும் நிலையில் அமைச்சர் பொதுவெளியில் இப்படி பேசி இருப்பது கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. இதை அடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post