இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. 6ம் தலைமுறை விமானம் தயாரிக்க வந்த 2 ஆஃபர்.. கவனிக்கும் சீனா

post-img
டெல்லி: உலகில் முதல் முறையாக அமெரிக்கா, ரஷ்யாவிடம் இல்லாத 6ம் தலைமுறை விமானத்தை சீனா தயாரித்து வானில் பறக்க விட்டுள்ளது. இது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில் 6ம் தலைமுறை விமானம் தயாரிப்பது தொடர்பாக நம் நாட்டுக்கு 2 முக்கிய ஆஃபர்கள் வந்துள்ளன. விமானப்படையில் அமெரிக்கா தான் சிறந்தது என்ற கருத்து உண்டு. ஆனால் அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளி சீனா தற்போது 6ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ளது. அதாவது விமானத்துறையில் தற்போது 5ம் தலைமுறை விமானம் தான் நவீன தொழில்நுட்ப வசதியுடன் உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிடம் 5ம் தலைமுறை விமானங்கள் உள்ளன. அமெரிக்காவிடம் லாக்ஹிட் மார்ட்டின் எஃப் 22 ராப்டர், லாக்ஹுட் மார்ட்டின் எஃப் 35 லைட்னிங் II, ரஷ்யாவிடம் மிக் 31, சுகோய் சு-75, சீனாவிடம் செங்குடு ஜே -20, சென்யாங் ஜே-35 ரக 5ம் தலைமுறை விமானங்கள் உள்ளன. இதற்கு அடுத்த தலைமுறை விமானம் என்பது 6ம் தலைமுறை விமானமாகும். இந்த விமானத்தை ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தனித்தனியே தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு சீனா தனது 6ம் தலைமுறை விமானத்தை வானில் பறக்கவிட்டு சோதனை செய்துவிட்டது. இந்த விமானத்தின் பெயர், அதில் உள்ள டெக்னாலஜி உள்ளிட்டவை பற்றி இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும் சீனாவின் இந்த விமானம் என்பது மொத்த உலக நாடுகளுக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது. குறிப்பாக நம் நாட்டுக்கு இது பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நம் நாட்டுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. சீனா 6ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ள நிலையில் நம் நாட்டில் இன்னும் 5ம் தலைமுறை விமானம் கூட இல்லை. அதோடு ரேடாரில் சிக்காமல் செல்லும் வகையிலான ஸ்டெல்த் விமானங்கள் நம் நாட்டிடம் இல்லை. நம் நாட்டை பொறுத்தவரை 4.5 ம் தலைமுறை விமானமாக கூறப்படும் பிரான்ஸ் நாட்டின் ரபேல் தான் உள்ளது. இதற்கு அடுத்ததாக 5ம் தலைமுறை விமானமாக ஸ்டெல்த் ஏஎம்சிஏ (Advanced Medium Combat Aircraft) மல்டிரோல் போர் விமானம் தயாரிப்பதற்கு மத்திய அரசு திட்டம் மட்டுமே வகுத்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்தியாவுக்கு 2 முக்கிய ஆஃபர்கள் வந்துள்ளன. அதாவது தற்போது ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இணைந்து 6ம் தலைமுறை விமானங்கள் உருவாக்க முடிவு செய்துள்ளன. இதற்கான திட்டத்துக்கு எஃப்சிஏஎஸ் (Future Combate Air System Program) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரிட்டன், ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இணைந்தும் 6ம் தலைமுறை விமானத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தின் பெயர் ஜிசிஏபி (Global Combat Air Program) என்பதாகும். இந்த 2 திட்டம் என்பது நவீன தொழில்நுட்பங்களுடன் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு போட்டியாக 6ம் தலைமுறை விமானத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும். இந்நிலையில் தான் எஃப்சிஏஎஸ் மற்றும் ஜிசிஏபி உள்ளிட்ட திட்டங்களில் சேர்ந்து செயல்படும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தில் இந்தியா இணைய உள்ளதா? இணையும் என்றால் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளின் திட்டத்தில் இணையுமா? இல்லாவிட்டால் பிரிட்டன், ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் திட்டத்தில் இணையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா என்பது தற்போது 5ம் தலைமுறை விமானத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த வேளையில் தற்போது 6வது தலைமுறை விமானம் என்பது தயாரிக்க இந்த ஆஃபர் வந்துள்ளது. இதனால் இந்தியாவின் 5ம் தலைமுறை திட்டத்தை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கலாம் என்ற ஒரு தகவலும் பரவுகிறது. இதனால் நம் நாடு அநேகமாக இந்த 2 ஆஃபர்களையும் புறக்கணிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 5ம் தலைமுறை விமானம் என்பது டிஆர்டிஓ மற்றும் இந்திய விமானப்படை இணைந்து தயாரிக்கிறது. இந்த விமானங்களை நம் நட்பு நாடான ரஷ்யா வைத்துள்ள சுகோய் - 57 மற்றும் எஃப்-35 ரக போர் விமானங்களை போல் உருவாக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post