சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. 8 இல்ல, இனி 16.. பொங்கல் பரிசு தந்த ரயில்வே.. பயணிகள் ஹேப்பி

post-img
சென்னை: சொகுசு மற்றும் விரைவான பயணம் காரணமாக வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் மிகவும் பிசியான ரூட்களில் ஒன்றாக இருக்கும் சென்னை எழும்பூர் - நெல்லை வழித்தடத்தில் வரும் 11 ஆம் தேதி முதல் பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு இரவு 10.30 மணிக்கு வந்து சேரும். அதேபோல நெல்லையில் இருந்து காலை 6.05 மணிக்கு கிளம்பி, அதே ரூட்டில் சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 1.55 மணிக்கு செல்கிறது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து இதர நாட்களில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 24 வது வந்தே பாரத் ரயிலாக சென்னை நெல்லை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை துவங்கியதில் இருந்தே பயணிகள் மத்தியில் நல்ல வர்வேற்பு கிடைத்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளும், சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்களும் அதிக அளவில் இந்த ரயிலை பயன்படுத்துகிறார்கள். 7 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்னைக்கு இந்த ரயிலில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்துவிட முடியும் என்பதால் பயணிகள் பயண நேரம் கணிசமாக மிச்சமாகிறது. திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக செல்வதால் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதுமே அதிகமாகவே இருக்கும். தற்போது 8 பெட்டிகள் கொண்ட ரயிலாக இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பயணிகள் கோரிக்கை வைத்து இருந்தார்கள். இந்த நிலையில், தான் வரும் 11 ஆம் தேதி முதல் 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே வந்தே பாரத் ரயில்களின் பெட்டி அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் பலரும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். இதனால், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்கள், பேருந்துகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்டுகள் உடனே காலியாகிவிட்ட நிலையில் தற்போது வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பது பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post