போராட்டங்களுக்கு கெடுபிடி போட்ட போலீஸ்! புதிய தமிழகம் விஷயத்தில் இறுக்கி பிடித்தது நீதிமன்றம்!

post-img
சென்னை: புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், "அருந்ததியருக்கான 3% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி சென்னை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணி நடத்த அனுமதி கோரி எங்கள் கட்சியின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு விண்ணப்பித்திருந்தோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பம் அளித்த நிலையில், குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் பேரணிக்கு அனுமதி இல்லை எனக் கூறி, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து பேரணி நடத்தும் வகையில் வழித்தடத்தை மாற்றிக் கொள்ளும் படி காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். அதன் அடிப்படையில் 2024 நவம்பர் 7ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து நேரடியாக சென்று தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிப்பது என்று அறிவித்த நிலையில், முந்தைய நாளான 2024 நவம்பர் 6ஆம் தேதி பேரணிக்கு அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்றும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, மூன்று வாரங்களுக்கு முன்பே பேரணிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் ஆளுநரின் நேரத்தை பெற்றும் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது சட்ட விரோதமானது என்றும், பேரணிக்காக திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த கட்சியினரை காவல்துறையினர் மலை என பார்க்காமல் கைது செய்து மண்டபங்களில் அடைத்ததாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி வாதிட்டார். இந்த மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டால் என்ன அர்த்தம்? காவல்துறை அரசியல் ஏஜென்சி அல்ல அரசு ஏஜென்சி. பேரணிக்கு அனுமதி அளிப்பதோ, மறுப்பதோ வேறு விஷயம். அதை உரிய காலத்திற்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். சமீப காலமாக போராட்டங்களுக்கும், பேரணிக்கும் காவல்துறையினர் அனுமதியை வழங்குவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், புதிய தமிழகம் கட்சி தொடர்ந்த வழக்கில் காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post