கோயம்பேடு தலைவலி.. யாரிது கோயம்பேட்டில் நள்ளிரவில் துணிச்சலாக? வீடியோவை கண்டு ஆடிப்போன சென்னை போலீஸ்

post-img
சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் சமூக விரோத செயல்கள் அதிகரித்துவிட்டதாக மீண்டும் புகார்கள் கிளம்பியிருக்கின்றன.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டின் பயன்பாடு குறைந்துள்ளதையடுத்து, கோயம்பேடு மார்கெட் பகுதிகளில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, எந்நேரமும் பிஸியாகவே இருக்கும். கிட்டத்தட்ட 2100 பஸ்கள் தினமும் வந்தவண்ணம் இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக வெறிச்சோடி காணப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டதையடுத்து, கோயம்பேட்டில் பயணிகளின் நடமாட்டம் இல்லை. சமூகவிரோதிகள்: இந்த சந்தர்ப்பத்தை சமூக விரோதிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள துவங்கினார்கள்.. சுற்றுவட்டார பகுதிகளிலிருக்கும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் போன்றோர், குற்ற சம்பவங்களை செய்துவிட்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பதுங்கி கொள்வதாக சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இவர்களை தவிர, மதுப்பிரியர்களும் இங்கேயே குடித்து கும்மாளமிட்டு பதுங்கிவிடுவதாகவும், கோயம்பேட்டை சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் ரவுடிகள், திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்டில் வந்து பதுங்கிவிடுவதாகவும், பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே கைவரிசையை காட்டுவதால், குறைந்த அளவுக்கு வந்து போகும் பயணிகளும் அச்சமடைவதாகவும், அந்த பகுதியிலிருப்பவர்கள் புகார் தெரிவித்தனர்.. கோயம்பேடு மார்க்கெட்: இதுபோலவே, கோயம்பேடு மார்க்கெட் பகுதியும் எந்நேரமும் பிஸியாகவே இருக்கக்கூடிய இடமாகும். இங்கு காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய கடைகள் தனித்தனியாக செயல்பட்டு வரும்நிலையில், வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரம் பேர் இங்கேயே தங்கி, வேலை பார்த்து வருகிறார்கள். தனியாக சிக்கும் வியாபாரிகள், பொதுமக்களை மிரட்டி அவா்களிடமிருந்து பணம், செல்போன்களை பறித்துச்செல்லும் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபடுவதாக புகார் கிளம்பியது. இதையடுத்து, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன், மார்க்கெட் பகுதியில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொத்தம் 200 கண்காணிப்பு கேமராக்களை முதல் கட்டமாக கோயம்பேடு அங்காடி நிா்வாகம் பொருத்தியது. இதற்கான கட்டுப்பாட்டு அறை அங்காடி நிா்வாக அலுவலகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. நிம்மதியான வியாபாரிகள்: காவல்துறையின் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, கோயம்பேடு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைய துவங்கின.. கோயம்பேடு வியாபாரிகளும் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனினும், மார்க்கெட்டில், சமீபகாலமாக வழிப்பறி, ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக மறுபடியும் புகார்கள் எழுந்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான், கோயம்பேடு மார்க்கெட்டில், நள்ளிரவில் 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைகளில் பட்டாக்கத்தியுடன் வலம் வந்திருக்கிறார்கள்.. கல்லாப்பெட்டி: இவர்கள், பூட்டப்பட்டிருக்கும் அங்குள்ள கடைகளுக்குள் நுழைந்து, செல்போன் மற்றும் கல்லாவில் இருந்து பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்த கும்பல் கத்தியுடன் மார்க்கெட்டுக்குள் வலம்வருவதும், கடைகளின் கதவை உடைத்து திருடுவதும், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்துவிட்டு, வியாபாரிகள் அத்தனை பேரும் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. இரவு நேரங்களில் வழிப்பறி கும்பல் பட்டாக்கத்தியுடன் சுற்றிவருவதால் வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் ஒவ்வொருவராக புகார் தந்து வருகிறார்கள்.. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் பதிவான வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post