டங்ஸ்டன் சுரங்கம்.. மூலகாரணமே அதிமுக தான்! மாஸ்க் போட்டுக்கிட்டு வந்துட்டீங்க! சீறிய தங்கம் தென்னரசு

post-img
சென்னை: "டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம சுரங்கங்களை ஒன்றிய அரசே ஏலம் விடலாம் என்ற சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்தது அதிமுக. இதுதான் இந்த பிரச்சனையின் மூல காரணம். இன்றைக்கு அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் பிரச்சனையில் குளிர்காய நினைக்கிறீர்கள்" என அதிமுகவினரை பார்த்து சரமாரியாக விமர்சித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி சுற்று வட்டார பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வலியுறுத்தி முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்நிலையில் "டங்ஸ்டன் தடுப்போம் மேலூர் காப்போம்" என்ற வாசகம் பொறித்த மாஸ்க் அணிந்து சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சட்டப்பேரவையில் இன்று மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்ததே எல்லா பிரச்சனைக்கும் காரணம். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மூல காரணமாக இருந்ததே அதிமுகதான். மதுரை அரிட்டாபட்டியில் ஒருபோதும் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. ஏலம் விட முயற்சித்தபோது அப்போதே எதிர்த்தது திமுக அரசு. எதிர்ப்பை மீறித்தான் டங்ஸ்டன் ஏல நடைமுறையை ஒன்றிய அரசு மேற்கொண்டது. மத்திய அரசு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஏலம் கொடுத்தபோதும் திமுக அரசு தொடர்ந்து எதிர்த்தது. தான் முதல்வராக உள்ளவரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என நெஞ்சுரத்தோடு அறிவித்தவர் முதல்வர் ஸ்டாலின். ஒன்றிய அரசு ஏலம் விட்டதை அடுத்துதான் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். நாங்கள் டங்ஸ்டன் சுரங்கத்தை தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த பிரச்சனையின் நதிமூலம், ரிஷிமூலம் யார்? இந்த பிரச்சனையின் மூல காரணம் யார்? என தெரிவிக்க வேண்டியது எனது கடமை. டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மாநில அரசு விடவேண்டும் என்பதை மாற்ற மத்திய அரசு மசோதா கொண்டு வந்தபோது, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆதரித்துப் பேசினார். கனிம வள விதிகள் சட்டத்திருத்த மசோதவை மாநிலங்களவையில் ஆதரித்தது அதிமுகதான். மாநிலங்களவையில் சுரங்க சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததை அதிமுக மறுக்க முடியாது. அன்றைக்கு மாநில உரிமைகளை அபகரித்ததை அதிமுக ஆதரித்ததன் விளைவு தான் இன்றைக்கு டங்ஸ்டன் சுரங்க ஏலமாக வந்திருக்கிறது. டங்ஸ்டன் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட அதிமுக முயற்சி செய்து வருகிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுக குளிர்காய நினைக்கிறது. நான் மீண்டும் திட்டவட்டமாக நாட்டு மக்களுக்கும், போராடும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இந்த திட்டத்துக்கு ஒருபோதும் அனுமதி வழங்காது. நம் முதல்வர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணைக் கூட அரிட்டாபட்டியில் இருந்து எடுக்க முடியாது. இன்றைக்கு நீங்கள் முகக் கவசம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்களே.. அது நீங்கள் செய்த தவறை மறைப்பதற்காக, உங்கள் முகங்களில் அணிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள்" எனப் பேசியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post